செய்திகள்

நடராஜனுக்கு 2 விக்கெட்டுகள்: 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் கான்பெராவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷுப்மன் கில், நடராஜன், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றார்கள். இதன்மூலம் தமிழக வீரரான நடராஜன், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்.

இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்களைக் குவித்தது. 32-வது ஓவரின் முடிவில் கோலி ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த பாண்டியாவும் ஜடேஜாவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆரம்பத்தில் நிதானமாக ரன்கள் எடுத்த இருவரும் கடைசி 5 ஓவர்களில் தங்களுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 45-வது ஓவரின் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர், 226 ஆக இருந்தது. ஆனால் இருவரும் கடைசி 5 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 108 பந்துகளில் இருவரும் 150 ரன்கள் சேர்த்துள்ளார்கள். பாண்டியா 76 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 92 ரன்களும் ஜடேஜா 50 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்களும் எடுத்தார்கள்.

ஜடேஜா

ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸில் தொடக்க வீரர் லபுசானேவின் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன். இது அவருடைய முதல் சர்வதேச விக்கெட்டாகும். லபுசானே 7 ரன்கள் மட்டும் எடுத்தார். இதன்பிறகு கடந்த இரு ஒருநாள் ஆட்டங்களிலும் 62 பந்துகளில் சதமடித்த ஸ்மித், 7 ரன்களிலும் ஹென்ரிகஸ் 22 ரன்களிலும் தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். நன்கு விளையாடி வந்த கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், 82 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. ஆல்ரவுண்டரான கிரீன் 21 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல்லும் கேரியும் இந்திய அணியை அச்சுறுத்தினார்கள். விரைவாக ரன்கள் எடுத்தார்கள். எனினும் கேரி 38 ரன்கள் ரன் அவுட் ஆனார். 

மேக்ஸ்வெல்லுக்கு ஒருநாள் தொடர் அற்புதமாக அமைந்துள்ளது. இன்றும் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸி. ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். இந்திய அணியின் வெற்றிக்குப் பெரிய தடையாக இருந்த மேக்ஸ்வெல், பும்ரா பந்துவீச்சில் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் நன்கு பந்துவீசிய நடராஜன், அகரை 28 ரன்களில் வெளியேற்றினார். தனது முதல் ஒருநாள் ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார் நடராஜன். அபாட், ஸாம்பா தலா 4 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களில் 289 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளையும், நடராஜன், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் குல்தீப், ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் எடுத்தார்கள். 

3-வது ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 13 ரன்களில் வென்ற நிலையில் ஒருநாள் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி.

அடுத்ததாக டி20 தொடர் டிசம்பர் 4 முதல் தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT