ஐபிஎல்

தோல்வியின் பிடியிலிருந்து வெற்றியைப் பறித்த மும்பை: கடைசி ஓவரில் கொல்கத்தா தோல்வி

13th Apr 2021 11:21 PM

ADVERTISEMENT


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

153 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ராணா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர்.

ADVERTISEMENT

சூப்பர் தொடக்கம்:

இந்த இணை கொல்கத்தாவுக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. பவர் பிளே முடிவிலேயே அந்த அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் சேர்த்தது.

பவர் பிளேவுக்குப் பிறகு சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முயற்சித்த கில், ராகுல் சஹார் பந்தில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்தார். ஆனால், அதே ஓவரில் அவர் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

சரியத் தொடங்கியது விக்கெட்டுகள்:

அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதியும் சஹாரின் அடுத்த ஓவரில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் சரிந்தபோதிலும் ராணா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரில் தொடர்ந்து 2-வது அரைசதத்தை எட்டினார். ஆனால், கேப்டன் இயான் மார்கன் 7 ரன்களுக்கு சஹார் பந்தை சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, சஹாரின் அடுத்த ஓவரில் ராணாவும் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் ஷகிப் அல் ஹசன் 9 ரன்களுக்கு கிருனாள் பாண்டிய பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனால் கடைசி 4 ஓவர்களில் கொல்கத்தா வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆண்ட்ரே ரஸல் இருந்தாலும் விக்கெட்டுகள் விழுந்ததால் நெருக்கடி கொல்கத்தா பக்கம் இருந்தது.

ஜாஸ்பிரித் பூம்ரா வீசிய 17-வது ஓவரில் ஃப்ரீ ஹிட் கிடைத்ததால் ரஸல் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். இதனால் அந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்ததையடுத்து, கொல்கத்தா வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட்டன.

கிருனாள் பாண்டியா வீசிய 18-வது ஓவரில் ரஸல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பூம்ரா தவறவிட்டதால் ஆட்டத்தில் பதற்றம் அதிகரித்தது.

கடைசி 2 ஓவர்களில் 19 ரன்கள் தேவை:

19-வது ஓவரை பூம்ரா வீசினார். அந்த ஓவரை சிறப்பாக வீசிய பூம்ரா 4 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை:

கடைசி ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். முதல் 2 பந்துகளில் ரஸல் மற்றும் கார்த்திக்கால் முறையே தலா 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்:

3-வது பந்தில் ரஸல் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார் போல்ட். அடுத்த பந்தில் பேட் கம்மின்ஸையும் போல்டாக்கி வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தினார் போல்ட்.

கடைசி 2 பந்துகளில் கொல்கத்தா வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன. ஹர்பஜன் சிங் ஒரு பந்தில் 2 ரன்களும், கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருகட்டத்தில் கொல்கத்தா பக்கம் இருந்த வெற்றி வாய்ப்பை மும்பை சிறப்பான செயல்பாட்டால் பறித்தது.

மும்பை தரப்பில் ராகுல் சஹார் 4 விக்கெட்டுகளையும், போல்ட் 2 விக்கெட்டுகளையும், கிருனாள் பாண்டியா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Tags : MI
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT