ஸ்பெஷல்

கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் பிறந்த நாள்: சாதிக்கும் தமிழ்ப் பெண்!

எழில்

இப்போதெல்லாம் இந்திய மகளிர் அணியை எந்த எதிரணியும் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை. தங்களை நன்குத் தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவையும் டி20யில் இங்கிலாந்தையும் வீழ்த்தி இதர அணிகளுக்குச் சவாலை ஏற்படுத்தியுள்ளோம். இதன்மூலம் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

- சமீபத்திய பேட்டியில் மிதாலி ராஜ்.

இந்திய கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, சர்வதேச அளவில் முன்னணி அணிகளில் ஒன்றாக இருப்பதற்கு முக்கியக் காரணமாக இருப்பவர், மூத்த வீராங்கனை மிதாலி ராஜ்.

தமிழ்ப் பெண்ணான மிதாலி ராஜ், இன்று தனது 38-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ், ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஹைதராபாத்துக்கு இடம்மாறியது. முதலில் பரதநாட்டியம் கற்றுவந்த மிதாலி பிறகு தந்தையின் உந்துதலால் கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்தி பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தார். 

ஒரு வீராங்கனையாகவும் கேப்டனாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 1999-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையைச் சமீபத்தில் நிகழ்த்தினார். 2017-ல் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்தார். இதுவரை 10 டெஸ்டுகளிலும் 209 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.

மிதாலி ராஜின் தலைமையில் இந்திய அணி 132 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 82-ல் வெற்றி பெற்றுள்ளது. இவர் தலைமையில் 6 டெஸ்டுகளில் விளையாடி 3- ல் வெற்றி பெற்றுள்ளது.

2005, 2017 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய பெருமையும் மிதாலி ராஜுக்கு உண்டு.

திரைப்படமாகும் மிதாலி வாழ்க்கை

மிதாலி ராஜ் கடந்த டிசம்பர் 3 அன்று தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதற்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. 

மிதாலி ராஜ் வேடத்தில் தாப்சி நடிக்கும் படத்தை ராகுல் தொலாகியா இயக்குகிறார். சபாஷ் மித்து என இப்படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. வியாகாம்19 ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. 

200 ஒருநாள் ஆட்டங்கள்: மிதாலி ராஜின் உலக சாதனை 

பிப்ரவரி 1, 2019. 

மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இந்திய ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், புதிய உலக சாதனையை இந்த நாளில் படைத்தார். 

ஹேமில்டனில் நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்றதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 

மிதாலிக்கு அடுத்ததாக இங்கிலாந்தின் சார்லோட்டே எட்வர்ட்ஸ் 191 ஆட்டங்கள் விளையாடி 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

டி20 ஆட்டங்களிலிருந்து ஓய்வு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனையான மிதாலி ராஜ், 2006-ல் இந்திய மகளிர் அணி விளையாடிய முதல் டி20 ஆட்டத்தின் கேப்டனாகச் செயல்பட்டவர். மூன்று டி20 உலகக் கோப்பை உள்பட 32 டி20 ஆட்டங்களில் கேப்டனாக இருந்தவர். 

இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்தார். 2021 ஒருநாள் கோப்பைப் போட்டிக்காகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இக்காரணத்துக்காக டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று கூறினார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீராங்கனை என்கிற பெருமை அவருக்கு உண்டு. 

32 டி20 ஆட்டங்களிலும் மூன்று டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய மிதாலி, மொத்தம் 2349 ரன்களை விளாசியுள்ளார். மேலும் இந்த ஆட்டத்தில் 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் வசம் உள்ளது.

தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை

கடந்த வருடம் அக்டோபர் மாதம், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி வென்றதற்கு சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த மிதாலி ராஜ், என் வாழ்க்கையில் வியந்து பார்த்த ஒருவரிடமிருந்து பாராட்டு பெறுவது மகிழ்ச்சி. நன்றி சாம்பியன் என ஆங்கிலத்தில் ட்வீட் செய்தார். இதற்கு எதிர்வினையாற்றிய ரசிகர் ஒருவர், மிதாலிக்குத் தமிழ் தெரியாது, அவர் ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பேசுவார் என்றார்.

இதனால் கடுப்பான மிதாலி தனது அடுத்த ட்வீட்டை தமிழிலேயே வெளியிட்டார். தமிழ் என் தாய் மொழி... நான் தமிழ் நன்றாக பேசுவேன்... தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை என்று தமிழில் எழுதினார். பிறகு ஆங்கிலத்தில் அவர் கூறியதாவது: ஆனால், அதைவிடவும் பெருமைக்குரிய இந்தியன் நான். என்னுடைய ஒவ்வொரு பதிவையும் விமரிசிக்கும் ரசிகரே, நான் தினமும் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எனக்கு அறிவுறுத்துவதுதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது என்றார். 

21 வருடங்கள் நிலைத்து நின்ற பெருமை

சர்வதேச கிரிக்கெட்டில் தனது 21-வது வருடத்தைக் கடந்த ஜூன் மாத இறுதியில் பூர்த்தி செய்தார் மிதாலி. இவ்வளவு காலம் வேறு எந்த வீராங்கனையும் சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்ததில்லை என்பதே அவருடைய பெருமையை நன்கு உணர்த்தும்.

1999, ஜூன் 26 அன்று, 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் மிதாலி ராஜ். ஜெட் வேகத்தில் 21 வருடங்கள் ஓடிவிட்டன. 

ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடிவர்கள் (மிதாலி ராஜ் 21 வருடத்தைப் பூர்த்தி செய்தபோது)

22 வருடங்கள் 91 நாள்கள் - சச்சின் டெண்டுல்கர்
21 வருடங்கள் 184 நாள்கள் - ஜெயசூர்யா
21 வருடங்கள்* - மிதாலி ராஜ்

2021-ம் ஆண்டு வரை நிலைத்து நின்று ஆடினால் சச்சின் சாதனையைத் தாண்டிவிடுவார் மிதாலி. 

*

அடுத்த வருடம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நியூசிலாந்தில் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறுவதாக இருந்தது. இந்தப் போட்டியை 2022 பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு ஐசிசி ஒத்திவைத்துள்ளது. 

2022 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளதாக பிரபல வீராங்கனை மிதாலி ராஜ் கூறியுள்ளார். வர்ணனையாளராக மாறியுள்ள கிரிக்கெட் வீராங்கனை லிசா ட்விட்டரில் தெரிவித்ததாவது: உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக உள்ள மிதாலி ராஜ், ஜூலான் கோஸ்வாமி, ரேச்சல் ஹெய்ன்ஸ் போன்ற வீராங்கனைகள் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்றார்.

இதற்குப் பதில் அளித்த மிதாலி ராஜ் கூறியதாவது:

கண்டிப்பாக. உலகக் கோப்பையின் மீது கண்களை ஆழமாகப் பதித்துள்ளேன். சிறு காயங்களிலிருந்து மீண்டு, உடலும் மனமும் மும்பை விடவும் புத்துணர்ச்சியுடன் உள்ளன. எனவே 2022 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT