ஐபிஎல்-2020

ஸ்கெட்ச் போட்டு சிஎஸ்கேவைத் தூக்கிய தினேஷ் கார்த்திக்!

ச. ந. கண்ணன்

நேற்றைய சிஎஸ்கேவின் தோல்வியை அதன் ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஆட்டத்தின் முடிவில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது சிஎஸ்கே. இது எப்படி நடந்தது?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. 

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களே எடுத்தது. 

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா அணி. சென்னை அணி 5-ம் இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணி நிர்ணயித்த இலக்கை ஆரம்பத்தில் மிக நன்றாகவே விரட்டியது சிஎஸ்கே அணி. 11-வது ஓவரின் முடிவில் சிஎஸ்கே 94/1 என பலமான நிலையில் இருந்தது. 54 பந்துகளில் 74 ரன்கள் தேவை. வாட்சன் 48 (35), ராயுடு 26 (21) ரன்களில் அசைக்க முடியாதவர்களாக ஆடிக்கொண்டிருந்தார்கள். இதனால் கொல்கத்தாவின் இலக்கை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ஊதித்தள்ளிவிடுவார்கள் என எண்ணினார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். 

இதில் இன்னொரு ஆச்சர்யமும் இருந்தது. அதுவரை அதாவது 11வது ஓவர் வரை சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் பந்துவீச வரவில்லை. இத்தனைக்கும் வாட்சனை 8 முறை ஐபிஎல் போட்டியில் வீழ்த்தியவர் நரைன். 83 பந்துகளில் 88 ரன்கள் என வாட்சனுடனான போட்டியில் நரைனின் கையே ஓங்கியிருந்தது. அதேபோல ராயுடுவும் நரைன் பந்துவீச்சில் 50 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து 3 முறை ஆட்டமிழந்திருந்தார். இதனால் இருவரையும் வீழ்த்த 10-வது ஓவருக்கு முன்பே நரைன் அழைக்கப்படாதது ஏன் என அப்போது பலரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். 

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி ஒவ்வொரு முறை தோல்வியடையும்போது தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவி குறித்த கேள்விகள் எழுவது வழக்கம். இங்கிலாந்தின் வெற்றிகரமான கேப்டன் இயன் மார்கன் அணியில் இருக்கும்போது தினேஷ் கார்த்திக் கேப்டனாகச் செயல்படுவதா என்கிற கேள்வியைச் சமீபகாலமாக அடிக்கடி எதிர்கொள்கிறார். இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோற்றிருந்தால் தினேஷ் கார்த்திக்கின் பதவி பறிக்கப்பட்டிருந்தாலும் யாரும் ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு நரைனை முதல் 10 ஓவர்கள் வரை பந்துவீச அழைக்காதது சர்ச்சைக்குரியதாகச் சமூகவலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டது.

ஆனால் சிஎஸ்கே அணிக்கு தினேஷ் கார்த்திக் ஒரு பலமான ஸ்கெட்ச் போட்டிருந்ததை அப்போது யாரும் உணரவில்லை. தினேஷ் கார்த்திக் - கேகேஆர் பயிற்சியாளர் மெக்குல்லம் விரித்த வலையில் சிஎஸ்கே வசமாக விழுந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

நரைன் பந்துவீச்சில் வாட்சன் தடுமாறுவதை விடவும் தோனி தடுமாறுவதையே கணக்கில் எடுத்துக்கொண்டார் தினேஷ் கார்த்திக். 

நரைன் பந்துவீச்சை 13 ஆட்டங்களில் எதிர்கொண்டுள்ளார் தோனி. 63 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். நரைன் பந்துவீச்சில் தோனியால் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை இதுவரை அடிக்க முடிந்ததில்லை. 

இதைப் பிடித்துக்கொண்டார் தினேஷ் கார்த்திக். இதற்கேற்றபடி திட்டங்கள் வகுத்துள்ளார். 

ஓர் இலக்கை விரட்டும்போது எப்போதும் ஒரே மாதிரி தான் நடந்துகொள்ளும் சிஎஸ்கே. முதலில் நிதானமாக விளையாடி கடைசி 5,6 ஓவர்களில் காட்டடி அடித்து ஜெயித்துவிடுவார்கள். இதனால் தான் சிஎஸ்கே எப்போது இலக்கை விரட்டுவதில் வெற்றிகரமான அணியாக இருந்துள்ளது. ஒரு சில வருடங்கள் தவிர மற்ற எல்லா வருடங்களில் இலக்கை விரட்டுவதில் சிஎஸ்கே அணி கில்லியாக இருந்துள்ளது. அதற்கு இந்தப் புள்ளிவிவரமே உதாரணம்:

ஐபிஎல் போட்டியில் இலக்கை விரட்டுவதில் சிஎஸ்கேவுக்குக் கிடைத்த அதிகபட்சத் தோல்விகள்:

2013 ஐபிஎல் - 5 தோல்விகள்
2019 ஐபிஎல் - 4 தோல்விகள்
2020 ஐபிஎல் - 4 தோல்விகள் (6 ஆட்டங்களில்)

இதனால் கடைசி ஏழெட்டு ஓவர்களில் எந்த ஒரு பந்துவீச்சாளரையும் சிஎஸ்கே குறிவைத்து அடிக்கக் கூடாது, அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கக்கூடாது என முடிவெடுத்தார் தினேஷ் கார்த்திக். 

12-வது ஓவரில் (தான்) நரைன் முதல்முறையாக பந்துவீச வந்தார். 11-வது ஓவரின் முடிவிலேயே பேட் கம்மின்ஸ் 4 ஓவர்களை முடித்துவிட்டார். 13-வது ஓவரை நாகர்கோட்டி வீசினார். இதற்குப் பிறகு, ஏற்கெனவே திட்டமிட்டபடி காய்களை நகர்த்தினார் தினேஷ் கார்த்திக். மீதமுள்ள ஏழு ஓவர்களில் 3 ஓவர்கள் நரைனுக்கு. ரஸ்ஸலுக்கும் வருண் சக்கரவர்த்திக்கும் தலா 2 ஓவர்கள். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என தைரியமாகத் திட்டத்தைச் செயல்படுத்தினார். செஸ் ஆட்டத்தின்போது இதுபோல முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்றபடி விளையாட வருவார்கள் வீரர்கள். அந்தவொரு நிலையில் கொல்கத்தா அணி நேற்று இருந்தது.

மற்ற அணிகளாக இருந்தால் இந்தத் திட்டத்தை முறியடித்திருக்கும். ஆனால் தோனி, ஜாதவ் என அடித்தாடுவதற்குத் தயங்கும் வீரர்கள் சிஎஸ்கேவில் உள்ளதால் இந்தத் திட்டம் அழகாகப் பலித்தது. 

ராயுடுவை 30 ரன்களில் வெளியேற்றினார் நாகர்கோட்டி. அது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. நரைன் அடுத்த ஓவரை வீசினார். முதல் பந்தில் 50 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த வாட்சன் காலி. பிறகு தோனியும் சாம் கரணும் களத்தில் இருந்தார்கள். நரைன் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் சாம் கரண் அடித்தாலும் திட்டத்தை மாற்றவில்லை தினேஷ் கார்த்திக். 15-வது ஓவரில் 11 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் தோனி. அடுத்ததாக ஜடேஜாவோ பிராவோவா வராமல் கெதர் ஜாதவ் உள்ளே வந்தார். இதனால் தினேஷ் கார்த்திக் நிச்சயம் குஷியாகியிருப்பார். 

ஆட்டம் தலைகீழானது. 18 பந்துகளில் 39 ரன்கள் தேவை என நிலைமை கொல்கத்தா அணிக்குச் சாதகமாக மாறியது. ரஸ்ஸலும் நரைனும் அடுத்த மூன்று ஓவர்களை வெற்றிகரமாக வீசினார்கள். இறுதியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி.

சிஎஸ்கேவின் தோல்விக்கு தோனியையோ கெதர் ஜாதவையோ மட்டுமே குறை சொல்ல முடியாது. எல்லோரும் விமர்சனம் செய்வார்கள் என்று தெரிந்தும் தீட்டிய திட்டங்களைச் சரியாக அமல்படுத்திய தினேஷ் கார்த்திக்கின் துணிச்சலை நிச்சயம் பாராட்ட வேண்டும். தனது கேப்டன் பதவிக்குத் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் ஓர் அட்டகாசமான வெற்றியை கொல்கத்தாவுக்கு வழங்கியிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT