செய்திகள்

10 இரட்டைச் சதங்கள்: சாதனை படைத்துள்ள சென்னை சேப்பாக்கம் மைதானம்

6th Feb 2021 03:12 PM

ADVERTISEMENT

 

சென்னை டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டைச் சதம் எடுத்துள்ளார். இதன்மூலம் அதிக இரட்டைச் சதங்கள் எடுக்கப்பட்ட இந்திய மைதானம் என்கிற பெருமையை சேப்பாக்கம் மைதானம் பெற்றுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கியுள்ளது.

இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற கையோடு இந்தத் தொடரில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இந்திய அணியை எதிா்கொள்கிறது. இரு அணிகளுமே வலுவான வீரா்களைக் கொண்டுள்ளதால் இந்த டெஸ்ட் தொடா் மீது மிகுந்த எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

ADVERTISEMENT

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த டெஸ்டில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இரட்டைச் சதம் எடுத்துள்ளார்.  341 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதம் எடுத்துள்ளார். இது ரூட்டின் 5-வது டெஸ்ட் இரட்டைச் சதமாகும். கேப்டனாக 3-வது இரட்டைச் சதம். 100-வது டெஸ்டில் இரட்டைச் சதம் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார். இலங்கையில் இரட்டைச் சதம் எடுத்த ரூட், இந்தியாவிலும் இரட்டைச் சதம் எடுத்துள்ளார். இதனால் 23 நாள்களில் இரு இரட்டைச் சதம் எடுத்து மகத்தான வீரராக விளங்குகிறார். சென்னை டெஸ்டில் நதீம் பந்துவீச்சில் 218 ரன்களில் ஆட்டமிழந்தார் ஜோ ரூட். 

இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் எடுக்கப்பட்ட 10-வது இரட்டைச் சதம் இது. 1982-ல் ஜி. விஸ்வநாத், சென்னை சேப்பாகத்தின் முதல் இரட்டைச் சதத்தை எடுத்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற ஐந்து டெஸ்டுகளில் நான்கு இரட்டைச் சதங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 1985-ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெஸ்டில் ஒரே இன்னிங்ஸில் கேட்டிங், கிரீம் பிளவர் ஆகிய இரு இங்கிலாந்து வீரர்களும் இரட்டைச் சதமெடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார்கள். 

2001-ல் மேத்யூ ஹேடன் இரட்டைச் சதமெடுத்தாலும் அந்த டெஸ்டில் இந்திய அணியே வென்றது. இதனால் இந்தமுறையும் இந்திய அணி விஸ்வரூபம் எடுத்து டெஸ்டை வெல்ல வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. 

சென்னை சேப்பாக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள இரட்டைச் சதங்கள்

ஜி. விஸ்வநாத் - 1982 (டிரா)
கவாஸ்கர் - 1983 (டிரா)
கேட்டிங் - 1985 (இங்கிலாந்து வெற்றி)
கிரீம் பிளவர் - 1985 (இங்கிலாந்து வெற்றி)
டீன் ஜோன்ஸ் - 1986 (டை)
ஹேடன் - 2001 (இந்தியா வெற்றி)
சேவாக் - 2008 (முச்சதம், டிரா)
தோனி - 2013 (இந்தியா வெற்றி)
கருண் நாயர் - 2016 (இந்தியா வெற்றி)
ஜோ ரூட் - 2021

ADVERTISEMENT
ADVERTISEMENT