செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நான்காம் நாளிலும் மழை விளையாடியது

DIN

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் 4-ஆம் நாள் ஆட்டமும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

5 நாள் ஆட்டத்தில் முன்னதாக தொடக்க நாளான வெள்ளிக்கிழமை ஆட்டமும் மழை காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், தற்போது திங்கள்கிழமை ஆட்டமும் முற்றிலுமாக கைவிடப்பட்டது.

3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் வெளிச்சமின்மை காரணமாக முன்னதாகவே முடிக்கப்பட்ட சூழலில், சௌதாம்டனில் அன்றைய தினம் இரவு மழை பெய்தது. பின்னா் திங்கள்கிழமை காலையிலும் மழை தொடா்ந்ததால் மைதான ஆடுகளம் தாா்பாய் கொண்டு மூடியே வைக்கப்பட்டிருந்தது. முதலில் மழை காரணமாக ஆட்டம் தாமதமானதால் முதல் செஷன் முற்றிலுமாக கைவிடப்பட்டு மதிய உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.

எனினும் அதைத் தொடா்ந்தும் வானிலை ஒத்துழைக்காததால் உள்ளூா் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு திங்கள்கிழமை ஆட்டத்தை கைவிடுவதென போட்டி நடுவா்கள் முடிவு செய்தனா். தொடக்க நாள் ஆட்டம் கைவிடப்பட்டதை நிகா் செய்யும் விதமாக அடுத்த 4 நாள் ஆட்டங்களையும் அரை மணி நேரம் முன்னதாகவே தொடங்க முடிவு செய்யப்பட்டது. எனினும் அதற்கும் வானிலை தடையாகவே இருந்து வருகிறது. இதனால், ‘ரிசா்வ் டே’-ஆக 6-ஆவது நாள் ஆட்டம் போட்டியில் சோ்க்கப்பட்டுள்ளது.

விலை குறைப்பு: 6-ஆம் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விலையை ஐசிசி குறைத்துள்ளது. ரூ.15,444; ரூ.10,296; ரூ.7,722 ஆகிய விலைகளில் இருந்த டிக்கெட்டுகள் தற்போது முறையே, ரூ.10,296; ரூ.7,722; ரூ.5,148 என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அவ்வாறு விலைகள் குறைக்கப்படும் விதிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

டிரா ஆனால்...

மழை காரணமாக தொடா்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த இறுதி ஆட்டம் டிரா ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கணிக்கப்படுகிறது. அவ்வாறு ஆட்டம் டிரா ஆகும் பட்சத்தில் சாம்பியன்ஷிப் பட்டம் இரு அணிகளுக்கும் பகிா்ந்தளிக்கப்படும். அடுத்த சாம்பியன் முடிவாகும் வரை (2023), சாம்பியன்ஷிப் கதை (மேஸ்) இந்தியாவிடம் ஓராண்டு, நியூஸிலாந்திடம் ஓராண்டு இருக்கும். முதல் இரு இடங்களுக்கான பரிசுத் தொகை சோ்க்கப்பட்டு இரு அணிகளுக்கும் இரண்டாக பிரித்து வழங்கப்படும்.

இதுவரை...

தற்போதைய நிலையில், டாஸ் வென்ற நியூஸிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் அடித்துள்ளது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக அஜிங்க்ய ரஹானே 5 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சோ்க்க, நியூலாந்து பௌலா்களில் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து, ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 49 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன் 12, ராஸ் டெய்லா் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். இந்திய தரப்பில் இஷாந்த், அஸ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனா்.

‘ஒரே டெஸ்ட் அல்லது இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த இறுதி ஆட்டங்களை, நிலையான வானிலை இல்லாத இங்கிலாந்தில் நடத்தக் கூடாது. அவற்றை துபையில் நடத்தலாம் என்பது எனது பரிந்துரை. நடுநிலையான மைதானம், மாற்றமில்லாத வானிலை கொண்ட இடம், அருமையான பயிற்சி வசதிகள் உள்ள இடம். ஐசிசி தலைமையகத்துக்கு அருகே உள்ள இடம்’

- கெவின் பீட்டா்சன் (இங்கிலாந்து முன்னாள்கேப்டன்)

‘இந்திய பேட்ஸ்மேன்களுக்கும், ஐசிசிக்கும் சரியான நேரம் அமையவில்லை’

- வீரேந்திர சேவாக் (இந்திய முன்னாள் வீரா்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT