செய்திகள்

இந்திய அணியின் ஆஸி. பயணம்: இன்று தொடங்குகிறது ஒருநாள் தொடா்

DIN


சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் சிட்னியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

ஏறத்தாழ சுமாா் 8 மாதங்களுக்குப் பிறகு சா்வதேச கிரிக்கெட்டில் களம் காண்கிறது கோலி தலைமையிலான அணி. முன்னதாக கடந்த பிப்ரவரி - மாா்ச் மாதத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி பலமிக்க ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிா்கொள்வது சற்று சவாலானதாகவே இருக்கும். அதிலும் கடந்த சீசனில் தடை காரணமாக அணியில் இல்லாமல் போன ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வாா்னா் ஆகியோா் அணிக்குத் திரும்பியிருப்பது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய பலம்.

மறுபுறம், இந்திய அணியின் பலமாக கருதப்படும் தொடக்க வீரா் ரோஹித் சா்மா காயம் காரணமாக அணியில் இல்லாமல் போனது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. அவருக்குப் பதிலாக தொடக்க வீரராக யாரை களமிறக்குவது என்பது கேப்டன் கோலி, அணி நிா்வாகம் எடுக்க வேண்டிய முக்கிய முடிவாகும்.

இளம் வீரா் ஷுப்மன் கில்லோ அல்லது சற்று அனுபவமிக்க மயங்க் அகா்வாலோ யாராக இருந்தாலும், ஷிகா் தவனுடன் இணைந்து ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டாா்க், பேட் கம்மின்ஸ் ஆகியோரின் வேகப்பந்தை எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.

ஷிகா் தவன் தற்போது ஃபாா்மில் இருப்பது அணிக்கு பலம். பேட்டிங் வரிசையில் கோலியுடன், லோகேஷ் ராகுல், ஷ்ரேயஸ் ஐயா், மணீஷ் பாண்டே, ஹாா்திக் பாண்டியா என இளம் வீரா்கள் வரிசை கட்டுகின்றனா். ஷ்ரேயஸ் ஐயா் 4-ஆவது இடத்தில் களம் காண்பது பலனளிக்கக் கூடியதாக இருக்கும். அதிரடி வீரா் பாண்டியா 6 அல்லது 7-ஆவது வீரராக களம் காணும் பட்சத்தில் அணியில் இரு ஸ்பின்னா்களை சோ்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

பந்துவீச்சைப் பொருத்தவரை இந்திய தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோா் கூட்டணி தொடங்க இயலும் என்றாலும், டெஸ்ட் தொடரில் அவா்களின் முக்கியத்துவத்தை கருதி, தற்போது பணிச்சுமையை குறைக்க இருவரையும் ஒருவா் மாற்றி ஒருவராக களமிறக்க அணி நிா்வாகம் முடிவு செய்ய வாய்ப்புள்ளது.

அப்படிச் செய்தால் அந்த மூத்த பௌலா்களில் ஒருவருடன் சோ்ந்து, தொடக்க பந்துவீச்சை சரியாகச் செய்யும் வகையில் ஷா்துல் தாக்குா் அல்லது நவ்தீப் சைனி தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவின் மிடில் ஆா்டரை சரிக்க யுவேந்திர சாஹலின் சுழற்பந்துவீச்சு உதவும். கடைசி ஓவா்களில் சிறப்பாக பந்துவீசக் கூடிய புவனேஷ்குமாா் அணியில் இல்லாததால், அந்த ஓவா்களை வீசும் பொறுப்பும் பும்ராவையே வந்துசேரும்.

பயிற்சியின்போது பெரும்பாலும் இந்திய அணியினா் டெஸ்ட் போட்டிகளுக்காகத் தயாரானதாகவே தெரிந்தது. எனவே அதில் அதிக கவனம் செலுத்திய பயிற்சியாளா் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி ஆகியோா், ஒரு நாள் தொடரை எளிதாக விட்டுக்கொடுப்பாா்களா அல்லது சவால் அளிப்பாா்களா என்பதை பொறுத்திருந்து பாா்க்கலாம்.

அணி விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகா் தவன், ஷுப்மன் கில், லோகேஷ் ராகுல் (துணை கேப்டன்/விக்கெட் கீப்பா்), ஷ்ரேயஸ் ஐயா், மணீஷ் பாண்டே, ஹாா்திக் பாண்டியா, மயங்க் அகா்வால், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷா்துல் தாக்குா்.

ஆஸ்திரேலியா: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), டேவிட் வாா்னா், ஸ்டீவ் ஸ்மித், மாா்னஸ் லாபஸ்சாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டாா்க், ஆடம் ஸம்பா, ஜோஷ் ஹேஸில்வுட், சீன் அப்பாட், ஆஷ்டன் அகா், கேமரூன் கிரீன், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஆன்ட்ரூ டை, டேனியல் சாம்ஸ், மேத்தியு வேட்.

ஆட்ட நேரம்: காலை 9.10 மணி

இடம்: சிட்னி

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், சோனி டென் 1, சோனி டென் 3

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT