செய்திகள்

முதல் ஒருநாள் ஆட்டம்: ஸ்மித், ஃபிஞ்ச் சதத்தால் மகத்தான வெற்றியை அடைந்த ஆஸ்திரேலிய அணி!

27th Nov 2020 05:48 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன.

சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மயங்க் அகர்வால், சைனி ஆகியோர் இடம்பெற்றார்கள். 

ADVERTISEMENT

மார்ச் மாதத்துக்குப் பிறகு இரு அணிகளும் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடி வருகிறார்கள். மைதானத்தின் இருக்கைகள் எண்ணிக்கையில் 50% அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் மெல்ல மெல்ல பழைய நிலைமைக்குத் திரும்பி வருவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். 

ஃபிஞ்சும் வார்னரும் முதல் ஐந்து ஓவர்களில் 27 ரன்கள் எடுத்தார்கள். இந்தியப் பந்துவீச்சாளர்களில் ஷமி நன்றாகப் பந்துவீசினார். இந்த ஆட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களை எட்டினார் ஃபிஞ்ச். டேவிட் வார்னருக்கு அடுத்ததாக விரைவாக இந்த இலக்கை எட்டிய 2-வது ஆஸி. வீரர். 

10 ஓவர்களில் 51 ரன்கள் கிடைத்தன. இதன்பிறகும் சிரமம் இல்லாமல் விளையாடினார்கள் ஃபிஞ்சும் வார்னரும். இதனால் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்தது.

அடுத்த ஆறு ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியால் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது. எனினும் ரன்களைக் கட்டுப்படுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. 25 ஓவர்களில் ஆஸி. அணி விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்தது. ஃபிஞ்ச் 69 பந்துகளிலும் வார்னர் 54 பந்துகளிலும் அரை சதம் எடுத்தார்கள்.

76 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்த வார்னர், ஷமி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

பிறகு வந்த ஸ்மித் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். ஜடேஜாவின் கடைசி ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து அசத்தினார். 36 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் உயர்ந்தது. இது, ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்மித்தின் 2-வது விரைவான அரை சதமாகும். 

117 பந்துகளில் சதமடித்தார் ஃபிஞ்ச். இது அவருடைய 17-வது ஒருநாள் சதம். பிறகு 124 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  

40-வது ஓவரின் முடிவில், ஆஸி. அணி 2 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.

ஆரோன் ஃபிஞ்ச்

ஸ்டாய்னிஸ் ரன் எதுவும் எடுக்காமல் சஹால் பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 40 ஓவர்களுக்குப் பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் ஸ்மித்தும் மேக்ஸ்வெல்லும். சஹாலின் கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்தார் மேக்ஸ்வெல். இன்று 10 ஓவர்கள் வீசி 1 விக்கெட் எடுத்து 89 ரன்கள் கொடுத்தார் சஹால். 

19 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல், ஷமி பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசானே 2 ரன்களில் சைனி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 

கடைசி ஓவர்களில் ஸ்மித் மேலும் அதிரடியாக விளையாடினார். 62 பந்துகளில் சதமடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் 3-வது அதிவேக சதமாகும். இதற்கு முன்பு மேக்ஸ்வெல் 51 பந்துகளிலும் ஃபாக்னர் 57 பந்துகளிலும் சதமடித்துள்ளார்கள். இது, ஸ்மித்தின் 10-வது ஒருநாள் சதம்.

கடைசி ஓவரில் ஷமி பந்துவீச்சில் போல்ட் ஆனார். 66 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுத்தார் ஸ்மித். தனது மிகச்சிறந்த ஒருநாள் ஆட்டங்களில் ஒன்றை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். 

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் கேரி 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணித் தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளும் பும்ரா, சைனி, சஹால் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

தடுமாறிய இந்திய பேட்ஸ்மேன்கள்

இந்திய அணியின் இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே 20 ரன்கள் கிடைத்தது. 4 வைட்களும் ஒரு நோ பாலும் வீசினார் ஸ்டார்க். அடுத்த ஓவரில் மேலும் 12 ரன்கள். இதனால் 4.1 ஓவரிலேயே இந்திய அணி 50 ரன்களை எட்டியது.

ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் என அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் 22 ரன்களில் ஹேஸில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கோலி 21 ரன்களிலும் ஷ்ரேயஸ் ஐயர் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். பிறகு ஸாம்பா பந்துவீச்சில் 12 ரன்களுடன் ராகுலும் வெளியேற 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஷிகர் தவனும் பாண்டியாவும் பொறுப்புடன் விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். அவ்வப்போது சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார் பாண்டியா. இதனால் 31 பந்துகளில் அரை சதமெடுத்தார். தவன் அரை சதமெடுக்க 55 பந்துகள் தேவைப்பட்டன. 

தவனும் பாண்டியாவும் இணைந்து 38 ஒருநாள் ஆட்டங்களில் இணைந்து ஆடினாலும் முதல்முறையாக இம்முறை கூட்டணி அமைத்துள்ளார்கள். 

30 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. 

ஷிகர் தவன்

இருவரின் முயற்சியால் ஓர் அதியசத்தை இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ஸாம்பா பந்துவீச்சில் 74 ரன்களில் ஆட்டமிழந்தார் தவன். இதன்பிறகு ரன்கள் எடுக்கும் வேகம் குறைந்தது. சதத்தை நெருங்கிய வேளையில் சிக்ஸர் அடிக்க முயன்று ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஸாம்பா பந்துவீச்சில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார் பாண்டியா. இதன்மூலம் வெற்றிக்கான இந்திய அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது. நிதானமாக விளையாடிய ஜடேஜா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷமி 13 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் ஒருநாள் ஆட்டத்தில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆஸி. பந்துவீச்சாளர்களில் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும் ஹேஸில்வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

2-வது ஒருநாள் ஆட்டம் சிட்னியில் நவம்பர் 29 அன்று நடைபெறுகிறது. 

Tags : Australia
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT