செய்திகள்

ஆஸ்திரேலிய அணியின் வரலாற்றுச் சாதனைகளைத் தொடர்ந்து தகர்த்து வரும் இந்திய அணி!

DIN

டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலிய அணியின் வரலாற்றுச் சாதனைகளைத் தவிடுபொடியாக்குவதை வழக்கமாகவே வைத்துள்ளது இந்திய அணி.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. பிரிஸ்பேன் டெஸ்டுக்கு முன்பு டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் இருந்தது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்து பிரிஸ்பேன் டெஸ்டை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரிஷப் பந்த் நம்பமுடியாத விதத்தில் இலக்கை விரட்டி 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. 

முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமாகத் தோற்றது இந்திய அணி. அதன்பிறகு மெல்போர்ன் டெஸ்டை வென்றது. சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டைக் கடுமையாகப் போராடி டிரா செய்தது. தற்போது கடினமான இலக்கை 5-ம் நாளில் விரட்டி பிரிஸ்பேன் டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியுள்ளது.

3-வது டெஸ்டில் அஸ்வின் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவரை வம்புக்கு இழுத்த ஆஸி. கேப்டன் டிம் பெயின், காபாவுக்கு (பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம்) வந்து பார் என்பது போல சவால் விடுத்தார். அதற்குக் காரணம் உள்ளது.

இந்த டெஸ்டுக்கு முன்பு பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக 1988-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தோற்றது. அதன்பிறகு பிரிஸ்பேனில் விளையாடிய 31 டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலிய அணி தோற்றதில்லை. இதற்கு முன்பு அங்கு விளையாடிய 55 டெஸ்டுகளில் 8-ல் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.

அதேபோல இந்திய அணி இதற்கு முன்பு, பிரிஸ்பேனில் 6 டெஸ்டுகளில் விளையாடி ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. 5 டெஸ்டில் தோல்வியடைந்தது. 

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணி (2021-க்கு முன்பு)

விளையாடியது: 55 டெஸ்டுகள்
வெற்றிகள்: 33
தோல்விகள்: 8
தொடர்ச்சியாக தோற்காத டெஸ்டுகளின் எண்ணிக்கை: 31 டெஸ்டுகள் (24 வெற்றிகள், 7 டிராக்கள்)
கடைசியாக டிரா ஆனது: 2012-ல் தென் ஆப்பிரிக்காவுடன்
கடைசியாக ஆஸ்திரேலியா தோற்றது: மேற்கிந்தியத் தீவுகளுடன், 1988-ல்
பிரிஸ்பேனில் இந்திய அணி: 6 டெஸ்டுகள், 5 தோல்விகள், 1 டிரா 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக இருந்த பிரிஸ்பேனில் 32 வருடங்களாக தோல்வியைச் சந்திக்காத பிரிஸ்பேன் ஆடுகளத்தில், பரபரப்பான முறையில் கடினமான இலக்கை விரட்டி டெஸ்டை வென்றதோடு டெஸ்ட் தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

இவர்களுக்கு இதுவே வழக்கமாகி விட்டது என்று ஆஸி. வீரர்களும் ரசிகர்களும் நொந்துகொள்ளும் அளவுக்கு தொடர்ந்து நெருக்கடி தந்து ஆஸி. அணியின் சாதனைகளைத் தகர்த்துள்ளது இந்திய அணி.

2001 கொல்கத்தா டெஸ்டில், அதுவரை தொடர்ச்சியாக 16 டெஸ்டுகளை வென்ற ஆஸி. அணியிடம் முதலில் ஃபாலோ ஆன் ஆனது இந்திய அணி. பிறகு அமர்க்களமாக வெகுண்டெழுந்து சாதனை வெற்றியை அடைந்தது கங்குலி தலைமையிலான இந்திய அணி.

அதேபோல 2008-லும் ஆஸ்திரேலிய அணியின்  தொடர்ச்சியாக 16 டெஸ்ட் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி. 16 வெற்றிகளுடன் பெர்த்துக்கு வந்த ஆஸி. அணியைத் தோற்கடித்தது கும்ப்ளே படை. 

அதேபோல தற்போது பிரிஸ்பேனில் ஆஸி. அணியின் ஆதிக்கத்தை இந்திய அணி முறியடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT