செய்திகள்

ரோஹித் வெளியே, அகர்வால் உள்ளே..? ஆஸ்திரேலிய தொடருக்கான அணித் தேர்வால் நீடிக்கும் குழப்பம்!

DIN


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (திங்கள்கிழமை) அறிவித்தது. இதில், ரோஹித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா பெயர் இடம்பெறவில்லை. ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். 

ரோஹித் மற்றும் இஷாந்த் சேர்க்கப்படாதது பற்றி பிசிசிஐ தெரிவிக்கையில், "இருவரது காயத்தின் முன்னேற்றம் குறித்து மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணிக்கும்" என்றது.

தில்லி கேபிடல்ஸைச் சேர்ந்த இஷாந்த் சர்மா காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ஏற்கெனவே விலகிவிட்டார். மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு களமிறங்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் கைரன் பொலார்டே அணிக்குத் தலைமை ஏற்றார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் ரோஹித் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ரோஹித் பெயர் இடம்பெறாததால் அவரது காயம் ஒருவேளை தீவிரமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. 

ஆனால், இந்திய அணி அறிவிக்கப்பட்ட அதே தினம் மும்பை இந்தியன்ஸுக்காக அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவேற்றம் செய்தது. இதைத் தொடர்ந்து, அவர் பேட்டிங் செய்யும் விடியோவும் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்திய அணி தேர்வு செய்யப்பட்டபோது காயம் என்று குறிப்பிடப்பட்டிருந்த ரோஹித் சர்மா, அணி அறிவிக்கப்பட்ட அதே தினத்தில் பயிற்சியில் ஈடுபட்டது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

ரோஹித் சர்மாவின் காயத்தின் தன்மை குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்காததால், இது பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கிறது. 

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளது இந்த குழப்பத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. கிங்ஸ் லென் பஞ்சாப் வீரர் மயங்க் அகர்வாலும் காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களில் பங்கேற்கவில்லை. ஆனால், அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். குறிப்பாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்திலும் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது.

வீரர்களின் காயத்தின் தன்மை குறித்து மருத்துவக் குழு பிசிசிஐ-யிடம் தகவல் அளித்திருக்கக்கூடும், அதன் அடிப்படையிலேயே இந்த அணித் தேர்வும் நடைபெற்றிருக்கும் என்றிருந்தாலும், தெளிவான விளக்கம் அளிக்கப்படாதது குழப்பங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் வழிவகுக்கின்றன.

இதனிடையே, கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டத்துக்குப் பிறகு இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் இதுபற்றி தெரிவித்ததாவது:

"மும்பை இந்தியன்ஸுக்காக அவர் பயிற்சி மேற்கொள்வது பற்றி காண்பிக்கப்பட்டதை நான் பார்க்கவில்லை. அதனால், அவருக்கு என்ன காயம் என்பது எனக்குத் தெரியவில்லை. அவருக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானது என்றால், அவரால் பயிற்சியில் ஈடுபடவே முடியாது. நாம் டிசம்பரில் தொடங்கவிருக்கும் சுற்றுப்பயணம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். டெஸ்ட் ஆட்டங்கள் டிசம்பர் 17-ம் தேதி தொடங்கவிருக்கிறது. அதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. 

மும்பை இந்தியன்ஸுக்காக அவர் பயிற்சி மேற்கொள்கிறார் என்றால், உண்மையில் அவருக்கு என்ன மாதிரியான காயம் ஏற்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள உண்மையான பிரச்னை குறித்து வெளிப்படைத்தன்மை நிச்சயம் அனைவருக்கும் உதவும். இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் இதுபற்றி தெரிந்துகொள்ள தகுதியானவர்கள்.

அணி நிர்வாகங்கள் இங்கு வெற்றி பெறுவதற்காக உள்ளனர். எதிரணிக்கு உளவியல் ரீதியாக எவ்வித சாதகத்தையும் அளித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். ஆனால், நாம் இந்திய அணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். மயங்க் அகர்வாலும் விளையாடவில்லை. இந்த இரண்டு முக்கியமான வீரர்களுக்கும் என்ன நேர்ந்துள்ளது என்று இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்."

ரோஹித் சர்மாவின் காயம் அல்லது காயத்தின் தன்மை குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்டாலே இந்த சர்ச்சைகளுக்கும் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT