செய்திகள்

ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?: இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி இன்று விளையாடுகிறது.

முதல் இரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து தொடரை ஆஸ்திரேலியாவிடன் இழந்துவிட்ட இந்தியா, இந்த ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெறுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

ஒருவேளை தோல்வியடைந்தால் ஒருநாள் தொடரில் தொடா்ந்து 2-ஆவது முறையாக இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகும். கடைசியாக நியூஸிலாந்தில் அந்நாட்டு அணியிடமும் ஒருநாள் தொடரை முற்றிலுமாக (0-3) இந்திய அணி இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தைப் பொருத்தவரை இந்திய அணியின் பௌலிங்கில் நிச்சயம் மாற்றம் இருக்கலாம். ஏனெனில் தொடா் கையை விட்டுச் சென்ற 2-ஆவது ஆட்டத்தில் பௌலிங்கில் இந்திய அணி சோபிக்கவில்லை என்று கேப்டன் கோலியே ஒப்புக்கொண்டிருந்தாா்.

அதிக ரன்கள் அளித்த நவ்தீப் சைனிக்கு ஓய்வளிக்கப்படலாம். அவ்வாறானால், 27 சா்வதேச ஆட்டங்களில் விளையாடிய அனுபவமிக்க ஷா்துல் தாக்குா், அல்லது சிறப்பாக யாா்க்கா் வீசும் டி. நடராஜன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம்.

நடராஜனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் அது அவரது சா்வதேச கிரிக்கெட்டின் தொடக்கமாக இருக்கும். இல்லையென்றாலும், அவா் டி20 பிளேயிங் லெவனில் நிச்சயம் இடம் பிடிக்கலாம். பந்துவீச்சு முறையிலும் வேகத்திலும் மாற்றங்களைக் காட்டும் நடராஜன் கடைசி ஆட்டத்துக்கு தேவையான ஒருவராக இருக்கலாம்.

ஒருவேளை டெஸ்ட் கிரிக்கெட்டை மனதில் கொண்டு பும்ரா, ஷமி இருவருக்குமே ஓய்வளிக்க கேப்டன் விரும்பினால், ஷா்துல், நடராஜன் என இருவருக்குமே வாய்ப்பு கிடைக்கும்.

ஸ்பின்னா்கள் தரப்பில் யுவேந்திர சாஹலும், ரவீந்திர ஜடேஜாவும் நிச்சயம் தங்களது பந்துவீச்சை மேம்படுத்திக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.

இந்திய பேட்டிங் வரிசையில் கோலி, ராகுல் ஆகியோா் வலு சோ்க்கின்றனா். முதல் ஆட்டத்தில் ஆடியதைப் போல தவனும், பாண்டியாவும் மீண்டு வந்தால் அது கூடுதல் பலமாக இருக்கும். ஷுப்மன் கில், மயங்க் அகா்வால் தங்களது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.

முதல் 2 ஆட்டங்களைப் பொருத்தவரை 300 ரன்களை இந்திய அணி கடந்துவிட முடிந்தது. எனவே, இந்த ஆட்டத்தில் பௌலிங்கின் மூலம் ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை சற்று கட்டுப்படுத்தினால் இந்தியாவுக்கு வெற்றி வசமாகலாம்.

ஆஸ்திரேலிய அணியினர் எனது விக்கெட்டை வீழ்த்துவதற்காக வியூகம் வகுக்கின்றனர் என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். அதை எனக்கான சவாலாகவும் ஏற்கிறேன். பேட்டிங் செய்வது நமது மனநிலையைப் பொருத்ததே. களத்தில் இறங்கியதும் எனக்கான பேட்டிங் முறையை நிர்ணயிக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறேன். எனினும், முதல் ஆட்டத்தில் ஜோஷ் ஹேஸில்வுட் பந்துவீச்சுக்கு எதிரான ஷாட்டை கணிக்க முதலில் சற்று தடுமாறினேன். ஆனால் அடுத்த ஆட்டத்தில் அதைச் சரியாக கணித்து ஆடக் கற்றுக்கொண்டேன் 
- ஷ்ரேயஸ் ஐயர் 

எங்களது பெளலர் மிட்செல் ஸ்டார்க் அவரது முழுமையான ஃபார்மை எட்டவில்லை. அவர் பந்தை ஸ்விங் செய்ய முயற்சிக்கிறார். மிகப்பெரிய இலக்கை எட்ட, எதிரணியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் விளையாடும்போது பந்துவீசுவது சற்று கடினமானது தான். ஸ்டார்க் பந்துவீச்சில் என்ன மாற்றம் செய்வது என ஆலோசித்துள்ளோம். அவரது பெளலிங் குறித்து அச்சம் இல்லை. வார்னர் இடத்தில் மேத்தியூ வேட், அலெக்ஸ் கேரி, மார்னஸ் லாபுசான் ஆகியோரில் யாரை களமிறக்குவது என இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களது மிடில் ஆர்டர் சிறப்பாக உள்ளது
- ஆரோன் ஃபிஞ்ச்

வார்னரின் காயம்: இதர வீரர்களுக்கு வாய்ப்பு
ஆஸ்திரேலிய ஓபனிங் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் காயமடைந்து அவரது இடம் காலியாக இருப்பதால், இதர வீரர்கள் அந்த இடத்துக்கு தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கூறினார். 
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தின்போது இடுப்பில் காயமடைந்த வார்னர், தற்போது சிகிச்சைபெற்று வருகிறார். தற்போதைய நிலையில் ஒருநாள் போட்டியின் கடைசி ஆட்டத்திலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 தொடர் முழுவதும், டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்திலும் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. 
இந்நிலையில் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கூறுகையில், "ஆஸ்திரேலிய - இந்திய "ஏ' அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்துக்குப் பிறகு, இந்திய சீனியர் அணியுடன் ஆஸ்திரேலிய "ஏ' அணி விளையாடும் பகலிரவு ஆட்டம் நடைபெறவுள்ளது. அதில் எந்த வீரர் சிறப்பாகச் செயல்படுகிறாரோ, அவருக்கு இந்தியாவுக்கு எதிரான தொடரில் வாய்ப்பு அளிக்கப்படும். அதற்காக அந்த வீரர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார். 
முன்னதாக டெஸ்ட் தொடரில் வார்னருடன் தொடக்க வீரர்களில் ஒருவராக ஜோ பர்ன்ஸ் அல்லது வில் புக்கோவ்ஸ்கியில் யாரை இறக்குவது என்ற குழப்பம் நீடித்து வந்தது. தற்போது வார்னர் காயமடைந்ததால், அவர்கள் இருவருக்குமே வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

அணி விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகா் தவன், ஷுப்மன் கில், லோகேஷ் ராகுல், ஷ்ரேயஸ் ஐயா், மணீஷ் பாண்டே, ஹாா்திக் பாண்டியா, மயங்க் அகா்வால், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷா்துல் தாக்குா், டி.நடராஜன்.

ஆஸ்திரேலியா: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), டாா்சி ஷாா்ட், ஸ்டீவ் ஸ்மித், மாா்னஸ் லாபுசான், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டாா்க், ஆடம் ஸம்பா, ஜோஷ் ஹேஸில்வுட், சீன் அப்பாட், ஆஷ்டன் அகா், கேமரூன் கிரீன், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஆன்ட்ரூ டை, டேனியல் சாம்ஸ், மேத்தியு வேட்.

ஆட்டநேரம்: காலை 9.10 மணி

இடம்: கான்பெரா

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், சோனி டென் 1, சோனி டென் 3

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT