விவாதமேடை

"பாட நூல்களில் இடம்பெற்றுள்ள தலைவர்கள், அறிஞர்கள் ஆகியோரின் ஜாதி பெயர்களை நீக்கும் தமிழக அரசின் நடவடிக்கை சரியானதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

 தெரியாத நிலை
 பாட நூல்களில் இடம்பெற்றுள்ள தலைவர்கள், அறிஞர்கள் ஆகியோரின் ஜாதி பெயர்களை நீக்கும் தமிழக அரசின் நடவடிக்கை சரியானதல்ல. அன்றைய தலைவர்களும், அறிஞர்களும் தங்கள் ஜாதிப்பெயரோடு சேர்த்தே அறியப்பட்டவர்கள். உ.வே. சாமிநாதையர், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை போன்றவர்களை அப்படியே குறிப்பிட்டால்தான் புரியும். அவர்களின் ஜாதியை நீக்கிவிட்டால் அவர்கள் யார் என்றே தெரியாத நிலை
 ஏற்படும்.
 கலைப்பித்தன், சென்னை.
 நல்லதல்ல
 பல ஆண்டுகளாக பலரையும் நாம் அவர்கள் ஜாதியோடு சேர்த்தே பாட நூல்களில் படித்துவிட்டதால் அப்படியே அவர்கள் பெயர் நம் மனதில் பதிந்துவிட்டது. திடீரென அதனை மாற்றுவது நல்லதல்ல. திருமலை நாயக்கரை ஒருவர் திருமலை என்று குறிப்பிட்டால் யாருக்காவது அவர் குறிப்பிடுவது திருமலை நாயக்கரைத்தான் என்று புரியுமா? ஜாதிப்பெயருடன் சேர்ந்தே அறியப்பட்டவர்களை அவ்வாறே அழைப்பதுதான் முறை.
 கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.
 அனைவரும் சமம்
 தமிழக அரசின் நடவடிக்கை சரியானதே. வேற்றுமை உணர்வைக் குறைப்பதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மட்டும் ஜாதி ஒழிந்துவிடாது என்பது சரிதான். எனினும், அனைத்து ஜாதியினரையும் அரசு சமமாக எண்ணுகிறது, சமமாக நடத்துகிறது என்கிற நம்பிக்கையை மக்களிடையே உருவாக்க இது உதவும். பாட நூல்களில் ஜாதிப்பெயர்களை நீக்குவதால் ஏற்படும் குழப்பம் விரைவில் நீங்கும் என்று நம்புவோம்.
 அ. சிவராம சேது, திருமுதுகுன்றம்.
 புரியுமா?
 கோயமுத்தூரில் ஜி.டி. தெரு என்று ஒரு தெரு உள்ளது. ஜி.டி. என்பவர் யார் என்பது எவருக்கும் தெரியாது. அத்தெருவின் பழைய பெயர் ஜி.டி. நாயுடு தெரு. அதுபோலத்தான் முத்துராமலிங்கத் தேவரை, தேவர் பெருமகனார் என்றே பலரும் அழைப்பர். அவரை முத்துராமலிங்கம் என்று குறிப்பிட்டால் யாருக்காவது புரியுமா? சிலருக்கு அடையாளமாக ஆகிவிட்ட ஜாதி பெயர்களை மாற்றத் தேவையில்லை.
 குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.
 குழப்பம்
 உ.வே. சாமிநாதையரில் ஐயர் போனால் உ.வே. சாமிநாதன் என்றாகும். இப்படியே நாமக்கல் ராமலிங்கம், முத்துலட்சுமி, முத்துராமலிங்கம், வ.உ. சிதம்பரம் என்று அறிஞர்கள், தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படும். நமது முந்தைய வரலாற்றைத் தெரிந்துகொள்ள அகழ்வாய்வில் ஈடுபட்டு வரும் நிலையில், ஏற்கெனவே இருக்கும் வரலாற்றுப் பெயர்களை மறைப்பது சரியா? பெயர்களை மாற்றுவதால் இளைய தலைமுறையினருக்கு குழப்ப நிலைதான் ஏற்படும்.
 கே. வேலுச்சாமி, தாராபுரம்.
 முதல் முயற்சி
 ஜாதியை ஒழிக்கும் நடவடிக்கைக்கான முதல் முயற்சியாக பாடப் புத்தகங்களில் இடம்பெறும் தலைவர்கள் அறிஞர்கள் பெயரில் உள்ள ஜாதி அடைமொழியை நீக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை நிச்சயமாக நாம் வரவேற்கலாம். ஜாதிப் பிரிவினைகளால் மக்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை. சமுதாயத்தில் ஜாதி வேறுபாடு காரணமாக ஆங்காங்கே அவ்வப்போது சச்சரவுகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 தொடரக்கூடாது
 முன்னர் தமிழக மாவட்டங்களுக்கு தலைவர்களின் பெயரை வைத்தபோது அவர்களின் ஜாதியையும் சேர்த்தே போட்டார்கள். அதனால் சில விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. அதன்பின் தலைவர்களின் பெயர்களை எடுத்தார்கள். பாடநூல்களை எழுதியவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அறிஞர்கள், தலைவர்களின் பெயர்களுடன் அவர்களின் ஜாதியையும் இணைத்துவிட்டார்கள். அது இனிமேல் தொடரக்கூடாது.
 கரு. பாலகிருஷ்ணன், மதுரை.
 முரண்பாடு
 ஜாதிகள் இல்லை என்று பாடம் சொல்லிக் கொடுக்கப்பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது ஜாதியின் பெயரைக் கேட்பதும், பாடக்கருத்துகளை விளக்கும்போது அதில் இடம்பெற்றுள்ள தலைவர்கள், அறிஞர்களை ஜாதியின் பெயரால் அறிமுகப்படுத்துவதும் முரண்பாடானது. தற்காலத்தில் சிலரை பயன்பாட்டு முறையில் ஜாதிப்பெயர்கள் இல்லாமலே அறிந்து கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. இது வர வேற்கத்தக்கது.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 அடையாளம்
 அக்காலத்தில் ஜாதிப்பெயரைப் பெயருடன் குறிப்பிட்டு வந்தாலும் அவையெல்லாம் ஒருவரை எளிதாக அடையாளம் கண்டறிதற்பொருட்டேயாகும். ஜாதிக்காக யாரும் கட்சிகள் நடத்தவில்லை. மறைந்த தலைவர்கள், அறிஞர்கள் ஆகியோர் அவர்கள் காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டார்களோ அவ்விதமே அவர்கள் பெயர் இருப்பதே முறையானது. பாட நூல்களில் ஜாதிப் பெயரை நீக்குவதால் ஜாதி ஒழிந்துவிடும் என்று எண்ணுவது அறிவுடைமையல்ல.
 ஆர். தீனதயாளன், காரமடை.
 வீண் பெருமை
 தமிழக அரசின் நடவடிக்கை சரியானதுதான். இது அந்தந்த தலைவர்களையும், அறிஞர்களையும் பெருமைப்படுத்த கூடிய செயல். அவர்களின் பெருமையை ஒரு ஜாதி பங்கிட்டுக் கொள்வது தடுக்கப்படும். ஆகவே ஒரு தலைவரின், அறிஞரின் சிறப்புக்கள் அனைத்தும் அவரவர் பெயருக்குத்தான் செல்ல வேண்டுமே தவிர அவர் சார்ந்த ஜாதிக்கு அல்ல. இதனால் ஜாதியை வைத்து வீண் பெருமை பேசுவது தடுக்கப்படும்.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 அவமரியாதை
 இந்த நடவடிக்கை சரியானதல்ல. தமிழுக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தமிழ்தாத்தா உ.வே. சாமிநாத ஐயர். அவரது ஆசிரியர் பெயர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸýக்கு தோளோடு தோள் நின்றவர் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர்களின் பெயர்கள் அப்படியே மனதில் பதிந்து விட்டன. தலைவர்கள் பெயரை சிதைப்பது அவர்களுக்கு செய்யும் அவமரியாதையே.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 உரிமை இல்லை
 முத்துராமலிங்க தேவர் என்றால்தான் அனைவருக்கும் தெரியும். அதைவிடுத்து முத்துராமலிங்கம் என்றால் யாருக்கு தெரியும்? பழைய தலைவர்களின் பெயரோடு அவர்களின் ஜாதி பெயரும் சேர்ந்தே இருக்கும். அப்போது அதுதான் நடைமுறையாக இருந்தது. அவர்களின் பெயரை சுருக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும் இம்முயற்சி மக்களிடையே வேற்றுமை உணர்ச்சிகளை தூண்டிவிடும் அபாயமும் இருக்கிறது.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேச்சரம்.
 தேவையற்ற வேலை
 இது தேவையற்ற வேலை. பாடநூல்களில் உள்ள தலைவர்கள் - அறிஞர்களின் பெயர்கள் ஜாதியோடு சேர்த்தே அவர்கள் வாழ்ந்த காலத்தில் சமுதாய மக்களால் அழைக்கப்பட்டவை. அவற்றை மாற்றுவதோ, பெயரின் ஒரு பகுதியாக உள்ள அவர்களின் ஜாதி பெயரினை எடுப்பதோ அவர்களது பெயர்களின் தனித் தன்மையினை அழிப்பது போன்றதே. வரலாற்றில் இடம் பெற்றவர்களின் பெயரையொட்டிய அவர்களது ஜாதியும் வரலாற்றில் இடம் பெற்றவைதான்.
 கே. ராமநாதன், மதுரை.
 சரித்திர புகழ்
 பாட நூல்களில் இடம் பெறும் பெயர்கள் இன்றைக்கு மட்டுமல்ல வரும் தலைமுறைக்கும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். உ.வே. சாமிநாத ஐயர், முத்துராமலிங்க தேவர், வல்லபபாய் படேல், முத்துலட்சுமி ரெட்டி இப்படி எண்ணற்றோர் தங்கள் ஜாதிப் பெயருடன் சரித்திரப் புகழ் பெற்றுள்ளனர். அவர்களின் பெயர்களிலிருந்து சாதிப் பெயரை நீக்குவதன் மூலம் அந்த அறிஞர்கள், தலைவர்களின் அடையாளத்தை அழிக்கிறோம்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 சரியான நடவடிக்கை
 ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள தெருக்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் ஜாதி பெயர்கள் நீக்கம் செய்யப் பட்டுள்ள நிலையில், தற்போது பாடப்புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும் தலைவர்களின் ஜாதி பெயர்களை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது சரியே. இதேபோன்று பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போதும், அரசு வேலைவாய்ப்பிலும் ஜாதி பற்றிய விவரங்களைக் கேட்காத நிலை வரவேண் டும்.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 ஏற்புடையதல்ல
 பாட நூல்களில் இடம் பெற்றுள்ள தலைவர்கள், அறிஞர்கள் ஆகியோரின் ஜாதி பெயர்களை நீக்குவது ஏற்புடையதல்ல. பாட நூல்களில் உள்ள ஜாதி பெயரை நீக்கினால் ஜாதி ஒழியாது. அக்காலத்தில் எல்லோருமே ஜாதி பார்க்காமல்தான் நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்தார்கள். இப்பொழுது ஜாதியை வைத்தே எல்லாம் நடக்கிறது. யாரும் யாரிடமும் எந்த ஏற்றத் தாழ்வும் பார்க்காமல் இருந்தாலே போதும், ஜாதி தானாக ஒழிந்து விடும்.
 எஸ்.வி. ராஜசேகர், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT