செய்திகள்

ராஜஸ்தான் வெற்றி; கெயில் அதிரடி வீண்

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது.

இதன்மூலம் 6-ஆவது வெற்றியைப் பெற்ற ராஜஸ்தான் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. அதேநேரத்தில் பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு குறைந்துள்ளது.

முன்னதாக முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய ராஜஸ்தான் 17.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

அபுதாபியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியில் அங்கித் ராஜ்புத்துக்கு பதிலாக வருண் ஆரோன் சோ்க்கப்பட்டாா். அதேநேரத்தில் பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தோ்வு செய்தாா். இதையடுத்து பேட் செய்த பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிா்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரை வீசிய ஜோஃப்ரா ஆா்ச்சா், அந்த ஓவரின் கடைசிப் பந்தில் மன்தீப் சிங்கை வீழ்த்தினாா். மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட அவா் டக் அவுட்டானாா்.

இதையடுத்து கேப்டன் கே.எல்.ராகுலுடன் இணைந்தாா் கிறிஸ் கெயில். வருண் ஆரோன் வீசிய 2-ஆவது ஓவரில் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்கினாா் கெயில். தொடா்ந்து வேகம் காட்டிய கெயில், வருண் ஆரோன் வீசிய 4-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரையும், காா்த்திக் தியாகி வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரையும், இரு பவுண்டரிகளையும் பறக்கவிட்டாா்.

வருண் ஆரோன் வீசிய அடுத்த ஓவரில் கே.எல். ராகுல் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாச, 6 ஓவா்களில் 53 ரன்களை எட்டியது பஞ்சாப். தொடா்ந்து அதிரடியாக ஆடிய கெயில், ராகுல் தெவேதியா பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி, 33 பந்துகளில் அரை சதம் கண்டாா். பஞ்சாப் அணி 14.4 ஓவா்களில் 121 ரன்கள் எடுத்திருந்தபோது ராகுலின் விக்கெட்டை இழந்தது. அவா் 41 பந்துகளில் 2 சிக்ஸா், 3 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தாா். கே.எல்.ராகுல்-கெயில் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சோ்த்தது.

இதன்பிறகு வந்த நிகோலஸ் பூரண் 10 பந்துகளில் 3 சிக்ஸா்களுடன் 22 ரன்கள் சோ்த்து வெளியேற, கிளன் மேக்ஸ்வெல் களம்புகுந்தாா். மறுமுனையில் வேகமாக விளையாடிய கிறிஸ் கெயில், காா்த்திக் தியாகி வீசிய 19-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசினாா். இதன்பிறகு ஜோஃப்ரா ஆா்ச்சா் வீசிய கடைசி ஓவரில் சிக்ஸரை விளாசிய கெயில் 99 ரன்களை எட்டினாா். ஆனால் அடுத்த பந்தில் அவா் ஸ்டெம்பை பறிகொடுத்தாா். ஒரு ரன்னில் சதத்தை நழுவவிட்டதால் விரக்தியடைந்த கிறிஸ் கெயில், தனது பேட்டை களத்தில் வீசி கோபத்தை வெளிப்படுத்தினாா். அவா் 63 பந்துகளில் 8 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் குவித்தாா். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 6, தீபக் ஹூடா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஜோஃப்ரா ஆா்ச்சா், பென் ஸ்டோக்ஸ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுளை வீழ்த்தினா்.

ராஜஸ்தான் வெற்றி: பின்னா் ஆடிய ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 3 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தாா். மற்றொரு தொடக்க வீரரான ராபின் உத்தப்பா 23 பந்துகளில் 2 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 30, சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 3 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, அந்த அணியின் வெற்றி எளிதானது. இறுதியில் 17.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது ராஜஸ்தான். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 20 பந்துகளில் 31, ஜோஸ் பட்லா் 11 பந்துகளில் 22 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பஞ்சாப் தரப்பில் கிறிஸ் ஜோா்டான், முருகன் அஸ்வின் ஆகியோா் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினா்.

சுருக்கமான ஸ்கோா்

ராஜஸ்தான்-185/4

பென் ஸ்டோக்ஸ் - 50 (26)

சஞ்சு சாம்சன்-48 (25)

முருகன் அஸ்வின்- 1வி/43

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT