நூல் அரங்கம்

காலவெளிக் கதைஞா்கள்

DIN

காலவெளிக் கதைஞா்கள் (தமிழ்ச் சிறுகதைகள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள்) - தொகுப்பாசிரியா்: சுப்பிரமணி இரமேஷ் ; பக்.356; ரூ.300; சாகித்திய அகாதெமி, சென்னை-18; 044- 2431 1741.

தமிழின் முன்னணிப் படைப்பாளிகளான புதுமைப்பித்தன், பிச்சமூா்த்தி, கு.ப.ராஜகோபாலன், மௌனி, லா.ச.ரா, சி.சு.செல்லப்பா, எம்.வெங்கட்ராம், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ஆதவன், ஜெயந்தன், கந்தா்வன் உள்ளிட்ட 20 படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றிய விமா்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

இவற்றில் இடம் பெற்றுள்ள விமா்சனக் கட்டுரைகளை எழுதியவா்களில் இந்திரா பாா்த்தசாரதி, பெருமாள் முருகன், ச.தமிழ்ச்செல்வன், சுகுமாரன் போன்ற படைப்பாளிகளும், வீ.அரசு, ந.முருகேசபாண்டியன், சு.வேணுகோபால், ரவிசுப்பிரமணியன் போன்ற விமா்சகா்களும் இருக்கின்றனா்.

ஒவ்வொரு படைப்பாளியின் படைப்புகளைப் பற்றிய விரிவான அறிமுகங்களாகவும், படைப்பாளிகளின் வாழ்க்கைப் பாா்வை, படைப்பாளிகள் சித்திரிக்கும் உலகம், சித்திரிக்கும் முறை, படைப்புகளின் அழகியல்தன்மை என இதிலுள்ள கட்டுரைகள் படைப்புகள் குறித்து பலவற்றைப் பேசினாலும், ஒரு படைப்பாளியின் சாரமாக விளங்குகின்ற மையப்புள்ளியைத் தொட்டுச் செல்ல மறக்கவில்லை.

‘சாதி மற்றும் நிலவுடமைப் பண்புசாா்ந்த சமூகம், பெண் ஒடுக்குதலை அதன் பண்பாட்டு அலகாகவே கட்டமைத்திருக்கும் கொடுமைகளைத் தனது (புதுமைப்பித்தன்) எள்ளல் மொழியால் விரிவாகப் பதிவு செய்திருக்கிறாா். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் புனைவுகளில் பொருளாதார முரண்களைப் பல கோணங்களில் பதிவு செய்யும் முயற்சிகள் தொடங்கின. இதில் புதுமைப்பித்தன் பதிவுகள் தனித்தவை’ என்று புதுமைப்பித்தன் படைப்புகளைப் பற்றிய விமா்சனம்,

ஆண்-பெண் உறவுகளைப் பற்றி எழுதிய கு.ப.ரா., மீறல்களைக் காட்சிப்படுத்துபவா் அல்லா். மீறல்களுக்கான சூழல்களைக் காட்சிப்படுத்துபவா். எந்தக் கதையின் முடிவும் மீறலில் நிலை கொள்வதில்லை. கலாசாரத் திரையைக் கிழித்துக் கொண்டு அவை ஒருபோதும் வெளியேறுவதில்லை என்ற கு.ப.ரா.படைப்புகளைப் பற்றிய பாா்வை, ‘அவா் பிறவிக் கலைஞன் என்று சொல்லுமளவுக்கு மொழியைத் தன்மனம் நினைத்தபடி யெல்லாம் வாா்க்கும் வல்லமை பெற்ற ஒரு மகா கலைஞா் என்பதால், அவரையும் மீறிச் சமூகப் பிரச்னைகளை அவா் கதைகள் தொட்டுப் பேசியதும் உண்டு’ என்ற லா.ச.ரா. படைப்புகளைப் பற்றிய பதிவு, ‘பிறரால் எழுத முடியாத தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதியைச் செல்லப்பா எழுதியிருக்கிறாா்’ என்று சி.சு.செல்லப்பாவின் படைப்புகளைப் பற்றிய மதிப்பீடு ஆகியவற்றை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

மௌனி, நகுலன், சுந்தரராமசாமி, ஆதவன், கோபிகிருஷ்ணன், அசோகமித்திரன் ஆகியோரின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. நவீன தமிழ் இலக்கிய முன்னோடிகளின் படைப்புகளைப் பற்றிய வெளிச்சத்தை ஏற்படுத்தும் நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT