நூல் அரங்கம்

சங்கத் தமிழ்க் கவிதை அழகியல்

18th Jan 2021 08:39 AM

ADVERTISEMENT

சங்கத் தமிழ்க் கவிதை அழகியல்-  எம். அல்போன்ஸ்;  பக்.320; ரூ.300; பொதிகை பதிப்பகம், 12, சீனிவாசபுரம், குரோம்பேட்டை, சென்னை-44.

சங்கத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் அழகியல் கூறுகள் பல்வேறு வடிவங்களில் விரவிக் காணப்படுகின்றன.  அழகு என்ற சொல்லுக்கு இணையாக எழுபது சொற்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.  

அழகியல் வெளிப்படுவதற்குக்  கலைகள் முதன்மையான சாதனமாகும். அவற்றுள் இலக்கியக்கலை முதன்மை இடத்தைப் பெறுகிறது. இலக்கியக் கலையில் கவிதைக் கலை, கவிதையின் அழகு, கவிதையின் வடிவமைப்பு, பொருள், உத்திகள், கவிதை சுவைக்கான சொல்லும் பொருளும் ஆகியவை அமைகின்றன. செய்யுளில் அமைந்திருக்கும் சொற்கள்,  உவமைகள்,  ஒலிக்கூறுகள்,  உருவங்கள், சொல்லடைகள் முதலியன "அழகியல்' என்று கூறப்படுகிறது.  

இலக்கியம் படைப்பதற்கு அடிப்படையாக இருப்பது "பாடல் சான்ற புலனெறி வழக்கு' என்கிறது தொல்காப்பியம். கவிதை இயற்றுவதற்கான இலக்கியக் கோட்பாடு என்று உரையாசிரியர்கள் இதுகுறித்து விளக்கியுள்ளனர்.  புலவர்கள் பாடல் புனைவதற்கான வழக்கு என்பதால் இதை "புலவராற்று வழக்கு' என்றும், "செய்யுள் வழக்கு' என்றும் கூறுவர். தொல்காப்பியர் கூறும் "புலனெறி வழக்கு' என்பது மேல்நாட்டு இலக்கியத் திறனாய்வாளர்களின் அழகியல் கோட்பாட்டுக்கு ஒத்ததாக அமைந்திருப்பதால், அதன் வழியாகவே சங்கத் தமிழ் இலக்கியக் கவிதைகளில் உள்ள அழகியலைப் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தும் இந்நூல், முனைவர் பட்டத்திற்கு செய்யப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அழகியல் கோட்பாடு என்பதில் தொடங்கி,  கவிதை அழகியல், அழகியலும் புலனெறியும், சங்கத் தமிழ் அழகியல்-1, 2 ஆகிய ஐந்து இயல்களின் மூலம் சங்கத் தமிழ் கவிதையில் உள்ள அழகியல் ஆய்வுப் பொருண்மைக்குள்  கொண்டு வரப்பட்டிருக்கிறது. 

கவிதை அழகியலில் கூற்றுக்கு முதன்மை இடமுண்டு. தொல்காப்பியர் கூற்று என்னும் உத்திக்கு மிகச் சிறப்பாக இலக்கணம் வகுத்துள்ளார். யார் யாரிடம் கூற்று நிகழ்த்த வேண்டும்? எவ்வகையில் அக்கூற்று அமைய வேண்டும் என்பன போன்ற தொல்காப்பிய உத்திகள் சங்கப் பாடல்களில் சிறப்பாக அமைந்து அழகுக்கு அழகு சேர்ப்பதை இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT