செய்திகள்

நடுவர் மீது இருமுறை வெளிப்பட்ட ஆத்திரம்: பிரபல வீரர் ஷகிப் அல் ஹசனா இப்படி நடந்துகொண்டார்? (விடியோ)

12th Jun 2021 11:58 AM

ADVERTISEMENT

 

நடுவர் மீது இருமுறை கோபம் கொண்டு மைதானத்தில் மோசமான முறையில் நடந்துகொண்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளார் பிரபல வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன். 

டிபிஎல் எனப்படும் டாக்கா பிரீமியர் லீக் போட்டியில் எம்எஸ்சி அணியின் கேப்டனாகச் செயல்பட்டார் பிரபல வீரரான ஷகிப் அல் ஹசன். அபாஹனி லிமிடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷகில் அல் ஹசன் பந்துவீசினார். பேட்ஸ்மேன் முஷ்ஃபிகுர் ரஹிமை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க கள நடுவரிடம் அப்பீல் செய்தார். ஆனால் அவுட் கொடுக்க நடுவர் மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட ஷகிப், உடனடியாக நடுவர் அருகே இருந்த ஸ்டம்புகளைக் காலால் எட்டி உதைத்து நடுவரிடம் இதுகுறித்து வாக்குவாதம் செய்யப்பட்டார். சமூகவலைத்தளங்களில் இந்த ஆட்டம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதால் இதைப் பார்த்த ரசிகர்கள், ஷகிப்பின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.

இதுபோதாதென்று இன்னொரு முறையும் தனது கோபத்தை இன்னும் தீவிரமாக வெளிப்படுத்தினார். மழை வந்ததால் ஆட்டத்தை நிறுத்தும்படி நடுவர்கள் உத்தரவிட்டார்கள். இதனால் ஓய்வறைக்குத் திரும்பினார் பேட்ஸ்மேன்கள். அப்போது ஷகிப்பின் அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அப்போதும் நடுவரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறுமுனையில் இருந்த மூன்று ஸ்டம்புகளையும் அலேக்காகப் பிடுங்கி வீசினார் ஷகிப் அல் ஹசன். பிறகு மீண்டும் நடுவரிடம் வாக்குவாதம் செய்தார்.

முழு ஆட்டம் ( முதல் சம்பவம் - 2:05:47, 2-ம் சம்பவம்: 2:11:30)

ADVERTISEMENT

இருமுறை கோபம் கொண்டு ஸ்டம்புகளை வீழ்த்திய ஷகிப் தொடர்பான விடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானதால் பலரும் ஷகிப்பின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார்கள். பலவருடங்களாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் இவர் பக்குவமின்றி இப்படி நடந்துகொள்ளலாமா எனக் கேள்வி எழுப்பினார்க்ள். இதையடுத்து மன்னிப்பு தெரிவித்து ஃபேஸ்புக்கில் பதிவு எழுதியுள்ளார் ஷகிப் அல் ஹசன். என்னுடைய கோபத்துக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். மூத்த வீரரான நான் அதுபோல நடந்துகொண்டிருக்கக் கூடாது. என் தவறுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்று மீண்டும் நடந்துகொள்ள மாட்டேன் என்றார். 

Tags : Shakib Al Hasan stumps DPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT