நூல் அரங்கம்

இந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை

18th Jan 2021 08:40 AM

ADVERTISEMENT

இந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை - மு.நீலகண்டன்;  பக்.236; ரூ.200;  கனிஷ்கா புக் ஹவுஸ், சென்னை-72;  -044- 2685  1562.

"பெண் விடுதலை என்பதும், பெண் சுதந்திரம் என்பதும் ஆண்களுக்கு எதிரானது அல்ல. பெண் விடுதலை என்பது சமூகத்தின் விடுதலையே' என்ற அடிப்படையில் பெண்ணியத்தை அணுகும் நூல். 

 1938 - ஆம் ஆண்டு பம்பாய் மாநில சட்டமன்றத்தில் அம்பேத்கர் சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்தபோது,  குடும்பக்கட்டுப்பாடு தொடர்பான தனிநபர் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.  கருவுறுவதும்,  குழந்தை பெறுவதும் முற்றிலும் பெண்கள் தங்கள் விருப்பப்படித் தெரிந்தெடுத்ததாக இருக்க  வேண்டும் என்பது அம்பேத்கரின் கருத்தாக இருந்திருக்கிறது. 

இந்திய தொழிலாளர் நலத்துறைக்கு 1942 -இல்இருந்து 1946 வரை  உறுப்பினராக  அம்பேத்கர் இருந்தபோது, மகளிருக்கான பணிப்பாதுகாப்பும், பேறு காலச் சலுகைகளும் சட்டமாக்கப்பட்டன. பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளமும், பேறுகாலச் சலுகையும், பணி  பாதுகாப்பும் வழங்குவதற்குரிய  திட்டங்களை 1945- இல்  அம்பேத்கர் அறிவித்து இருக்கிறார்.  


சுதந்திர இந்தியாவில் முதல் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அம்பேத்கர், இந்து சட்டத் தொகுப்பு கொண்டு வர முயன்றார். அதில்  பெண்களுக்கு வாரிசுரிமை வழங்கப்பட வேண்டும்; ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும்; ஒரே ஜாதி, ஒரே ஜாதி உட்பிரிவு உள்ளவர்களுடன் மட்டுமே திருமணம் என்ற விதிமுறை நீக்கப்பட வேண்டும்; தத்து எடுப்பது, விவாகரத்து ஆகியவற்றில் பெண்களுக்கான உரிமைகள் ஆகியவற்றை அவர் வழங்கிய இந்து சட்டத் தொகுப்பு முன்னிறுத்தியது. இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததையொட்டி,  அப்போது பிரதமராக இருந்த நேரு இந்து சட்டத் தொகுப்பை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் இருந்து பின்வாங்கினார்.  அதனால் தனது சட்ட அமைச்சர் பதவியை அம்பேத்கர் ராஜிநாமா செய்திருக்கிறார். 

பெண் விடுதலைக்கான அம்பேத்கரின் பங்களிப்பை விரிவாகக் கூறும் இந்நூலில், பாராளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான கட்டுரை, உலக மகளிர் தினம் தொடர்பான கட்டுரை, குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறை தொடர்பான  கட்டுரைகளும்  இடம் பெற்றிருக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT