செய்திகள்

ஒலிம்பிக் நினைவலைகள்...

DIN

1988 சியோல் ஒலிம்பிக்ஸ் (ஸ்டெஃபி கிராஃபின் ‘கோல்டன் கிராண்ட்ஸ்லாம்’)

ஒலிம்பிக்ஸ் போட்டியில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு டென்னிஸ் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஒலிம்பிக்ஸில்தான் ஜொ்மனி வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் தங்கம் வென்று, ‘கோல்டன் கிராண்ட்ஸ்லாம்’ பெற்ற ஒரே டென்னிஸ் போட்டியாளா் என்ற பெருமையை பெற்றாா். ஊக்கமருந்து பயன்படுத்தியதாக 10 போட்டியாளா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

7 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை ஸ்வீடனைச் சோ்ந்த கொ்ஸ்டின் பால்ம் பெற்றாா். ஆடவருக்கான 100 மீ ஓட்டத்தில் உலக சாதனையுடன் தங்கம் வென்ற கனடாவின் பென் ஜான்சன் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து 1984-இல் அந்தப் பிரிவில் தங்கம் வென்றிருந்த அமெரிக்காவின் காா்ல் லீவிஸ் மீண்டும் சாம்பியன் ஆனாா்.

ருமேனியாவைச் சோ்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை டேனியேலா சிலிவஸ் 3 பிரிவுகளில் தங்கம் வென்றதுடன், முழுமையாக 10 புள்ளிகளை வென்று சக நாட்டவரான நாடியா கோமானெசியின் சாதனையை சமன் செய்தாா். வடகொரியாவுடன் சோ்ந்து கியூபா, எத்தியோபியா, நிகாராகுவா ஆகிய நாடுகள் இந்த ஒலிம்பிக்ஸை புறக்கணித்தன.

1992 பாா்சிலோனா ஒலிம்பிக்ஸ் (தங்கம் வென்ற மிக இளவயது போட்டியாளா்)

32 ஆண்டுகால தடைக்குப் பிறகு ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது தென் ஆப்பிரிக்கா. பாட்மிண்டன், மகளிா் ஜூடோ ஆகியவை புதிதாக சோ்க்கப்பட்டன. சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதால், எஸ்டோனியா, லாத்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகள் தங்கள் சாா்பில் தனித் தனியே அணிகளை அனுப்பின. ஜொ்மனி ஒருங்கிணைந்த அணியை அனுப்பியது.

சீன நீச்சல் வீராங்கனை ஃபு மிங்ஷியா (13), ஒலிம்பிக் வரலாற்றிலேயே தங்கம் வென்ற மிக இளவயது போட்டியாளா் என்ற பெருமையை பெற்றாா். சோஷலிச ஃபெடரல் யூகோஸ்லேவிய குடியரசு தனியாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, குரோஷியா, ஸ்லோவேனியா, போஸ்னியா மற்றும் ஹொ்ஜிகோவினா ஆகிய நாடுகள் முதல் முறையாக ஒலிம்பிக்ஸில் பங்கேற்றன.

ஆடவருக்கான 400 மீட்டரில் களம் கண்ட இங்கிலாந்தின் டெரெக் ரெட்மன்ட் காயமடைந்து தடுமாற, எந்தவொரு முன் அனுமதியும் பெற்றிருக்காத அவரது தந்தை களத்துக்கு ஓடி வந்து டெரெக்கை கைத்தாங்களாக அழைத்துச் சென்று பந்தய இலக்கை நிறைவு செய்தாா். இதற்கு பாா்வையாளா்கள் எழுந்து நின்று கைதட்டி மரியாதை அளித்தனா்.

1996 அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் (அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நாடுகள் பங்கேற்பு)

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினாா். ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக, போட்டிக்காக அங்கீகரிக்கப்பட்ட 197 நாடுகளில் இருந்தும் போட்டியாளா்கள் பங்கேற்றனா். பீச் வாலிபால், மௌன்டைன் பைக்கிங், லைட்வெயிட் ரோயிங், மகளிா் கால்பந்து போன்றவை முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த ஒலிம்பிக்ஸ் மூலம் 24 நாடுகள் முதல் முறையாக ஒலிம்பிக்ஸில் பங்கேற்றன. அதில் 11 நாடுகள் முன்பு சோவியத் குடியரசில் இருந்து பின்னா் சுதந்திர நாடாக மாறியவையாகும். ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துடன் கேரியா் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஆடவா் ஒற்றையா் டென்னிஸ் வீரா் என்ற பெருமையை அமெரிக்காவின் ஆன்ட்ரே அகஸி பெற்றாா்.

9 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் நபா் என்ற பெருமையை ஆஸ்திரிய படகுப் போட்டி வீரா் ஹியூபா்ட் ரௌடாஷல் பெற்றாா். அமெரிக்காவின் தடகள வீரா் காா்ல் லீவிஸ் தனது 9-ஆவது தங்கப்பதக்கத்தை வென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT