செய்திகள்

 பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு

24th Sep 2020 04:18 AM

ADVERTISEMENT

 

திருப்பதி: திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான புதன்கிழமை, மோகினி அவதாரத்தில் உற்சவர் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.  
ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. அதன் ஐந்தாம் நாளான புதன்கிழமை காலையில் உற்சவர் மலையப்பர் மோகினி அவதாரத்தில் தாயாரின் அவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் உடன்வர, பல்லக்கில் கோயிலுக்குள் புறப்பாடு கண்டருளினார்.
மோகினி அவதாரம் என்பதால் கண்ணாடி மண்டபத்தில் மலையப்பருக்கு அலங்காரம் நடைபெற்றது. தாயாரைப் போல் அலங்கரித்தபடி, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டு வரப்பட்ட பச்சைக் கிளிகள் மற்றும் ஜடை. மாலைகள் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு, முகத்தில் சிறு நாணம் கலந்த புன்னகையுடன் கையில் வெண்ணை உருண்டை ஏந்திய ஸ்ரீகிருஷ்ணன் உடன் வர மலையப்பர்  கோயிலுக்குள் கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். 
ஜீயர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும், வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களையும் பாராயணம் செய்தனர். இதில் தேவஸ்தான அதிகாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர். மலையப்பருக்கு நிவேதனம் சமர்ப்பித்து மீண்டும் அவரை பல்லக்கில் ரங்கநாயகர் மண்டபத்துக்கு அருகில் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஜீயர்கள் சாத்துமுறை நடத்தினர். பின்னர் மலையப்பர் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார். 
ஸ்நபன திருமஞ்சனம்:      பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மதிய வேளைகளில் உற்சவர்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்படி புதன் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை உற்சவமூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT