விவாதமேடை

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து பா.ஜ.க.வை எதிர்கொள்ள திட்டமிட்டிருப்பது சரியான முடிவா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில

DIN

"கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து பா.ஜ.க.வை எதிர்கொள்ள திட்டமிட்டிருப்பது சரியான முடிவா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
 சாத்தியமே
 கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றதைத் தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து பாஜகவை எதிர்கொள்ளத் திட்டமிட்டிருப்பது நல்ல முடிவுதான். எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறிப்போவது பாஜகவுக்கே சாதகமாக அமையும். அதனைத் தவிர்க்க வேண்டுமானால், தங்களுக்குள் பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தபோதும், அவற்றையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். உண்மையாகவே அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பாடுபட்டால் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவது சாத்தியமே.
 தணிகை மணியன், சென்னை.
 பகல் கனவு
 கர்நாடகத்தில் பாஜக தோல்வியடைந்துவிட்டதால் வரும் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவைத் தோற்கடித்துவிடலாம் என எதிர்க்கட்சிகள் பகல்கனவு காண்கின்றன. நிதீஷ் குமாரின் பிரதமர் ஆசை நிறைவேறாததால் அவர் பாஜக உறவை துண்டித்துக்கொண்டுவிட்டார். ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மேல்நிலைத் தலைவர்களிடையே மோதல். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. காரணம், எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களுமே பிரதமர் கனவில் இருக்கின்றனர். இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாது.
 டி.ஜி. ஸ்ரீநிவாசன், மதுரை.
 கேள்விக்குறி
 எதிர்க்கட்சிகளின் நோக்கம் சரியானதுதான். ஆனால், எல்லா எதிர்க்கட்சிகளும் இதற்கு உடன்பட்டு செயலாற்றுமா என்பது கேள்விக்குறியே. காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வதில் தெலங்கானா, பிகார், மேற்கு வங்கம், தில்லி ஆகிய மாநில முதல்வர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதற்குக் காரணம், காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் என்பதுதான். மேலும், நிதீஷ் குமார், மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், கேஜரிவால் போன்ற தலைவர்கள் பிரதமராக விரும்புகின்றனர். எனவே ஒன்றிணைவது எளிதல்ல.
 எம். ஜோசப் லாரன்ஸ்,
 சிக்கத்தம்பூர் பாளையம்.
 உற்சாகம்
 கர்நாடகத்தில் பாஜக தோல்வியுற்றிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், எதிர்க்கட்சிகள் யார் தலைமையில் அல்லது எந்தக் கட்சியின் தலைமையில் ஒன்றிணையும் என்பதுதான் விடை தெரியாத வினாவாக உள்ளது. பெரும்பாலான மாநிலக் கட்சிகள் காங்கிரûஸ ஆதரிக்க முன்வராத நிலையே உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்த தமிழக முதல்வரும் தற்போது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைவிட யார் அமைக்கக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார். எனவே, எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட்டால் அவற்றின் எண்ணம் ஈடேறும்.
 த. யாபேத்தாசன், பேய்க்குளம்.
 உறுதி
 எதிர்க்கட்சிகள் தங்கள் கட்சியின் நலத்தைக் கருதாமல், மத்தியில் ஆளும் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்னும் ஒரே கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். தேர்தலுக்குப் பின் எக்கட்சி அதிக இடங்களைப் பிடிக்கிறதோ அக்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே பிரதமர் பதவி அளிக்கப்பட வேண்டும். இதனை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்க வேண்டும். போட்டியிடும் இடங்களைத் தேர்ந்தெடுப்பதிலும் எதிர்க்கட்சிகள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் எதிர்க்கட்சிகள் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கக்கூடும்.
 வளவ. துரையன், கடலூர்.
 குறிக்கோள்
 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக ஒரணியில்சேர்வது என்பது வரவேற்கத்தக்கது. எதிர்க்கட்சிகள் தங்கள் தனிப்பட்ட கொள்கை, கோட்பாடுகளைத் தள்ளி வைத்துவிட்டு தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். பிரதமர் வேட்பாளர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை அனைத்துக் கட்சிகளும் கூடிப்பேசி முடிவெடுத்து செயல்பட வேண்டும். தங்களுக்கான பொது செயல்திட்டம் வகுத்துக்கொண்டு அதன்படி செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் பாஜகவைவிட அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க முடியும்.
 உதயா ஆதிமூலம், திருப்போரூர்.
 வாய்ப்பு
 ஜனநாயக நாட்டில் மாற்றுக் கருத்துகளுக்கும், மாற்றுக் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் வாய்ப்பு அளிக்ககப்பட வேண்டும். அப்படி இல்லாமல் ஒற்றைத் தன்மையுடன் செயல்படுவது ஜனநாயகத்தின் அடையாளமாகாது. ஜனநாயகத்தில் வாக்காளர்கள்தான் எஜமானர்கள் என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு நிரூபித்து வருகிறார்கள். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான துணிவை கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி கொடுத்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
 மா. பழனி, கூத்தப்பாடி.
 உழைப்பு
 வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து செயல்பட வேண்டியது அவசியம். மும்முனைப் போட்டி ஏற்பட்டால் பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து விடும். ஆகவே எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு தங்கள் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உண்டு. யார் பிரதமராக வேண்டும் என்பதை தேர்தல் முடிவுகள் வந்தபின் முடிவு செய்ய அனைத்துக் கட்சிகளும் சம்மதிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கடுமையாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 சிக்கல்
 பா.ஜ.க.வை எதிர்கொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர முடிவெடுத்திருப்பது சரிதான். ஆனால் எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, பிகாரின் நிதீஷ் குமார், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஆகியோரோடு மேலும் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் பிரதமர் பதவியை எதிர்பார்த்து காய் நகர்த்தி வருகின்றனர். எனவே, இவர்கள் இணைவதில் சிக்கல் உள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களின் சுய லாபத்தைக் கருத்தில் கொள்ளாமல் ஒருங்கிணைந்தால் மட்டுமே மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வை எதிகொள்ள முடியும்.
 ந. கண்ணையன், கிருஷ்ணகிரி.
 நிதர்சனம்
 அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பொதுவான ஒருமித்தக் கொள்கையை எட்டுவதற்கு உடன்படாது என்பதே நிதர்சனம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது என்பதிலேயே எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்து உருவாகாது. அப்படியே உருவானாலும், தேர்தலில் வெற்றி பெற்றால் எல்லா எதிர்க்கட்சிகளும் பிரதமர் வேட்பாளரை ஆதரிக்குமா என்பது கேள்விக்குறியே. ஆகவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வைஎதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒரணியில் நின்று வெற்றி பெறுவது கடினமானதாகவே இருக்கும். தேர்தல் முடிந்தபின் ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சியின் மீது குறை கூறுவதில்தான் இது முடியும்.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 சந்தர்ப்பம்
 கருநாடக வெற்றி சோம்பிக் கிடந்த எதி ர்க்கட்சிகளுக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. யார் பிரதமராக வரவேண்டும் என்ற சர்ச்சைக்குள் புகாமல் மத்தியை ஆளும் பாஜகவை அகற்றுவதற்கு ஓர் அருமையான சந்தர்ப் பம் வாய்த்துள்ளது என்பதை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும். இந்த சாதக நிலையைப் பயன்படுத்தத் தவறினால் பல எதிர்க்கட்சிகள் காணாமல் போகும் நிலைக்குத் தள்ளப்படலாம். இதனை கருத்தில் கொண்டு, வேற்றுமைகளை மறந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள வேண்டும். எனவே, எதிர்க்கட்சிகளின் முடிவு சரியே.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 அரிய வாய்ப்பு
 இது சரியான முடிவு. எதிர்க்கட்சிகளுக்கு கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாமல் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களான நிதீஷ் குமார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜரிவால், சந்திரசேகர ராவ் ஆகியோர் கலந்து பேசி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியே குழு அமைத்து பொது செயல் திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். திட்டமிட்டு முயற்சி செய்தால் வெற்றிக்கனி எதிர்க்கட்சிகளுக்கு எட்டாக்கனி அல்ல.
 ந. கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT