ஐபிஎல்

டெல்லியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னௌ

1st May 2022 07:53 PM

ADVERTISEMENT

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல் தொடரின் 45ஆவது லீக் ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னெள அணி கேப்டன் கே. எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். லக்னெள அணியில் வேகபந்து வீச்சாளர் அவேஷ் கானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கிருஷ்ணப்பா கெளதம் சேர்க்கப்பட்டார். தில்லி அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. லக்னெளவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி காக்கும் ராகுலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

23 ரன்கள் எடுத்திருந்த டி காக் ஆட்டமிழந்த போதும், பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல், ஹூடா தில்லி அணி பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். அரைசதம் எடுத்த ஹூடா தனது விக்கெட்டை பறிகொடுத்தாலும், ராகுல் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் ஆடினார். 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்கள் முடிவில், மூன்று விக்கெட் இழப்புக்கு லக்னெள அணி 195 ரன்களை எடுத்தது. தில்லி அணி சார்பாக ஷர்துல் தாக்கூர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையும் படிக்க- தோனி தலைமையில் களமிறங்கும் சிஎஸ்கே: ஹைதராபாத் பந்து வீச்சு

ADVERTISEMENT

இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடின இலக்கை நோக்கி தில்லி அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணியில் தொடக்கம் சரியாக அமையவில்லை. ப்ரித்வி ஷா 5, வார்னர் 3 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதன் பிறகு வந்த மிட்செல் மார்ஷ், கேப்டன் ரிஷப் பந்த் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் டெல்லி அணி சரிவிலிருந்து மீண்டது. அதிரடியாக ஆடிய மார்ஷ் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 30 பந்துகளை சந்தித்த ரிஷப் பந்த் 44 ரன்களில் வெளியேறினார். 

தொடர்ந்து களமிறங்கிய லலித் யாதவ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் களம்கண்ட ரோவ்மன் பவெல், அக்சர் படேல் டெல்லிக்கு மீண்டும் நம்பிக்கை அளித்தனர். இருப்பினும் இந்த ஜோடியை மோசின் கான் பிரித்தார். 21 பந்துகளில் 35 ரன்களுக்கு பவெல் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் கடைசி வரை போராடிய டெல்லி அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அக்சர் படேல் 42, குல்தீப் யாதவ் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

லக்னௌ அணியில் சிறப்பாக பந்துவீசிய மோசின் கான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT