செய்திகள்

செல்வ வளம் நிறைய பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வரலட்சுமி விரதம்!

தினமணி

ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னர் வரும் வெள்ளிக்கிழமையன்று வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. செல்வ வளமும், சுபிட்சமும் வீட்டில் நிறையச் செய்யும் வழிபாடு. வரம் தரும் அன்னையான ஸ்ரீ மகாலட்சுமியை வழிபட்டுப் பலன்பெற வரலட்சுமி நோன்பு எனும் இந்த விரதம் பெண்களுக்காகவே ஏற்பட்டது.

மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் 'வரலக்ஷ்மி நமஸ்துப்யம்’ க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்.

வரலட்சுமி விரதத்தின் மேன்மையைச் சொல்லும் புராணக் கதைகள் பல உண்டு. அதில் ஒன்றைப் பார்ப்போம். 

அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.

இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்வார்கள். 

சம்பிரதாயத்துடன் கடைப்பிடிப்பவர்கள்,

விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்யலாம். 

பூஜைக்குத் தேவையானவை 

மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபகலசம், தீபகலசம், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்

பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழ வகைகள்

ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை...

பூஜைக்கான முன்னேற்பாடுகள்

வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்கு மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)

பூஜையின் முடிவில் மஞ்சள் கயிற்றை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.

விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.

மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும். பின்பு ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளியை கும்குமம் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். பூஜை முடிந்த அன்றிரவு அம்மனுக்கு திருஷ்டி ஆரத்தி சுற்றி வரலட்சுமி விரதத்தை நிறைவு செய்யலாம். 

வரலட்சுமி நோன்பு வழக்கம் இருப்பவர்கள் மட்டும்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்பதிலை. யார் வேண்டுமானாலும் செய்யலாம். திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். 

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை செய்யலாம்.

பலன்கள்

வேதம் படிப்பதால் கிடைக்கும் பலன்கள் இவ்விரதத்தால் கிடைக்கும். புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

இந்த நன்னாளில் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அம்மன் கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி, பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் பிரசாதம் தரலாம். பக்தி, ஸ்லோக புத்தகங்கள் வாங்கி தரலாம். இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். 

  • குழந்தை பாக்கிய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும். 
  • ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். 
  • இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும்.
  • கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்
  • கணவன் - மனைவி இடையே மன கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து நெருக்கம் அதிகரிக்கும். 
  • பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.

அனைத்து வளங்களையும் அள்ளி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT