செய்திகள்

ஜோஃப்ரா ஆர்ச்சர் மார்ச் மாதம் வரை விளையாட மாட்டார் என அறிவிப்பு: காரணம் என்ன?

22nd Dec 2021 10:59 AM

ADVERTISEMENT

 

மற்றொரு அறுவை சிகிச்சை காரணமாகப் பிரபல இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மார்ச் மாதம் வரை விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோஃப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் 2021 போட்டியிலிருந்தும் விலகினார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். பிறகு, முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். கடந்த மே மாதம் முழங்கை காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்து அவர் விலகினார். 

இந்நிலையில் முழங்கை காயத்துக்கு மற்றொரு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் ஆர்ச்சர். இதையடுத்து ஜனவரி - மார்ச் மாதங்களில் இங்கிலாந்து அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திலும் ஆர்ச்சர் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11 அன்று லண்டனில் ஆர்ச்சருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி ஆர்ச்சரைத் தக்கவைக்கவில்லை. 2-வது அறுவை சிகிச்சை காரணமாக ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்ச்சர் பங்குபெறுவாரா என்பது இனிமேல் தான் தெரியவரும். 

ஜனவரி - மார்ச் மாதங்களில் இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஜனவரி 22 முதல் ஜனவரி 30 வரை நடைபெறுகிறது. டெஸ்ட் தொடர், மார்ச் 1 முதல் மார்ச் 28 வரை நடைபெறுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT