விவாதமேடை

"காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

 கேள்விக்குறி
 பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சரியே. விமான நிலையம் அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்படும். ஏழை மக்களின் குடியிருப்புகளும் எடுத்துக்கொள்ளப்படலாம். அதனால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடும். மாற்று இடம் கொடுப்பதாலோ, வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாலோ அப்பகுதி மக்களால் தங்கள் வாழ்க்கையை கட்டமைத்துக்கொள்ள முடியாது. எனவே, வேளாண் மக்களின் வாழ்க்கையோடு விளையாடாமல், அரசு விமான நிலையம் அமைக்க வேறு இடத்தைத் தேர்வு செய்வதே நல்லது.
 என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
 வரவேற்கத்தக்கது
 ஒரு மாநிலத்தில் பெரிய நிறுவனங்களும், தொழிற்சாலைகளும், போக்குவரத்து வசதிகளும் அதிகம் அமைந்தால்தான் அம்மாநிலம் வளர்ச்சியடைந்த மாநிலமாகக் கருதப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். அந்த வகையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கதே. பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் அப்பகுதி நவீன வசதிகளைப் பெறும். வர்த்தகம் பெருகும். வெளிமாநிலத்தவர், வெளிநாட்டினர் வருகை கூடும். எந்த திட்டத்தையும் தமிழக மக்கள் எதிர்ப்பார்கள் என்கிற நிலை உருவானால் தமிழகத்தில் தொழில் தொடங்க எவரும் முன்வர மாட்டார்கள்.
 கே. ராமசாமி, கீழப்பனையூர்.
 சுற்றுச்சூழல் பாதிப்பு
 பரந்தூரில் அமையவிருக்கும் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் பெரும் பகுதி விவசாய நிலமாகவும் குடியிருப்பு பகுதிகளாகவும் இருப்பதால் ஏறக்குறைய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக வெளியேற்றப்படும் சூழல் மிகவும் கொடுமையானது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் சுற்றுச்சூழல் பாதிக்க நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பருவமழை காலத்தில் வேறு விதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். பரந்தூர் பகுதி மக்களின் எதிர்ப்பு சரியானதுதான். எனவே விமான நிலையத்துக்கு மாற்று இடத்தை தேர்வு செய்வதே நல்லது
 உதயா ஆதிமூலம், திருப்போரூர்.
 ஐயமில்லை
 இன்றைய நிலையில் மண் என்பது பொன்னை விடவும் அதிகமான மதிப்போடும், மரியாதையோடும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வேளாண்மை செய்யும் விவசாயப் பெருங்குடி மக்கள், தங்கள் நிலத்தோடு உணர்வுபூர்வமான உறவு கொண்டுள்ளனர். அவர்கள் எதை இழந்தாலும், தங்களின் நிலத்தை இழக்க மாட்டார்கள். ஒருவேளை, அவர்களின் அந்த உணர்வுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் நியாயமான முறையில் முடிவுகள் எட்டப்பட்டால், பரந்தூர் மக்கள் விமான நிலையம் அமைக்க சம்மதம் தருவார்கள் என்பதில் ஐயமில்லை. அரசு அதிகாரிகள், அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 மன வேதனை
 சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் மிகவும் அவசியம். அதனைக் கருத்தில் கொண்டுதான் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டியது அவசியம்தான். ஆனால், காலங்காலமாக தங்கள் சொந்த மண்ணில் வாழ்ந்து வருகின்ற பரந்தூர் பகுதி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மன வேதனையையும் அதிகாரிகள் எண்ணிப்பார்க்க வேண்டும். அரசு, விமான நிலையம் அமைத்தேத் தீருவது என்று முடிவெடுத்தால் பரந்தூர் பகுதிக்கு அருகிலேயே அம்மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.
 பி. சேர்முக பாண்டியன், மதுரை.
 மறுபரிசீலனை
 சென்னைக்கு புதிய விமான நிலையம் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆயினும், அது பரந்தூரில் அமைந்தால் அப்பகுதியில் உள்ள 13 கிராம மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் பாதிக்கப்படும். ஏற்கெனவே பரிசீலனையில் இருந்த இடங்களை மறுபரிசீலனை செய்யலாம். சென்னைக்கு அருகிலுள்ள புதிய இடங்களைத் தேர்வு செய்வதன் மூலமும், தமிழ்நாட்டின் இதர விமான நிலையங்களை விரிவுபடுத்துவதன் மூலமும் உள்நாட்டு வெளி நாட்டுப் பயணங்கள் அதிகரித்து தமிழ்நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதோடு பொருளாதாரமும் வேலைவாய்ப்பும் பெருக வாய்ப்பு உருவாகும்.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 வியப்பில்லை
 பரந்தூரில் அமைக்க இருக்கும் புதிய விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில் வியப்பில்லை. புதிய விமான நிலையம் தேவை என்பதில் எந்த மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் அதற்கான விலை என்ன என்பதை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் புரிந்து கொள்வதில்லை. ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் இத்திட்டத்தில் உள்ள பாதகங்களைக் கண்டு கொள்வதில்லை. நெடுஞ்சாலை, விமான நிலையம், எரிவாயு ஆய்வு என்று எல்லா திட்டங்களுக்கும் விளைநிலங்களை அழித்துக் கொண்டு இருந்தால், நாளைய தலைமுறையினர் எதை சாப்பிடுவார்கள்? அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சரிதான்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 இன்றிமையாதது
 விவசாய நிலங்களின் பரப்பளவு நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருவது அனைவரும் அறிந்ததே. தொழில் வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு, சாலை விரிவாக்கம், எட்டு வழி சாலை, நான்கு வழிச்சாலை இப்படி பல்வேறு திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. தற்போது புதிய விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதில் குறைகாண முடியாது. மக்கள்தொகை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே இருக்கும் சூழலில் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது.
 மா. பழனி, கூத்தப்பாடி.
 காலத்தின் கட்டாயம்
 அண்மைக்காலமாக, புவியின் தட்பவெப்ப மாறுதல் காரணமாக தமிழகத்தில் பருவமழை அளவு அதிகரித்து இருப்பது யாவரும் அறிந்த ஒன்று. மேலும் விவசாய நிலத்தை விமான நிலையமாக மாற்றும் வேலை மிக அதிக செலவுகளை ஏற்படுத்தும் திட்டம் ஆகும். மேலும் விமான நிலையத்துடன் தொடர்புகொள்ளும் சாலைப் பகுதியும் மழைக்காலங்களில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, விளைநிலங்கள் இல்லாத வேறு இடத்தை மாநில அரசு தேடும் பணியில் ஈடுபடவேண்டியது காலத்தின் கட்டாயம். இது போன்ற அதிக நிதி தேவைப்படும் திட்டங்களை நன்கு ஆராய்ந்த பின் தொடங்குவதே நல்லது.
 சோம. இளங்கோவன், தென்காசி.
 நிர்ப்பந்தம்
 நமது நாடு ஒரு விவசாய நாடு. ஏற்கனவே சென்னையில் விமான நிலையம் உள்ள போது பரந்தூர் பகுதியில் உள்ள 13 கிராமங்களை காலி செய்ய வைத்து 4,750 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? மக்கள் கிராம உரிமை மீட்பு பேரணி நடத்துவதற்கான முக்கிய காரணம் தங்களின் வாழ்வாதாரம் பறிபோய்விடுமோ எனும் அச்சம்தான். தரிசு நிலங்களில் மட்டுமே தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அப்பகுதியில் 3,500 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. அந்த விளைநிலங்களைத் தவிர்த்து தரிசு நிலங்களை தேர்வு செய்தால் ஆயிரக்கணக்கானோர் புலம் பெயர்வது தவிர்க்கப்படும்.
 என்.வி. சீனிவாசன், சென்னை.
 நீண்ட நாள் திட்டம்
 பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம். விமான நிலையம் அமைக்க சென்னையைச் சுற்றி பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு இறுதியில் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கு சாலைப் போக்குவரத்தும், விமானப் போக்குவரத்தும் அவசியம்தான். அரசு திட்டங்களை செயல்படுத்தும்போது மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படக்கூடாது. மேலும் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாமே ஆதரவு அளித்துள்ளன. எனவே, பரந்தூர் பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுவதே நல்லது.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேச்சரம்.
 அபாயம்
 பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் சரியானதே. அங்கு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தால் அந்தப் பகுதியை சுற்றி உள்ள 13 கிராமங்களின் விவசாய நிலங்களும், விவசாயத் தொழில் சார்ந்தோர் குடியிருக்கும் வீடுகளும் அழியக்கூடிய அபாயம் உள்ளது. புதிய விமான நிலையம் அமைப்பதால் அப்பகுதி நவீனமயமாகும். வர்த்தகம் பெருகும் என்று கூறுகின்றனர். ஆனால், அப்பகுதி மக்களின் வாழ்வாதரமான விவசாயத்தை அழித்து
 வர்த்தகத்தைப் பெருக்குவது எப்படி நியாயமாகும்?
 உஷா முத்துராமன், மதுரை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT