ஐபிஎல்

விராட் கோலியின் அறிவிப்பால் ஆர்சிபி வீரர்களின் கவனம் திசை திரும்பியதா?: மோசமான தோல்வி பற்றி பயிற்சியாளர்

DIN

ஐபிஎல் 2021 போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கிய தினத்தில் முக்கியமான முடிவை அறிவித்தார் விராட் கோலி.

இந்த வருட ஐபிஎல் போட்டியுடன் ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும் ஆர்சிபி அணியில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி வீரர்கள் மோசமாக விளையாடித் தோற்றார்கள். கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

அபுதாபியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூா் 19 ஓவா்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 10 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் அடித்து வென்றது. வருண் சக்ரவா்த்தியும் ரஸ்ஸலும் தலா 3 விக்கெட்டுகள் எடுத்து ஆர்சிபி அணியை நிலைகுலைய வைத்தார்கள். படிக்கல் மட்டும் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரராகக் களமிறங்கிய கோலி 5 ரன்களிலும் மேக்ஸ்வெல் 10 ரன்களிலும் டி வில்லியர்ஸ் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். பின்னா் கொல்கத்தா இன்னிங்ஸில் ஷுப்மன் கில் - வெங்கடேஷ் ஐயா் ஜோடி அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. ஷுப்மன் கில் 48 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் எடுத்தார்கள். சிறப்பாகப் பந்துவீசிய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தில் இருந்த கொல்கத்தா, 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி அணி தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் விராட் கோலியின் அறிவிப்பால் ஆர்சிபி வீரர்களின் கவனம் திசை திரும்பியதா என்கிற கேள்விக்கு அந்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் கூறியதாவது:

இல்லை. கோலியின் அறிவிப்பால் நாங்கள் மோசமாகத் தோற்றோம் என நான் நினைக்கவில்லை. கவனத்தைத் திசை திருப்பும் எதையும் ஆரம்பத்திலேயே தவிர்த்து விட வேண்டும். கோலியின் அறிவிப்பு பற்றி வீரர்களுக்குத் தெரிவித்திருந்தோம். எனவே அதுபற்றி அனைத்து வீரர்களும் அறிவார்கள். கொல்கத்தாவுக்கு எதிராகத் தோற்றதற்கு அது காரணமல்ல. நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. சூழலுக்குப் பழகிக்கொள்ளாமல் விக்கெட்டுகளை வரிசையாக இழந்தோம். விரைவில் இந்த நிலையை மாற்றி நன்கு விளையாடுவோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT