விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "நோய்த்தொற்று முடிவுக்கு வராத நிலையில் செப். 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

 சரியல்ல
 நோய்த்தொற்று முடிவுக்கு வராத நிலையில் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது சரியல்ல. நோய்த்தொற்றின் மூன்றாவது அலை குழந்தைகளையே அதிகம் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நோய்த்தொற்றுப் பரவல் திடீரென அதிகரிக்கவும் கூடும். பிள்ளைகள் பள்ளி திறக்கப்பட வேண்டும் என்று விரும்புவது உண்மைதான். ஆனாலும், மாணவர்களின் உயிர்ப்பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளித்திறப்பை அரசு தள்ளிப்போட வேண்டும்.
 குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.
 வேறு வழியில்லை
 கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படாததால், மாணவர் - ஆசிரியர் இடையே கற்றல் - கற்பித்தலில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டைவிட்டு எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே மாதக்கணக்கில் அடைந்து கிடப்பதால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டுமானால் பள்ளிகளைத் திறப்பதைத் தவிர வேறு வழியில்லை.
 பா. சிதம்பரநாதன்,
 கருவேலன்குளம்.
 கேள்விக்குறி
 தற்போது நோய்த்தொற்று கணிசமான அளவில் குறைந்திருப்பதால்தான் செப். 1 முதல் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதுவும் 9 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரப்போகிறார்கள். உலக அளவில் பரவியிருக்கும் ஒரு பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதனைக் காரணம் காட்டி பள்ளிகளைத் திறக்காமலே இருப்பது, மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடும்.
 ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
 மன அழுத்தம்
 தொடர்ந்து இணையவழியிலேயே கற்பதால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. தேர்வு இல்லாமலே தேர்ச்சி என்பது வேலைவாய்ப்புக்கு பாதகமாக அமையும். பிளஸ் 2 மதிப்பெண்ணை ஏற்காத மாணவர்களுக்கு அண்மையில் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அதுபோல நோய்த்தொற்றுப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி மேல் வகுப்புகளையாவது தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 அ. யாழினி பர்வதம், சென்னை.
 ஊகம்
 இப்போது நோய்த்தொற்றின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. அடுத்த அலை வரும் என்பது வெறும் ஊகம்தான். பள்ளிகளைத் திறந்து, ஒவ்வொரு வகுப்பிலும் பாதியளவு மாணவர்களை அனுமதிக்கலாம். பள்ளியில் பணிபுரியும் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இரு மாதங்களுக்குப் பின்னர் மழைக்காலமாதலால், பள்ளி நடவடிக்கைகள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகும். எனவே, செப்.1 அன்று பள்ளிகளைத் திறப்பதே சரி.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 கலக்கம்
 நோய்த்தொற்று முடிவுக்கு வராத நிலையில் செப். 1 முதல் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவெடுத்திருப்பது மிகவும் தவறானது. இதனால், பெற்றோர்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளனர். மாணவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிப்பார்கள் என்று கூற இயலாது. இணையவழிக் கற்றலால் மாணவர்களுக்கு கற்றலில் குறைபாடு ஏற்படுகிறது என்பது உண்மைதான். ஆனாலும், இணையவழி கல்வி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
 செ. சுவாமிநாதன், திருவானைக்கோவில்.
 சிந்திக்க வேண்டும்
 தற்போதைய நிலையில் பள்ளிகளைத் திறப்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. பதினெட்டு வயதுக்குக் கீழுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதிப்படுத்திய பின்னர் பள்ளிகளைத் திறப்பதே நல்லது. முதலில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடலாம். படிப்படியாக இப்பணியை அரசு, தனியார் பள்ளிகளின் ஒத்துழைப்போடு விரைவில் செய்து முடிக்கலாம். பொறுத்ததுதான் பொறுத்தோம் மேலும் சில மாதங்கள் பொறுத்திருபோம்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 அச்சம்
 கரோனா நோய்த்தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்று உறுதியாகக் கூறமுடியாத நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு கூறியிருப்பது மாணவர், பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருந்தால் ஓரளவு அச்சமின்றி இருக்கலாம். பள்ளித்திறப்பில் அவசரம் காட்டாமல் ஓரிரு மாதங்கள் பொறுத்திருக்கலாமே.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 நல்லதல்ல
 படிப்பை விட மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது. விட்டுப் போன படிப்பை எப்பொழுது வேண்டுமானாலும் படித்து கொள்ள முடியும். ஆனால் மாணவர்களின் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குவது நல்லதல்ல. மூன்றாவது அலை வரக்கூடும் என்கிற செய்தியால் பெற்றோர் ஏற்கெனவே அச்சத்தில் உள்ளனர். அவர்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயங்குவார்கள். எனவே, இன்னும் சிறிது காலம் சென்றபின் பள்ளிகளைத் திறக்காலாம்.
 கோ. அரங்கராசன், திருப்பத்தூர்.
 அவசரக் கோலம்
 தீநுண்மியின் மூன்றாம் அலை குழந்தைகளையே தாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பள்ளிகளைத் திறப்பது என்பது அவசரக் கோலத்தில் எடுத்த முடிவாகத்தான் தெரிகிறது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய பின் பள்ளித்திறப்பு குறித்து சிந்திக்கலாம். முதலில் மேல் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளி விட்டுப் பள்ளிகளைத் திறக்கலாம். அவசரப்பட்டு பள்ளிகளை திறக்க வேண்டாம்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 வெறுப்பு
 மாணவர்கள்பள்ளிக்குச் செல்லாமல் இணையவழியிலேயே தொடர்ந்து கற்பது சரியல்ல. அவர்களுக்கு படிப்பின் மீதே வெறுப்பு ஏற்படும் நிலை உருவாகிவிடும். அதனால்தான் செப். 1 முதல் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடிக் கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவை கட்டாயம் பின்பற்றப்பட
 வேண்டும்.
 உஷா முத்துராமன், மதுரை.
 கண்கூடு
 நோய்த்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. தற்போது நோய்த்தொற்று ஓரளவு குறைந்திருக்கிறது என்பது கண்கூடு. மேலும், அனைவருக்கும் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளைத் திறப்பதில் தவறு எதுவும் இல்லை. போக்குவரத்துக்கு தடையில்லை; கடைகளைத் திறக்க தடையில்லை; பள்ளிகளுக்கு மட்டும் ஏன் தடை? அவற்றையும் திறக்கலாம்.
 கே. அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
 மறக்க முடியாது
 நோய்த்தொற்று உச்சத்தில் இருந்தபோது மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகளும் ஆக்சிஜனும் உரிய நேரத்தில் கிடைக்காததால் ஏராளமானோர் உயிரிழந்தது போன்ற நிகழ்வுகளை நம்மால் எளிதில் மறக்க முடியாது. நோய்த்தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் முந்தைய இரு அலைகளைவிடத் தீவிரமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மாணவர்களின் உயிரை கவனத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பைத் தள்ளிப்
 போட வேண்டும்.
 கே. ராமநாதன், மூன்றுமாவடி.
 பாதிப்பு
 பள்ளிகளைத் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது சரியே. கரோனா தீநுண்மி பாதிப்பு தொடங்கிய நாளிலிருந்து இப்போதுவரை குழந்தைகள் பள்ளி செல்ல இயலாத நிலை உள்ளது. பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் நேரடிடையாகப் பயிலும் சூழலை இழந்துவிட்டது அவர்களை மிகவும் பாதித்து விட்டது. எத்தனை நாள்தான் இணையவழியில் படிப்பது என்கிற வெறுப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதே உண்மை. எனவே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.
 இரா. முத்துக்குமரன், தஞ்சாவூர்.
 சாத்தியமல்ல
 நோய்த்தொற்று முடிவுக்கு வராத நிலையில் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது சரியான செயல்பாடு அல்ல. என்னதான் தனித்தனியாக இருக்க மாணவர்களை அறிவுறுத்தினாலும் அவர்கள் ஒன்றாகக் கூடுவதைக் கண்காணிக்கவோ தடுக்கவோ இயலாது. ஒரு பள்ளியில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டாலும், அது வேகமாக பரவக்கூடும். அதனைக் கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல. மாணவர்களின் உயிருடன் விளையாடுவது மிகவும் ஆபத்தானது.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 முதல் படி
 அரசின் இந்த முடிவு வரவேற்புக்குரிய ஒன்று. முதல் படியாக 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதே நேரத்தில் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. பாட நேரத்தைக் குறைக்கலாம்; பாடப்பகுதிகளையும் குறைத்து மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கலாம்; சுழற்சிமுறையில் மாணவர்களை வரவழைத்து கூட்டத்தைத் தவிர்க்கலாம்.
 சோ.பி. இளங்கோவன், தென்காசி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT