செய்திகள்

சுழலில் சுருண்டது இங்கிலாந்து

DIN

ஆமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு சுருண்டது. 
அபாரமாக பந்துவீசிய அக்ஸர் படேல் 6 விக்கெட்டுகள் சாய்க்க, அஸ்வினும் தனது பங்குக்கு 3 விக்கெட் வீழ்த்தினார். தடுமாற்றமாக விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி மட்டும் சற்று நிலைத்து ரன்கள் சேர்த்தார். எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் சரிந்தன. 
மாற்றம்: பிளேயிங் லெவனைப் பொருத்தவரை இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. முகமது சிராஜுக்குப் பதிலாக ஜஸ்பிரீத் பும்ராவும், குல்தீப் யாதவுக்குப் பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டிருந்தனர். இங்கிலாந்து அணியில், மொயீன் அலி, ரோரி பர்ன்ஸ், டேனியல் லாரன்ஸ், ஆலி ஸ்டோன் ஆகியோருக்குப் பதிலாக ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜாக் கிராவ்லி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ இணைந்துள்ளனர். 
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஜாக் கிராவ்லி - டாம் சிப்லே முதல் இன்னிங்ûஸ தொடங்கினர். டாûஸ இங்கிலாந்து வென்றிருந்தாலும், ஆரம்பம் முதலே ஆட்டம் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் கைக்குச் சென்றது. 
முதல் விக்கெட் இஷாந்த் சர்மாவால் எடுக்கப்பட்டாலும், அடுத்தடுத்த விக்கெட்டுகள் அக்ஸர் படேல், அஸ்வின் கைகளில் வீழ்ந்தன. 30 ரன்களுக்குள் சிப்லி, பேர்ஸ்டோ விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. விக்கெட் சரிவைத் தடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட்டை, 22-ஆவது ஓவரில் அஸ்வின் வெளியேற்றினார். 
பின்னர் பென் ஸ்டோக்ஸ் களத்துக்கு வர, மறுமுனையில் தொடக்கம் முதல் நிலைத்து வந்த கிராவ்லி 10 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் சேர்த்த நிலையில் அக்ஸர் படேலால் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். அப்போது தேநீர் இடைவேளை விடப்பட, 4 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. 
பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் களம் புகுந்த ஆலி போப் 1 ரன் எடுத்த நிலையில் அஸ்வினால் வெளியேற்றப்பட்டார். கடைசி ஆர்டரில் பென் ஃபோக்ஸ், ஆர்ச்சர் மட்டும் சில ரன்கள் சேர்க்க, மளமளவென விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. உணவு இடைவேளைக்குள்ளாகவே 48.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு சுருண்டது அந்த அணி.
இந்தியா-99/3: இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய இந்தியா, புதன்கிழமை முடிவில் 33 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் அடித்துள்ளது. அரைசதம் கடந்த ரோஹித் 57 ரன்களுடனும், அஜிங்க்ய ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ரோஹித்தின் 12-ஆவது அரைசதம் ஆகும். 
முன்னதாக ரோஹித் சர்மாவுடன் வந்த ஷுப்மன் கில் 2 பவுண்டரிகளுடன் 11, விராட் கோலி 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். சேதேஷ்வர் புஜாரா டக் அவுட்டானார். முன்னதாக கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் அளித்த கேட்ச்களை ஆலி போப் தவறவிட்டார். ரோஹித், கோலி விக்கெட்டுகளுக்காக இங்கிலாந்து அணியினர் மிகவும் போராடி வந்த நிலையில் அவர் கேட்ச்சை விட்டது அணியினரை அதிருப்தி அடையச் செய்தது.

அக்ஸர் அபாரம், அஸ்வின்அசத்தல்

2-ஆவது "ஃபைஃபர்'

டெஸ்ட் கிரிக்கெட்டில் அக்ஸர் படேலுக்கு இது 2-ஆவது ஆட்டமாகும். இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் மூலம் சர்வதேச டெஸ்டில் அறிமுகமான அக்ஸர் படேல், அதிலேயே அபாரமாக  பந்துவீசி ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் (ஃபைஃபர்) சாய்த்திருந்தார். தற்போது இந்த பகலிரவு டெஸ்டிலும் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

ஸ்டோக்ஸூக்கு எச்சரிக்கை

கரோனா சூழல் காரணமாக உமிழ்நீரை பயன்படுத்தி பந்தை வழவழப்பாக்குவதற்கு ஐசிசி தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்தியா இன்னிங்ஸின்போது 12-ஆவது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் உமிழ்நீரைக் கொண்டு பந்தை வழவழப்பாக்குவதை கள நடுவர் நிதின் மேனன் கண்டார். இதையடுத்து ஸ்டோக்ûஸ அழைத்து விதிமுறைகளை கூறி அவரை எச்சரித்தார். மேலும் பந்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தார். 
ஐசிசி விதிகளின்படி, பந்தில் உமிழ்நீரை பயன்படுத்தாமல் இருக்க ஒரு அணியை ஒரு இன்னிங்ஸில் இரு முறை எச்சரிக்கை செய்யலாம். அதையும் மீறி பெளலிங் வீசும் அணி அவ்வாறு செய்தால், பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்படும்.

2-ஆம் இடம்

பகலிரவு டெஸ்டில் அபாரமாக பந்துவீசிய ஸ்பின்னர்கள் வரிசையில் அக்ஸர் படேல் 2-ஆவது இடத்தில் உள்ளார். 2016-17-இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 49 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகள் சாய்த்த மேற்கிந்தியத் தீவுகள் வீரர் தேவேந்திர பிஷு முதலிடத்தில் உள்ளார். ஆமதாபாத் ஆட்டத்தில் 38 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்த அக்ஸர் படேல் 2-ஆவது இடத்திலும், 2017-18-இல் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 184 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்த பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.

4-ஆவது குறைந்தபட்சம்

இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அடித்துள்ள ஸ்கோர் (112), இந்தியாவுக்கு எதிரான டெஸ்டுகளில் அந்த அணி பதிவு செய்துள்ள 4-ஆவது குறைந்தபட்ச ஸ்கோராகும். கடந்த 1971-இல் ஓவலில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 101 ரன்கள் அடித்ததே மிகக் குறைந்தபட்சம். அதைத் தொடர்ந்து 1979-80-இல் மும்பையில் நடைபெற்ற டெஸ்டில் 102 ரன்களும், 1986-இல் லீட்ஸில் நடைபெற்ற டெஸ்டில் 102 ரன்களும் இந்தியாவுக்கு எதிராக எடுத்திருந்தது இங்கிலாந்து. 
இது தவிர, இங்கிலாந்து 200-க்கும் குறைவான ரன்களை ஒரு இன்னிங்ஸில் பதிவு செய்வது இது தொடர்ந்து 4-ஆவது முறையாகும்.

இஷாந்த் "100'

இந்த ஆட்டம் இஷாந்த் சர்மாவுக்கு 100-ஆவது டெஸ்டாகும். எனவே அவரை கெளரவிக்கும் விதமாக ஆட்டம் தொடங்கும் முன்பாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நினைவுக் கேடயம் ஒன்றை இஷாந்துக்கு வழங்கினார். அதேபோல், மத்திய அமைச்சர் அமித் ஷா 100-ஆவது டெஸ்டுக்கான தொப்பி ஒன்றை இஷாந்துக்கு அன்பளிப்பாக வழங்கினார். 

ஆட்டத்தின் தொடக்கத்தில் இஷாந்த் மைதானத்துக்குள் வரும்போது இந்திய அணியினர் இரு புறமும் வரிசையாக நின்று கைதட்டி அவரை வரவேற்றனர். ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, முதல் விக்கெட்டாக டாம் சிப்லியை 3-ஆவது ஓவரில் வீழ்த்தி அசத்தினார்.  இந்த ஆட்டத்தின் மூலம், 100 டெஸ்ட்களில் விளையாடிய 11-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இஷாந்த். அதிலேயே பெளலர்கள் வரிசையில் 4-ஆவது வீரராகவும், வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் 2-ஆவது வீரராகவும் உள்ளார்.

ஸ்கோர் விவரம்

முதல் இன்னிங்ஸ் 

இங்கிலாந்து

ஜாக் கிராவ்லி    (எல்பிடபிள்யூ) (பி) படேல்    53 (84) 
டொமினிக் சிப்லி    (சி) ரோஹித் (பி) இஷாந்த்    0 (7) 
ஜானி பேர்ஸ்டோ    (எல்பிடபிள்யூ) (பி) படேல்    0 (9) 
ஜோ ரூட்    (எல்பிடபிள்யூ) (பி) அஸ்வின்    17 (37) 
பென் ஸ்டோக்ஸ்    (எல்பிடபிள்யூ) (பி) படேல்    6 (24) 
ஆலி போப்    (பி) அஸ்வின்    1 (12) 
பென் ஃபோக்ஸ்    (பி) படேல்    12 (58) 
ஜோஃப்ரா ஆர்ச்சர்    (பி) படேல்    11 (18) 
ஜேக் லீச் (சி) புஜாரா    (பி) அஸ்வின்    3 (14) 
ஸ்டுவர்ட் பிராட்    (சி) பும்ரா (பி) படேல்    3 (29) 
ஜேம்ஸ் ஆண்டர்சன்    (நாட் அவுட்)    0 (3) 
உதிரிகள்    6 
மொத்தம் (48.4 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு)    112


முதல் இன்னிங்ஸ் 

விக்கெட் வீழ்ச்சி: 1-2 (சிப்லி), 2-27 (பேர்ஸ்டோ), 3-74 (ரூட்), 4-80 (கிராவ்லி), 5-81 (போப்), 6-81 (ஸ்டோக்ஸ்), 7-93 (ஆர்ச்சர்), 8-98 (லீச்), 9-105 (பிராட்), 10-112 (ஃபோக்ஸ்) 
பந்துவீச்சு: இஷாந்த் 5-1-26-1; பும்ரா 6-3-19-0; 
படேல் 21.4-6-38-6; அஸ்வின் 16-6-26-3

இந்தியா

ரோஹித் சர்மா    (நாட் அவுட்)    57 (82) 
ஷுப்மன் கில்    (சி) கிராவ்லி (பி) ஆர்ச்சர்    11 (51) 
சேதேஷ்வர் புஜாரா    (எல்பிடபிள்யூ) (பி) லீச்    0 (4) 
விராட் கோலி    (பி) லீச் 27 (58)     11 (18) 
அஜிங்க்ய ரஹானே    (நாட் அவுட்)    1 (3) 
உதிரிகள்    3 

விக்கெட் வீழ்ச்சி: 1-33 (கில்), 2-34 (புஜாரா), 3-98 (கோலி) 
பந்துவீச்சு: ஆண்டர்சன் 9-6-11-0; பிராட் 6-1-16-0;
ஆர்ச்சர் 5-2-24-1; லீச் 10-1-27-2; ஸ்டோக்ஸ் 3-0-19-0

டிஆர்எஸ் சர்ச்சை

இங்கிலாந்து இன்னிங்ஸில் அஸ்வின் வீசிய 38-ஆவது ஓவரில் ஜேக் லீச் எதிர்கொண்ட பந்து, செகண்ட் ஸ்லிப்பில் நின்ற புஜாராவின் கைகளில் கேட்ச்சானது. எனினும் பந்து தரையை தொட்டதைப் போன்று தெரிந்ததால் விக்கெட்டின் முடிவை 3-ஆவது நடுவரின் பொறுப்புக்கு விட்டார் கள நடுவர்.  எந்தவொரு கேமரா கோணத்திலும் பந்து தரையில் பட்டதாக தெளிவாக உறுதி செய்ய இயலவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் பலனை பெளலருக்கு சாதகமாக்கி அவுட் வழங்கினார் 3-ஆவது நடுவர். 

பின்னர் இந்தியா இன்னிங்ஸில் 2-ஆவது ஓவரில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தை ஷுப்மன் கில் லேசாகத் தொட முயல, அது பேட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச் ஆனது. ஆனால், பந்து தரையில் பட்டதாகத் தெரிந்ததால் இந்த முறையும் நடுவர் விக்கெட் முடிவை 3-ஆவது நடுவர் வசம் ஒப்படைத்தார். தொலைக்காட்சி ரிவியூக்களில் பந்து தரையில் பட்டது தெளிவாகத் தெரிந்ததால் அவுட் வழங்கப்படவில்லை. எனினும், ஜேக் லீச்சுக்கு இதே முறையில் அவுட் வழங்கப்பட்டதை எண்ணி இங்கிலாந்து அணியினர் நடுவரிடம் சிறிது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேபோல் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 8-ஆவது ஓவரிலும் கில் விக்கெட்டுக்கு எல்பிடபிள்யூ கோரியதை நடுவர் மறுக்க, அவர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தது தெரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT