விவாதமேடை

மக்கள்நல மேம்பாட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பது சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

 நியாயமல்ல
 மக்கள்நல மேம்பாட்டுத் திட்டங்கள் ஜாதிவேறுபாடின்றி நலிவுற்ற அனைத்துப் பிரிவினருக்கும் செயல்படுத்தப்படுவதே சரியாதலால் அதைக் காரணம்காட்டி ஜாதிவாரி கணக்கெடுப்பைக் கோருவது நியாயமல்ல. அதே நேரம் உதவிகள் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சென்றுசேருகிறதா என்று அறியவும் அதற்குரிய நிதிஒதுக்கீடுபோதுமானதாக உள்ளதா என அறியவும் ஜாதிவாரியான தரவுகள் தேவைப்படலாம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நலிவுற்ற நிலையில் உள்ளோரை கரைசேர்த்திட ஜாதியும் மதமும் பார்க்கவேண்டிய தேவையில்லை. அரசியலுக்காக எதையும் பேசலாம் என எதிர்க்கட்சியினர் எண்ணுவது தவறு.
 த. முருகவேள், விழுப்புரம்.
 சமத்துவம்
 ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால்தான் சமூகத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களின் எண்ணிக்கையைத் துல்லியமாக அறிய முடியும். ஜாதிகளால் ஆன நமது சமூகத்தில் அனைத்து ஜாதியினருக்கும் நீதி கிடைக்கும்போதுதான் சமத்துவம் ஏற்படும். இனி ஜாதி ஒழியப் போவதில்லை என்றாலும் ஒவ்வொரு ஜாதியிலும் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்று துல்லியமாகக் கணக்கிடப்பட்டால் ஒதுக்கீட்டுக்கு அது உதவியாக இருக்கும். எனவே ஜாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தி மக்கள்நலத் திட்டங்
 களைச் சிறப்பாகச் செயல்படுத்தி சமூகநீதியைப் பாதுகாப்பதே சரியாக இருக்கும்.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 துரதிருஷ்டவசமானது
 இது மிகத் தவறான யோசனை. ஒரு தேசிய கட்சியின் தலைவர் ஜாதிவாரி கணக்கெடுப்பைக் கோருவது துரதிருஷ்டவசமானது. ஜாதி ரீதியான கணக்கெடுப்பில் எந்த ஜாதியில் பெரும்பான்மை மக்கள் உள்ளனரோ அந்த இன மக்களைத்தான் நலத்திட்டங்கள் சென்றடையும். பொருளாதார ரீதியான கணக்கெடுப்பே எல்லா ஜாதியிலும் உள்ள அடித்தட்டு மக்களுக்கு மக்கள்நல திட்டங்கள் சென்றடைய உதவும். உலகமே இன்று ஒரு கிராமமாக சுருங்கியுள்ளது. ஆனால் ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு கிராமங்களை தனித்தனி உலகமாக மாற்றிவிடும். எனவே, இக்கருத்து சரியல்ல.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 ஜாதி உணர்வு
 மக்கள்நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்பது மக்களிடையே ஜாதி ரீதியிலான உணர்வைத் தூண்டுவதற்கு வழிகோலும். இதனால் தேவையற்ற வகையில் கலவரங்கள் ஏற்படலாம். ஒற்றுமை உணர்வோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் இந்திய மக்களின் நிம்மதி சீர்குலையும். எனவே ஜாதிய கணக்கெடுப்பிற்கு பதிலாக உண்மையான பொருளாதார அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்தலாம். அப்படிச் செய்தால், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைவருக்கும் அரசு திட்டங்கள் முறையாகச் சென்றடைவதற்கான வழிவகை உண்டாகும்.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 சமூக அமைதி
 ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என மல்லிகார்ஜுன கார்கே போன்ற மூத்த தலைவர் கூறுவது வருத்தமளிக்கிறது. நெருங்கிக் கொண்டிருக்கும் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலும், அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலும் அவரை இப்படியெல்லாம் பேச வைக்கிறது. சமூகநீதிக்கு இட ஒதுக்கீடு உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு, சமூக அமைதியைக் குலைத்துவிடக்கூடிய வாய்ப்பு உள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்த பின்னும், அரசியல்வாதிகள் ஜாதிகளை ஒழிப்பது குறித்து சிந்திக்காமல் ஜாதிகளை வளர்ப்பது குறித்து சிந்திப்பது கவலையளிக்கிறது.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 மாற்றம்
 இப்பொழுது ஒவ்வொரு ஜாதியினரும் தங்கள் ஜாதியில் இத்தனை லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள் கூறுகிறபடி எல்லா ஜாதியிலும் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை இந்தியாவின் மக்கள்தொகையை விட அதிகம் வருகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் ஜாதி ரீதியிலான உண்மையான மக்கள்தொகையை அறிய முடியும். சில குறிப்பிட்ட ஜாதியினருக்கு மக்கள்நல மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி முழுமையாகத் தெரிவதில்லை. எனவே, அதை அவர்கள் பயன்படுத்துவதும் இல்லை. இந்த நிலை மாற வேண்டுமானால் ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையே.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 காலத்தின் கட்டாயம்
 மல்லிகார்ஜுன கார்கே தற்போது கூறுவதை ஒரு சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், புள்ளிவிவரங்களை சேகரிக்க முடியும். அதை அடிப்படையாகக் கொண்டு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு மற்றும் உள் இட ஒதுக்கீடு கொண்டுவருவது எளிதாக இருக்கும். இது மட்டுமின்றி மக்கள்நல மேம்பாட்டுத் திட்டங்கள் எந்த சமூகத்தினருக்குக் கட்டாயமாகச் சென்றடைய வேண்டுமோஅந்தச் சமூகத்தினருக்கு அதனைக் கொண்டு சேர்க்க முடியும். எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்று காலத்தின் கட்டாயம்.
 த. சத்தியசீலன், கோயம்புத்தூர்.
 விவேகமன்று
 மக்கள்நலத் திட்டங்கள் ஜாதி ரீதியான பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைத்துப் பிரிவினருக்கும் பயன்படும் விதத்தில் அமைய வேண்டியது அவசியம். ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, அவரவரின் சமூக, பொருளாதார நிலைக்கேற்ப அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுமானால், அது மக்களிடையே தேவையற்ற மோதல்களையே உருவாக்கும். ஏற்கெனவே ஜாதிப்பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூக அமைதிக்கு பாதகமாகவே அமையும். எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு எனும் விவேகமற்ற கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கக் கூடாது.
 என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
 தேவையில்லை
 மக்கள் நல மேம்பாட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை. எல்லா அரசுநலத் திட்டங்களும் ஏழை எளிய மக்கள் பயனடைவதற்கானதுதான். ஜாதியை வைத்துத்தான் இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. நலிந்த பிரிவினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலேயே பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடித்தாலே போதும். மக்கள்நலத் திட்டங்கள் உரியவர்களைச் சென்றடைகிறதா என்பதை அரசு கண்காணித்தாலே போதும். ஜாதிவாரி கணக்கெடுப்பு மக்களிடையே மோதலை உருவாக்க வழிவகுத்துவிடும்.
 எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
 வெளிப்படை
 நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஏன் இதனைச் செய்யவில்லை என்று மல்லிகார்ஜுன கார்கே கூறுவாரா? இப்போது இதனை கார்கே கூறுவதற்குக் காரணம் அரசியல்தான் என்பது வெளிப்படை. இன்று மக்கள்நலத் திட்டங்களால் எல்லாத் தரப்பு மக்களும் பயனடைந்து வருவது கண்கூடு. இந்த நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான தேவை எதுவும் எழவில்லை. இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது மக்களிடையே தேவையற்ற வெறுப்பை உருவாக்கும். நாட்டின் பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படும்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 விபரீத யோசனை
 மல்லிகார்ஜுன கார்கேயின் கோரிக்கை தவறானது. அப்படி என்றால் இதுவரை ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்றி செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் வெற்றி பெறவில்லை என்று ஆகிவிடாதா? ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், பிரச்னைகள் அதிகரிக்கும். மக்கள்நலத் திட்டங்கள் ஜாதிகளைப் பார்த்து செயல்படுத்தப்படுவதில்லை. சமூகத்தில் பின்தங்கியுள்ள அனைவருமே மக்கள்நலத் திட்டங்களின் பயனைப் பெற தகுதி உடையவர்கள்தான். ஜாதி அடிப்படையில் நலத்திட்டங்களை செயல்படுத்த தொடங்கினால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை உருவாகவும் வாய்ப்பு உள்ளது. வேண்டாம் இந்த விபரீத யோசனை.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 புள்ளிவிவரம்
 கார்கேயின் கருத்து சரியானதே. ஒவ்வொரு சமூகத்திலும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பு மூலம்தான் துல்லியமாக அறிய முடியும். அந்த தரவுகளின் அடிப்படையில்தான் அரசு திட்டங்களை வடிவமைக்க முடியும்.
 புள்ளிவிவரங்களே அரசின் மக்கள்நலத் திட்டங்களுக்கு அடிப்படை ஆகும். அதனை அடிப்படையாகக் கொண்டே நிதி ஒதுக்கீட்டையும் செய்ய இயலும். இந்த கணக்கெடுப்பை கால வரையறை நிர்ணயித்து மேற்கொள்ள வேண்டும். அத்துடன் ஆதார் எண்ணையும் இணைத்துவிட்டால், புள்ளிவிவரங்களில் தவறுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT