கட்டுரைகள்

வேண்டியது கிடைக்கும் விநாயகர் வழிபாடு

9th Sep 2021 10:00 AM

ADVERTISEMENT

• விநாயகப் பெருமானின் திருவுருவங்கள் பல. யானை முகத்துடன் காட்சி தரும் விநாயகர், பெண் வடிவிலும் சில திருத்தலங்களில் அருள்புரிகிறார். தாய் தெய்வங்கள் வரிசையில் சக்தி கணபதி, விநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி, கஜானனி, ஐங்கினி முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

• யானை முகம், கால் முதல் இடை வரை புலியின் உருவம், இடை முதல் கழுத்து வரை பெண் வடிவத்தில் அருள்புரியும் விநாயகரை "வியாக்ர சக்தி விநாயகர்' என்பர். இந்த புதுமையான வடிவத்தினை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் முன் மண்டபத்தில் காணலாம்.

• கையில் வீணையுடன் காட்சி தரும் விநாயகியின் திருவுருவை கோவை மாவட்டம், பவானி பகுதியில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ சௌந்தரநாயகி தாயார் சந்நிதியின் மேல்மண்டபத்தில் காணலாம்.

• இடுப்பிற்குக் கீழே யாளி வடிவமுடனும் கைகளில் வாள், மழு, கதை, கேடயம் ஆகியவற்றுடன் காட்சி தரும் விநாயகி திருவுருவத்தை நெல்லை மாவட்டம், வாசுதேவ நல்லூரில் உள்ள கோயிலில் தரிசிக்கலாம்.

ADVERTISEMENT

• சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பிள்ளையார்பட்டி திருத்தலத்தில் அமர்ந்த நிலையில் அருள்புரியும் கற்பக விநாயகர் இருகரங்கள் கொண்டு எழுந்தருளியுள்ளார். வலது கரத்தில் சிறிய சிவலிங்கத்தினை ஏந்தியுள்ளார். இடது கரத்தினை தொடையில் வைத்துள்ளார். இவரைச் சுற்றி ஒன்பது சர விளக்குகள் தொங்குகின்றன. அவை; நவக்கிரகங்களைக் குறிக்கின்றன.

• பிள்ளையார்பட்டி தலத்திற்கு அருகில் அமைந்துள்ள திருவீசர் நகரில் ஸ்ரீ சித்ரகுப்தர் ஆலய வளாகத்தில் அருள்புரியும் ஸ்ரீ குபேர விநாயகர் இரு திருக்கரங்களுடன் விளங்குகிறார். மேலும் பக்தர்களை ஆசீர்வதிக்கும் தோற்றத்தில் இரு கரங்களையும் சற்று தூக்கி அபயம் அளிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.

• இரு கரங்களுடன் காட்சி தரும் விநாயகர்களைப்போல் நான்கு திருக்கரங்களுடன் அருள்புரியும் விநாயகர்கள் தங்கள் கரங்களில் வேறு வகையான பொருள்களையும் வைத்திருப்பதை தரிசிக்கலாம். அந்த வகையில் சங்கரன் கோயில் திருத்தலத்தில் "சர்ப்ப விநாயகர்' தன்னிருகைகளில் சர்ப்பங்களை ஏந்தி அருள்புரிகிறார்.

• திருச்சி ஜெயம்கொண்டம் தலத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ வைரவனீச்சுவரர் ஆலயத்தில் "வில்' ஏந்திய விநாயகர் காட்சி தருகிறார். இவர், அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் ஏவுவதற்கு கற்றுக் கொடுத்ததாக சொல்வர்.

• மதுரை மாவட்டம், பேரையூர் தாலுக்கா பூலாம்பட்டி மத்தங்கரை திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள விநாயகர் கோடாரி ஏந்தி காட்சி தருகிறார்.

• முத்துப்பேட்டை- மன்னார்குடி சாலையில் உள்ள தலத்தின் தலமரம் மாமரம். அதனால் இத்தலத்திற்கு சூதவனம் என்ற பெயரும் உண்டு. அதற்கு ஏற்ப இத்தல விநாயகர் திருக்கரத்தில் மா இலையை ஏந்தி அருள்கிறார்.

• ராஜபாளையத்தை அடுத்துள்ள அமியாச்சிபட்டி எனும் ஊரில் பருத்திக்காட்டுப் பகுதியில் கோயில் கொண்டுள்ள விநாயகர் கையில் வேலுடன் காட்சி தருகிறார்.

• சேலம் நகரின் மையப்பகுதியில் "செர்ரி' சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோயிலில் அருள்புரியும் விநாயகர், தம் இரு கரங்களிலும் கொழுக்கட்டை ஏந்தியவாறு காட்சி தருகிறார்.

• விநாயகப் பெருமான் எந்தவிதத் தோற்றத்தில் காட்சி தந்தாலும் அவரை வழிபட, வேண்டியது கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

- டி.ஆர். பரிமளரங்கன்

Tags : Vinayagar Chaturthi VinayagarChaturthi vinayagar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT