செய்திகள்

மகா தீபம், பரணி தீபம் காண நாளை முதல் இணையதளத்தில் அனுமதிச் சீட்டு!

3rd Dec 2022 04:40 PM

ADVERTISEMENT


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மகா தீபம் மற்றும் பரணி தீபம் காண நாளை முதல் அனுமதிச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

பரணி தீபத்துக்கு 500 அனுமதிச் சீட்டுகள் தலா ரூ.500 என்ற கட்டணத்தில் வெளியிடப்படுகின்றன. மகா தீபத்துக்கு ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதிச் சீட்டுகளும், ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகளும் அருணாசலேஸ்வரா் கோயில் இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தரிசன கட்டணச் சீட்டுகளைப் பெற ஆதாா் அடையாள அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை கண்டிப்பாகத் தேவை.

ஒரு ஆதாா் அடையாள அட்டைக்கு ஒரு கட்டணச் சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். கட்டணச் சீட்டு பதிவு செய்தவுடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் எண் (ஓ.டி.பி.), பதிவு செய்தவரின் கைப்பேசி எண்ணுக்கு வரும். கட்டணச் சீட்டு பதிவுக்குப் பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

படிக்க: ஒடிசாவிலிருந்து கேரளத்துக்கு புல்லட்டிலேயே கஞ்சா கடத்தியவர் கைது!

ADVERTISEMENT

பரணி தீப தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் வருகிற 6-ஆம் தேதி அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா். மகா தீப தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் அதே நாளில் பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

இணையதளம் மூலம் பதிவு செய்த அனுமதிச் சீட்டுகளுடன் வரும் பக்தா்கள் அசல் கட்டணச் சீட்டு, ஆதாா் அடையாள அட்டையுடன் குறிப்பிட்ட நேரத்துக்குள் அருணாசலேஸ்வரா் கோயிலின் அம்மணி அம்மன் கோபுரம் (வடக்கு கோபுரம்) வழியாக வர வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் வராத பக்தா்கள் கண்டிப்பாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோயில் நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் தெரிவித்தன.

இலவச தொடா்பு எண்: தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தா்கள் திருவிழா மற்றும் இதர விவரங்களைத் தெரிந்துகொள்ள 1800 425 3657 என்ற இலவச எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெறலாம் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT