செய்திகள்

ஒருநாள் ஆட்டம் ஏன் சமனில் முடியக் கூடாது?: ராஸ் டெய்லர் கேள்வி!

26th Jun 2020 02:57 PM

ADVERTISEMENT

 

ஒருநாள் ஆட்டம் ஏன் சமனில் முடியக் கூடாது என 2019 உலகக் கோப்பைப் போட்டியை முன்வைத்து நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை இங்கிலாந்து அணி வென்றது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் நியூசிலாந்து அணியை அதிக பவுண்டரிகள் அடித்ததன் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம், கிரிக்கெட் ஆட்டத்தை கண்டுபிடித்த நாடான இங்கிலாந்தின் 44 ஆண்டுகள் கனவு நனவானது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ரன்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் தங்களது 44 ஆண்டு கால கனவை நனவாக்கியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. 2015 உலகக் கோப்பை போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று ஏமாற்றமடைந்தது நியூசிலாந்து.

ADVERTISEMENT

2019 உலகக் கோப்பைப் போட்டியை முன்வைத்து நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஒருநாள் ஆட்டத்துக்கு சூப்பர் ஓவர் ஏன் தேவை என எனக்குத் தெரியவில்லை. ஒருநாள் கிரிக்கெட் பல மணி நேரம் நடக்கிறது. அது சமனில் முடிந்தால் எனக்கு எதுவும் பிரச்னையில்லை.

டி20-க்கு சூப்பர் ஓவர் தேவை தான். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அது அவசியமில்லை. சமனில் முடிந்தால் இரு அணிகளையும் வெற்றியாளர்களாக அறிவித்து விடலாம். உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் ஓவர் உள்ளது என்றே எனக்குத் தெரியாது. சமன் என்றால் சமன் தான். 100 ஓவர்கள் விளையாடியும் சமனில் முடிந்தால் அது தவறில்லை என்று கூறியுள்ளார்.

உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு மூன்று டி20 ஆட்டங்களில் சூப்பர் ஓவரில் விளையாடிய நியூசிலாந்து அணி அனைத்திலும் இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு எதிராகத் தோல்வியடைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT