செய்திகள்

ஸ்டார்க் வீசிய பந்து கண்ணுக்கே தெரியவில்லை: நடராஜன் கலகலப்பு (விடியோ)

17th Jan 2021 08:50 PM

ADVERTISEMENT


ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் பந்து கண்ணுக்கே தெரியவில்லை என வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்குரின் சிறப்பான பாட்னர்ஷிப்பால் 336 ரன்கள் எடுத்தது.

வாஷிங்டன் மற்றும் ஷர்துல் அரைசதம் அடிக்க இந்த இணை 7-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இதையடுத்து, 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில், சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்த வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் மற்றும் நடராஜன் ஆகியோரை ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி எடுத்தார்.

அப்போது ஸ்டார்க்கை சௌகரியமாக எதிர்கொண்ட ஒரே வீரர் நடராஜன் எனக் கூறி அதுபற்றி நடராஜனிடம் கேள்வி எழுப்பினார் அஸ்வின். இதற்கு சிரிப்புடன் பதிலளித்த நடராஜன், "நான் சௌகரியமாக எதிர்கொண்டேனா? முதல் பந்து கண்ணுக்கே தெரியவில்லை" என்றார்.

வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜனுக்கு இது முதல் டெஸ்ட் ஆட்டம். ஷர்துல் தாக்குருக்கு இது 2-வது டெஸ்ட் ஆட்டம். அறிமுக ஆட்டத்திலேயே வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். ஷர்துல் தாக்குரும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் பேட்டிங்கில் வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும், ஷர்துல் தாக்குர் 67 ரன்களும் எடுத்தனர்.

Tags : Natarajan
ADVERTISEMENT
ADVERTISEMENT