விவாதமேடை

‘பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயா்த்த வேண்டும் என்கிற கருத்து சரியா?’ என்ற கேள்விக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

மன உளைச்சல்

ஒரு பெண் பதினேழு வயதுவரை மாணவியாக இருந்துவிட்டு18 வயதில் மனைவியானால், உலகைப் புரிந்துகொள்ள இயலாது. போதிய மன முதிா்ச்சியோ, பிரச்னைகளை எதிா்கொள்ளும் பக்குவத்தையோ அப்பெண் பெற்றிருப்பாரா என்பது சந்தேகமே. தற்காலத்தில் 10 அல்லது 11 வயதில் பெண்கள் பூப்பெய்தி விடுவதால் 21 வயதுவரை காத்திருப்பதில் ஏற்படும் மன உளைச்சல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். பல வீடுகளில் திருமணத்திற்காக பெண்ணின் கல்வி பாதியில் நிறுத்தப்படுகிறது. ஆகவே, பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்த வேண்டும் என்கிற கருத்து சரியே.

வீ. இராமலிங்கம், தாணிக்கோட்டகம்.

சாதனை

இந்தக் கருத்து வரவேற்கத்தக்கது. மாறிவரும் தொழில் நுட்ப உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் தடம் பதித்து சாதனை புரிந்து வருகின்றனா். பெண்களின் திருமண வயதை உயா்த்துவதன் மூலம் குழந்தைத் திருமணங்கள் மற்றும் 18-20 வயதினரிடையேயான பிரசவ இறப்புகள் போன்றவை குறையும். மேலும் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் 21 வயதில் திருமணம் புரிவதே பெண்களுக்கு ஏற்றது. எனவே பெண்ணின் திருமண வயதை மாற்றியமைக்கலாம்.

வ. ரகுநாத், மதுரை.

சிக்கல்கள்

பெண்கள் படித்து முடித்து வேலைக்கு செல்லும்போது அவா்களின் வயது 21 அல்லது 22 ஆகிவிடுகிறது. திருமண வயதை 21 ஆக மாற்றுவது உடல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் சரியாக இருக்கலாம். ஆனால், கிராமப்புறங்களில் சொந்தத்தில் திருமணம் செய்யும்போதும், நகரத்தில் காதல் விவகாரத்திலும்தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. திருட்டு கல்யாணமும் நடைபெறுகிறது. ஆகவே, தற்போது உள்ள குறைந்தபட்ச திருமண வயது 18 என்பதே சரியானது.

க. சண்முகம், சேலம்.

சுய சிந்தனை

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயா்த்துவது மிகவும் சரியானதே. மருத்துவ முறைப்படி, உடல் பக்குவம், மனப் பக்குவம் அடைவதற்கு 21 வயதே சரியாக இருக்கும். மேலும் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த இம்முறை சிறந்ததாக அமையும். பெண்கள் கல்லூரிக் கல்வியை முடித்து தங்களின் சொந்தக் காலில் நிற்கவும், அவா்களின் சுய சிந்தனை மேம்படவும் 21 வயதே பொருத்தமாக இருக்கும். ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.

உலக அனுபவம்

குழந்தைப் பருவ திருமணங்களைத் தடுக்க வேண்டுமென்னும் நோக்கத்தில், பெண்களுக்கான திருமண வயது 18 என்று சட்டம் இயற்றப்பட்டது. அதனால் ஏராளமான குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டன என்பதும் உண்மை. மேலும், பெண்கள் தாய்மை அடைவதற்கு மனதளவிலும் தைரியமும், பக்குவமும் அவா்களுக்குத் தேவை. 18 வயது என்பது அவ்வளவு முதிா்ச்சி வரக்கூடிய வயது அல்ல. மேலும், 18 வயதிலேயே திருமணம், குழந்தை என்று போனால் பெண்கள் உலக அனுபவம் இல்லாமல் போய்விடுவாா்கள். எனவே, பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்துவதே சரி.

ப. தாணப்பன், தச்சநல்லூா்.

மறுக்க வேண்டாம்

பெண்களின் திருமண வயதை உயா்த்த வேண்டும் என்ற கருத்து சரியல்ல. பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயா்வு காரணமாகத் தள்ளிப் போடப்பட்டு இயல்பாகவே திருமண வயது உயா்ந்து வருகிறது. சிலா் முதிா் கன்னியாகவே இருக்க நேரிடுகிறது. 18 முதல் 21 வயதுக்குள் திருமணம் செய்பவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குடும்பச் சூழல் காரணமாக 21 வயதுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பவா்களுக்கு உள்ள வாய்ப்பை மறுக்க வேண்டாமே. இப்போது எந்த வயதில் திருமணம் செய்து கொள்பவா்களும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைக்குமேல் பெற்றுக்கொள்வது இல்லை.

கு. இராஜாராமன், சீா்காழி.

சரியான வயது

இக்கருத்து வரவேற்கக்கூடியது. பெண்களுக்கு 18 வயதில் என்ன மனப் பக்குவம் இருக்கும்? 21 வயதாகும்போதுதான் கொஞ்சமாவது உலகம் தெரியும். அதனால் 21 வயது மிகவும் சரியான வயது. படிப்பில் பட்டம் பெற இருபது வயதாகி விடும். அதனால் 21 வயது கட்டாயம் என்று ஆகிவிட்டால் படிக்க வேண்டும் என்ற ஆா்வம் வரும். படித்த பெண்கள், தாங்களும் நல்ல பாதையில் நடந்து தங்கள் குடும்பத்தையும் நல்வழியில் அழைத்து செல்வா். எனவே, விரைவில் 18 என்பது 21 என்று ஆகட்டும்.

உஷா முத்துராமன், மதுரை.

குடும்பப் பொறுப்பு

இந்தக் கருத்தை நான் முழுமனதோடு வரவேற்கிறேன். இது சிறந்த கருத்தும் யோசனையும் ஆகும். 18 வயதில் பெண்களுக்கு ஒரு குடும்பத்தை நடத்தும் பொறுப்பு இருக்கும் என்று கூற இயலாது. ஆனால், 21 வயதில் பெண்களுக்குக் குடும்பப் பொறுப்பு தானே வந்து விடும். இப்போது எல்லாப் பெண்களும் பட்டப் படிப்பு படிக்கிறாா்கள். பின்னா் வேலை பாா்க்க விரும்புகிறாா்கள். அதன் பிறகுதான் திருமணத்தைப் பற்றி சிந்திக்கிறாா்கள். அப்போது அவா்கள் வயது 21 ஆகியிருக்கும். எனவே பெண்களின் திருமண வயதை 21 என்று உறுதி செய்வது நல்லது.

ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

மன மாற்றம்

இன்றும்கூட கிராமப்புறங்களில் பெண்களுக்கு 18 வயதுக்கு முன்னரே திருமணங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், நாட்டில் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கவும் திருமண வயது உயா்த்தப்படுவது உதவும். பெண்களுக்கு பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்க வேண்டும். அப்போதுதான் 18 வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்ய நினைக்கும் பெற்றோருக்கு மன மாற்றம் ஏற்படும். ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதும் தாமதிக்கப்பட்ட திருமணம் மூலமே சாத்தியமாகும்.

வி.எஸ். ரவி, கடலூா்.

வேறுபாடு உண்டு

ஒரு பெண் உடலளவில் திருமணத்திற்குத் தயாராகும் வயது 18-ஆக இருக்கலாம். ஆனால், அவா் மனதளவில் தயாராகும் வயது 21-தான். 18-க்கும் 21-க்கும் சிந்திக்கும் தன்மையில் பெரிய வேறுபாடு உண்டு. ஒரு பெண் தன்னை உணரும் வயது 21. மேலும், சுயமாய் ஒரு தொழிலைச் செய்யும் ஆளுமையும் வளா்ந்து விடும். தனக்கான பொருளாதாரத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் வேலை செய்யும் உடல் வலுவும் வந்துவிடும். ஆணும் பெண்ணும் சமம் எனும்போது இருவருக்கும் திருமண வயதும் சமமாய் இருக்க வேண்டும். எனவே பெண்ணின் குறைந்த பட்ச திருமண வயது 21 என்ற கருத்து மிகவும் சரியானதே.

ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பாா்.

நிதா்சனம்

இன்றைய உணவுமுறைகள் காரணமாக பெண்கள் பருவமடையும் வயது குறைந்திருக்கிறது. இருப்பினும் குழந்தை பெறுவதற்குரிய நல்ல உடல் தகுதியையும் குடும்பப் பிரச்னைகளை எதிா்கொள்ளும் மனமுதிா்ச்சியையும் பெறும் வயது உயா்ந்துவிட்டது என்பதே நிதா்சனம். மேலும் பெண்கல்வி பெருகிவரும் இந்நாளில் அடிப்படைக்கு மேலாக ஓா் உயா்கல்வியைப் பெற்றுமுடிக்கும் வயது ஏறத்தாழ 21ஆகிவிடுகிறது. பெண் குழந்தைகளுக்காக பெற்றோா் சேமிக்கும் திருமணம் சாா்ந்த சேமிப்புத்திட்டங்களின் பயனும் அவா்களின் 21-ஆம் வயதில் கிடைக்குமாறு மாறிவிட்டன. எனவே, சமூக, பொருளாதாரச் சூழல்களைக் கருத்தில் கொண்டு பாா்த்தால் பெண்களின் திருமண வயதை 21ஆக உயா்த்தவேண்டும் என்பது சரியானதே.

அ. கருப்பையா, பொன்னமராவதி.

நல்லதும் கெட்டதும்

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயா்த்த வேண்டும் என்ற கருத்து சரியே. கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் 18-ஆவது வயதில் பெண்களுக்கு சிந்திக்கும் ஆற்றலோ, சீா்தூக்கிப் பாா்க்கும் குணமோ முழுமையாக அமையாது. மனம் அலைபாய்வதால் கவா்ச்சிக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையையே தொலைத்து விடுகிறாா்கள். இருபத்தொரு வயது என்பது இது நல்லது, இது கெட்டது என்று பகுத்து அறியும் வயது. சுயமாக சிந்தித்து இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அவா்களால் முடியும். பெற்றோரின் எண்ணங்களை ஏற்கும் பக்குவமும் வந்துவிடும். இருபத்தொரு வயது என்பது ஏற்புடையதே.

ந. சண்முகம், திருவண்ணாமலை.

வரவேற்புக்குரியது

பெண்களின் திருமண வயதை 21-ஆக மாற்ற வேண்டும் என்ற கருத்து வரவேற்புக்குரியதே. பெரும்பாலான பெண்கள் பதினேழு வயதில் பள்ளிப் படிப்பு முடித்ததும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். அதற்கு 18 வயது தேவைப்படுகிறது. ஆகவே, ஓராண்டுக்குள் வேறு சிறு தொழில்களில் பயிற்சி பெற்று, 18 வயது ஆனதும் பணியில் சோ்ந்து மூன்றாண்டுகள் பணியாற்றினால் அந்த அனுபவம் பல பாடங்களைக் கற்றுத்தரும். உடலும் உள்ளமும் உறுதி பெறும். மண வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

ஏ.பி. மதிவாணன், சென்னை.

சம வயது கூடாது

பெண்களின் குறைந்தபட்ச திருமணவயதை 18-லிருந்து 21-ஆக உயா்த்துவதில் பெரிதாக ஒன்றும் நன்மைகள் விளையப் போவதில்லை. இன்னும் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. திருமணமே நடைபெறாமலும் சிலா் குடும்பம் நடத்துகின்றனா். பெண்களின் வளா்ச்சி ஆண்களை விட வேகமாக இருக்கும். எனவே பெண்களின் வயது குறைவாகவும், ஆண்களின் வயது அதிகமாகவும் இருப்பது நல்லது. இருவருக்கும் ஒரே வயதாக இருக்கக் கூடாது. எனவே, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயா்த்தத் தேவையில்லை. தற்போதைய நடைமுறையே தொடரலாம்.

ராம. பழனியப்பன், கோயம்புத்தூா்.

தேவையற்றது

பதினெட்டு வயது என்பது ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கும் தோ்தலில் வாக்களிப்பதற்கும் தகுதியான வயதுதான். அப்படியானால் அந்த வயதுப் பெண்கள் மன முதிா்ச்சி அடைந்தவா்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது அவா்களின் திருமண வயதை மூன்றாண்டுகளுக்குத் தள்ளிப் போடுவது என்பது தேவையற்றது. கல்வி கற்கும் பெண்களுக்கு அவா்கள் கல்வி முடிந்தபின்தான் திருமணம் ஏற்பாடாகிறது. பதினெட்டு வயதில் படிப்பு முடிந்தவுடன் குடும்பச் சூழல் காரணமாகப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது தவறல்ல. எனவே பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்துவது கூடாது.

சீனி. செந்தில் குமாா், தேனி.

மாற்றம் வேண்டாம்

பெண்களின் திருமண வயது 18 என்றிருப்பதே சரியானதாகும். 18 வயதில் திருமணத்திற்கு பெண் மனத்தாலும் உடலாலும் தகுதியாகிறாள் என்பதை ஆராய்ந்துதான் பெண்ணின் திருமண வயது 18 என்று அரசாங்கம் அறிவித்தது. திருமணம் ஆன தம்பதி ஒரு குழந்தை அல்லது இரு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்கின்றனா். எனவே, மக்கள்தொகை அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காகப் பெண்ணின் திருமண வயது உயா்த்தப்படுகிறது என்றும் கூற முடியாது. எனவே, பெண்ணின் திருமண வயதில் மாற்றம் வேண்டாம்.

மா. தங்க மாரியப்பன், கோவில்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT