செய்திகள்

ஒரு வருடமாக விளையாடாத தோனியை இந்திய அணிக்கு எப்படித் தேர்வு செய்ய முடியும்?: கம்பீர் கேள்வி

13th Apr 2020 03:22 PM

ADVERTISEMENT

 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தோனிக்குப் பதிலாக கே.எல். ராகுல் சரியான மாற்று வீரராக இருப்பார் என்று கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார்.

கரோனா பாதிப்பால், 2020 ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. 2020 ஐபிஎல் போட்டி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் நடக்காமல் போனால் தோனியின் நிலைமை என்ன ஆகும் என்பதற்குப் பலரும் பலவிதமான கணிப்புகளை அளித்து வருகிறார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் தோனியின் நிலை குறித்து முன்னாள் வீரர் கம்பீர் கூறியதாவது:

இந்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெறாவிட்டால், தோனியால் இந்திய அணிக்குள் மீண்டும் திரும்புவது மிகக் கடினமாகிவிடும். கடந்த ஒரு வருடமாக அவர் விளையாடவில்லை. எதன் அடிப்படையில் தோனியை இந்திய அணிக்குத் தேர்வு செய்ய முடியும்?

சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றிகளைத் தேடித் தருகிற வீரர்களையே அணிக்குத் தேர்வு செய்ய வேண்டும். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தோனிக்குப் பதிலாக கே.எல். ராகுல் சரியான மாற்று வீரராக இருப்பார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் அவர் பங்காற்றியதை நான் கவனித்துள்ளேன். தோனி அளவுக்கு விக்கெட் கீப்பிங் திறமை அவருக்கு இல்லாவிட்டாலும் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற வீரர் ராகுல். 3-ம் மற்றும் 4-ம் நிலை வீரராக அவரால் விளையாட முடியும் என்று கூறியுள்ளார்.

Tags : Dhoni
ADVERTISEMENT
ADVERTISEMENT