செய்திகள்

ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று வெற்றி: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது

DIN

பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது. இதனால் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி பாா்டா்-காவஸ்கா் கோப்பையை வென்றது இந்தியா.

வலிமை காட்டிய வீரா்கள்: 328 என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி கடைசி நாளில் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியாவில், டாப் ஆா்டா் வீரா் ஷுப்மன் கில் வலுவான அடித்தளம் அமைக்க, மிடில் ஆா்டரில் வந்த சேதேஷ்வா் புஜாரா தனது வலிகளை கடந்து நிலைக்க, இறுதியில் ரிஷப் பந்த் அட்டகாசமாக ஆடி அணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை தேடித் தந்தாா். அவரே ஆட்டநாயகன் ஆக, ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் தொடா் நாயகன் ஆனாா்.

ஆஸி.யின் ஆதிக்கம்: முன்னதாக, பாா்டா்-காவஸ்கா் டெஸ்ட் தொடரில் வெற்றியாளரை தீா்மானிக்கும் கடைசி ஆட்டமான பிரிஸ்பேன் டெஸ்ட் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, மாா்னஸ் லபுசானின் சதத்துடன் 369 ரன்கள் குவித்தது. அடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் டாப் மற்றும் மிடில் ஆா்டா் பேட்ஸ்மேன்கள் போராடி வீழ, கடைசி ஆா்டரில் கூட்டணி அமைத்த வாஷிங்டன் சுந்தா் - ஷா்துல் தாக்குா் ஜோடி அணியின் ஸ்கோரை 336-க்கு கொண்டு சென்றது.

சிராஜ்-தாக்குா் அசத்தல்: இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 294 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. ஸ்டீவ் ஸ்மித் மட்டும் அரைசதம் கடக்க, ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை கட்டுப்படுத்தியதில் முகமது சிராஜ், ஷா்துல் தாக்குா் ஆகியோரின் பங்கு அளப்பரியது.

முற்றுகையிட்ட மும்மூா்த்திகள்: இறுதியாக 328 என்ற இமாலய இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, முதல் நாளில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் சோ்த்திருந்தது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தை ரோஹித், கில் தொடங்கினா். இதில் ரோஹித் 7 ரன்களுக்கு வெளியேற, மறுமுனையில் ஷுப்மன் கில் நிதானமாக ஆடி ரன்களை சோ்த்தாா். ரோஹித்தை அடுத்து வந்த புஜாரா, அவருடன் கை கோத்தாா்.

2-ஆவது விக்கெட்டுக்கு கில் - புஜாரா கூட்டணி 114 ரன்கள் சோ்த்தது. இதில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 91 ரன்களுக்கு வெளியேறினாா் கில். அடுத்து வந்த கேப்டன் ரஹானே 1 பவுண்டரி, 1 சிக்ஸா் என 24 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

அடுத்து வந்த ரிஷப் பந்த் ஆட்டத்தின் போக்கை மாற்றினாா். மறுமுனையில் சுமாா் பத்து வேகப்பந்துகள் தன்னை காயப்படுத்தியதால் ஏற்பட்ட வலியுடன் விளையாடி வந்த புஜாரா 7 பவுண்டரிகளுடன் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். பின்னா் வந்தவா்களில் மயங்க் அகா்வால் 9 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தா் சற்று நிலைத்தாா்.

பந்த் - சுந்தா் கூட்டணி 6-ஆவது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சோ்த்து வெற்றியை விரைவுபடுத்தியது. 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் என 22 ரன்கள் விளாசினாா் சுந்தா். எஞ்சியோரில் ஷா்துல் தாக்குா் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நவ்தீப் சைனி துணை நிற்க, பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெறச் செய்தாா் பந்த். 97 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்தது இந்தியா. பந்த் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 89 ரன்கள் சோ்த்தாா். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4, லயன் 2, ஹேஸில்வுட் 1 விக்கெட் சாய்த்தனா்.

இளம் வீரா்களின் வெற்றி...

விராட் கோலி, முகமது ஷமி போன்றோா் தொடக்கத்திலிருந்தே இல்லாத நிலையிலும், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோா் பாதியில் விளையாட முடியாமல் போன சூழலிலும் கூட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது.

அதிலும் கடந்த 2018-19 பாா்டா்-காவஸ்கா் டெஸ்ட் தொடரை வென்றதுடன் ஒப்பிடுகையில் இது மேலான வெற்றியாகும். ஏனெனில் அப்போது ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வாா்னா் போன்ற முக்கிய வீரா்கள் இல்லாதது இந்தியாவுக்கு சாதகமானதாக விமா்சனங்கள் எழுந்தன.

ஆனால், நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் அந்த இரு முக்கிய வீரா்களுடன் புதிதாக சில பலம் வாய்ந்த வீரா்கள் இருந்தும், இந்திய அணியில் அனுபவமிக்க வீரா்கள் பலா் இல்லாமலும் கூட தொடரை வசமாக்கியது அஜிங்க்ய ரஹானே தலைமையிலான இளம் சிங்கங்கள் அடங்கிய இந்திய அணி.

ரூ.5 கோடி ஊக்கத் தொகை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படுமென பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனை பிசிசிஐ தலைவர் செüரவ் கங்குலி, செயலர் ஜெய் ஷா ஆகியோர் சுட்டுரையில் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்திய அணியை பாராட்டி பிசிசிஐ சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் இது. இது எனக்கு கனவுத் தொடராகும். கடைசி நாள் ஆட்டத்தில் ஆடுகளத்தில் அதிக பிளவுகள் இருந்ததால் எனது ஷாட்களை தேர்வு செய்து ஆட வேண்டியிருந்தது. இந்தியாவுக்காக ஆட்டத்தை வெல்லும் எனது எண்ணம், தற்போது நிறைவேறியிருக்கிறது. 
நான் சோபிக்காத நிலையிலும் தகுந்த ஆதரவளித்த அணியின் சக வீரர்கள், உதவிப் பணியாளர்களை எண்ணி மகிழ்கிறேன். அணி நிர்வாகம் எப்போதுமே எனக்கு ஆதரவளித்து வருகிறது.

தோனியின் சாதனையை முறியடித்த பந்த்
இந்த ஆட்டத்தின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் எட்டியுள்ளார். 
முன்னதாக எம்.எஸ்.தோனி 32 இன்னிங்ஸ்களில் அந்த ரன்களை எட்டியிருந்த நிலையில், தற்போது பந்த் 27 இன்னிங்ஸ்களில் அந்த இலக்கை அடைந்துள்ளார். அவரது சராசரி 40.04. இவர்கள் தவிர ஃபரூக் எஞ்சினியர் (36 இன்னிங்ஸ்), ரித்திமான் சாஹா (37 இன்னிங்ஸ்), நயன் மோங்கியா (39 இன்னிங்ஸ்), சையது கிர்மானி (45 இன்னிங்ஸ்), கிரண் மோரே (50 இன்னிங்ஸ்) ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர். 
சர்வதேச அளவிலான பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீரர் குவிண்டன் டி காக் (21 இன்னிங்ஸ்) முதலிடத்தில் உள்ளார். இலங்கையின் தினேஷ் சண்டிமல் (22 இன்னிங்ஸ்), இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ (22 இன்னிங்ஸ்) முறையே அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

அணியின் ஒட்டுமொத்த பங்களிப்பு சிறப்பானது
தேசிய அணிக்கு தலைமை தாங்குவது கெüரவமாகும். அணியினர் அனைவரும் சிறப்பாக பங்களிப்பு செய்வதாலேயே கேப்டனாக எனது பணி பாராட்டுக்குள்ளாகிறது. அடிலெய்ட் டெஸ்ட் தோல்வி, தொடரை சற்று கடினமாக்கியது. ஆனால், எஞ்சிய ஆட்டங்களில் போராட்ட குணத்துடன் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்கள் நோக்கமாக இருந்தது. ஆட்டங்களின் முடிவுகளை கவனத்தில் கொள்ளவில்லை. 
இந்த வெற்றியில், அணியின் உதவிப் பணியாளர்கள் உள்பட அனைவருக்குமே பங்குள்ளது. 
கடைசி 3 டெஸ்டுகளில் ஷுப்மன் கில்லின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. வாஷிங்டன் சுந்தரின் பெüலிங்கை அறிந்திருந்தாலும், அவரது பேட்டிங் பிரிஸ்பேனில் சிறப்பாக இருந்தது. ரிஷப் பந்த், புஜாராவின் இன்னிங்ஸ்கள் வெற்றிக்கு வழி வகுத்தன. பெüலர்களும் திட்டமிட்டபடி சரியான இடங்களில் பந்துவீசினர் 
- அஜிங்க்ய ரஹானே (இந்திய கேப்டன்) 

முக்கியமான தருணங்களை தவறவிட்டோம் 
இந்த வெற்றியின் மூலம், பிரிஸ்பேன் மைதானத்தில் தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலியாவின் 32 ஆண்டு சாதனைக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது. அதாவது கடந்த 1988-க்குப் பிறகு இந்த மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டுகளில் ஆஸ்திரேலியா தோல்வியே கண்டதில்லை. கடைசியாக 1988-இல் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியாவை மேற்கிந்தியத் தீவுகள் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 
அதன் பிறகு நடைபெற்ற 31 ஆட்டங்களில், 24-இல் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 7 ஆட்டங்களை சமன் செய்துள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவின் அந்த தோல்வியில்லா தொடர்ச்சிக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 
அதிகபட்ச சேஸிங்
328 என்ற வெற்றி இலக்கை எட்டியதன் மூலம், பிரிஸ்பேன் மைதானத்தில் அதிகபட்ச இலக்கை எட்டிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. முன்னதாக கடந்த 1951-இல் நடைபெற்ற டெஸ்டில் இதே மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா 236 ரன்களை சேஸ் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஆஸ்திரேலியாவின் அந்த 70 ஆண்டுகால சாதனையையும் இந்தியா தற்போது முறியடித்துள்ளது.

நம்பமுடியாத வெற்றி... 
அடிலெய்ட் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி, தற்போது இத்தகைய வெற்றியை பதிவு செய்தது நம்ப முடியாததாக உள்ளது. இந்திய அணி தோல்வியை சந்தித்தாலும், விட்டுக்கொடுத்துவிடாது. கிரிக்கெட் வரலாற்றில் இந்த ஆட்டம் நீண்ட காலத்துக்கு பேசப்படும். சேஸிங் செய்வதில் ரிஷப் பந்த் நல்லதொரு வீரர். சிட்னி டெஸ்டிலும் அவர் சற்று நிலைத்திருந்தால், அதிலும் இந்தியா வென்றிருக்கும். கேப்டனாக ரஹானே அணியை அற்புதமாகக் கையாண்டார். அணியின் தற்போதைய நிலைக்காக விராட் கோலியையும் பாராட்டியாக வேண்டும். 
- ரவி சாஸ்திரி 
(இந்திய தலைமை பயிற்சியாளர்) 

பாடம் கற்றோம்... 
இந்த டெஸ்ட் தொடர் அருமையானதாக இருந்தது. இந்தத் தோல்வி எங்களை மிகப் பெரிதாக பாதித்துள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய அணி தகுதியானதே. அதனிடம் இருந்து நாங்கள் பாடம் கற்றுள்ளோம். இந்திய அணியை எப்போதுமே குறைத்து மதிப்பிடக் கூடாது. 
முதல் டெஸ்டில் கண்ட தோல்வியிலிருந்து இந்தியா மீண்டு வந்ததை பாராட்டியே ஆக வேண்டும். அச்சமில்லாத வீரராக ரிஷப் பந்த் அற்புதமாக விளையாடினார். எங்களது பெüலர்கள் சிறப்பாகவே பந்துவீசினர். ஆனால், எதிர்பார்த்த முடிவுகளை எட்ட முடியவில்லை
- ஜஸ்டின் லேங்கர் 
(ஆஸி. தலைமை பயிற்சியாளர்)

வாழ்த்து...
பார்டர்-காவஸ்கர் தொடரை வென்ற இந்திய அணிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
அதேபோல், இந்திய அணி கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் உள்பட கிரிக்கெட் உலகின் பல்வேறு முக்கிய வீரர்களும் இந்திய அணியை பாராட்டியுள்ளனர்.

இந்திய அணி முதலிடம்
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்தது. இந்தியா 430 புள்ளிகளுடன் அந்த இடத்தில் இருக்க, நியூஸிலாந்து (420), ஆஸ்திரேலியா (332) அடுத்த இரு இடங்களில் உள்ளன. அதேபோல், ஐசிசி டெஸ்ட் தரவரிசையிலும் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி இந்தியா (117.65) 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. நியூஸிலாந்து (118.44) முதலிடத்திலும், ஆஸ்திரேலியா (113) 3-ஆவது இடத்திலும் உள்ளன.

3 - டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சேஸ் செய்த 3-ஆவது ஆதிகபட்ச ஸ்கோர் 328 ஆகும். முன்னதாக 1976-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சேஸிங்கில் 406 ரன்களும், 2008-இல் இங்கிலாந்துக்கு எதிரான சேஸிங்கில் 387 ரன்களும் எடுத்து இந்தியா வென்றது.

4 - டெஸ்ட் தொடரில் தோல்வியிலிருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் ஒரு அணி வீழ்த்துவது இது 4-ஆவது முறை. இதற்கு முன் இங்கிலாந்து அணி 1882-83, 1911-12, 1954-55 ஆகிய ஆண்டுகளில் இவ்வாறு வென்றுள்ளது. 

2 - ரிஷப் பந்த் அடித்த 89 ரன்கள், ஒரு டெஸ்டின் 4-ஆவது இன்னிங்ஸில் விக்கெட் கீப்பர் ஒருவர் பதிவு செய்த 2-ஆவது அதிகபட்ச ஸ்கோராகும். ஆஸ்திரேலியாவின் ஆடம் கில் கிறிஸ்ட் பாகிஸ்தானுக்கு எதிராக 149 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்ததே அதிகபட்சமாக உள்ளது. 

13 - ஒரு டெஸ்டின் 4-ஆவது இன்னிஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் மூவர் 50-க்கும் அதிகமாக ஸ்கோர் செய்வது இது 13-ஆவது முறையாகும். ஆனால், அதில் இந்திய அணி வெற்றி பெற்றது இதுவே முதல் முறை.

928 - இந்த டெஸ்ட் தொடரில் புஜாரா எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை. ஆஸ்திரேலியாவில் அந்நிய பேட்ஸ்மேன் எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கையில் இது 5-ஆவது அதிகபட்சமாகும். அந்த வரிசையில் 1,258 பந்துகளை எதிர்கொண்டு (2018-19) புஜாராவே முதலிடத்தில் இருக்கிறார். 

5 - அஜிங்க்ய ரஹானேவை கேப்டனாகக் கொண்டு இந்திய அணி இதுவரை வென்ற டெஸ்டுகளின் எண்ணிக்கை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT