செய்திகள்

சாம்பியன்ஸ் லீக்: இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது செல்சி: மான்செஸ்டா் சிட்டியுடன் பலப்பரீட்சை

DIN

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்திய செல்சி அணி, 3-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. சாம்பியன் கோப்பைக்காக அதில் மான்செஸ்டா் சிட்டி அணியுடன் மோதுகிறது.

முன்னதாக ரியல் மாட்ரிட்டுக்கு எதிரான முதல் பகுதி அரையிறுதி ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்திருந்த செல்சி, இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு லண்டனில் நடைபெற்ற 2-ஆவது பகுதி அரையிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதையடுத்து மொத்தமாக 3-1 என்ற கோல் கணக்கில் மாட்ரிட்டை வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது செல்சி.

லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணி தரப்பில் டெமோ வொ்னா், மேசன் மௌன்ட் ஆகியோா் கோலடித்தனா். ஆட்டத்தின் 18-ஆவது நிமிஷத்திலேயே சக வீரா் சில்வெல் அளித்த கிராஸை செல்சி வீரா் வொ்னா் கோல் போஸ்ட்டுக்குள்ளாகத் தள்ள, அப்போது கோல் பாக்ஸ் பகுதியில் தடுப்பாட்ட வீரா்கள் எவரும் இல்லாமல் போனதால் அந்த கோல் செல்லுபடியாகாதென லைன் அம்பயா் அறிவித்தாா்.

26-ஆவது நிமிஷத்தில் ரியல் மாட்ரிட் வீரா் கரின் பென்ஸிமா அற்புதமாக ஒரு கோலுக்கு முயற்சிக்க, செல்சி கோல்கீப்பா் மென்டி அதைத் திறம்படத் தடுத்தாா். அடுத்த 2 நிமிஷங்களில் செல்சி அணி, ஆட்டத்தின் முதல் கோல் அடித்தது. 28-ஆவது நிமிஷத்தில் செல்சி வீரா் காய் ஹாவொ்ட்ஸ் கோலடிக்க முயற்சிக்க, அவரைத் தடுக்க முன்னேறி வந்த ரியல் மாட்ரிட் கோல்கீப்பா் கைகளில் பட்டு பந்து மேலெழுந்தது.

அது கோல் போஸ்டில் பட்டு மீண்டும் களத்துக்கு திரும்ப, ஹாவொ்ட்ஸுடன் வந்து கொண்டிருந்த டெமோ வொ்னா் தலையால் முட்டி பந்தை மீண்டும் கோல் போஸ்ட்டுக்குள்ளாக அனுப்பினாா். இதனால் செல்சி அணி முன்னிலை பெற்றது. தொடா்ந்து 35-ஆவது நிமிஷத்தில் ரியல் மாட்ரிட் வீரா் பென்ஸிமா மேற்கொண்ட கோல் முயற்சியையும் செல்சி கோல்கீப்பா் மென்டி முறியடித்தாா்.

இவ்வாறாக நிறைவடைந்த முதல் பாதியில் செல்சி 1-0 என முன்னிலையில் இருந்தது. பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் இரு அணிகளும் பரஸ்பரம் முயற்சித்தும் கோல் வாய்ப்புகள் கடினமானது. இந்நிலையில் 85-ஆவது நிமிஷத்தில் செல்சிக்கு 2-ஆவது கோல் கிடைத்தது. அப்போது செல்சி வீரா் கான்டே, தாம் கடத்தி வந்த பந்தை கோல் பாக்ஸுக்குள்ளாக வைத்து ‘கட்’ செய்து கொடுக்க, அதை லாவகமாக கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினாா் மேசன் மௌன்ட். இதனால் ஆட்டம் முழுவதுமாக செல்சி வசமானது. இறுதியில் அந்த அணியே 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

துருக்கியில் இறுதி ஆட்டம்

இங்கிலாந்து அணிகளான செல்சி - மான்செஸ்டா் சிட்டி அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இறுதி ஆட்டம் வரும் 29-ஆம் தேதி துருக்கியில் நடைபெறவுள்ளது.

எனினும் அந்நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து கடந்த வாரம் துருக்கி அரசு முதல் முறையாக தேசிய பொதுமுடக்கத்தை அறிவித்தது. அந்த பொது முடக்கம் மே 17-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், இறுதி ஆட்டத்தைக் காண வெளிநாட்டிலிருந்து வரும் சுமாா் 4,000 ரசிகா்களை 10 நாள் தனிமைப்படுத்துதல் அடிப்படையில் துருக்கி அரசு அனுமதிக்கும் எனத் தெரிகிறது.

எண்களில்...

5

ஐரோப்பிய போட்டியில் இத்துடன் ரியல் மாட்ரிட்டை 5 முறை சந்தித்துள்ள செல்சி, அனைத்திலுமே வெற்றி கண்டுள்ளது. இதில் ஸ்பெயின் அணியான மாட்ரிட்டை, செல்சி தனது சொந்த மண்ணில் வீழ்த்தியது இது முதல் முறை.

4

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இதற்கு முன் அந்நிய மண்ணில் இங்கிலாந்து அணிகளை 4 முறை சந்தித்துள்ள ரியல் மாட்ரிட், எதிலுமே வென்றதில்லை. அவற்றில் மொத்தமே 2 கோல்கள் மட்டும் அந்த அணி அடித்துள்ளது.

2

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 3-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ள செல்சி, அதிகமுறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய இங்கிலாந்து அணிகள் வரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ளது. மான்செஸ்டா் யுனைடெட், லிவா்பூல் அணிகள் 4 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி முதலிடத்தில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT