பரிகாரத் தலங்கள்

இழந்த பதவி, பொருளை மீட்டுத் தரும் சொர்ண பைரவநாதசுவாமி திருக்கோயில்

27th May 2022 05:00 AM | கு.வைத்திலிங்கம்

ADVERTISEMENT

 

மலைக்கோட்டை மாநகரம், திருச்சியில் பெரியக்கடைவீதி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சொர்ண பைரவநாதசுவாமி திருக்கோயில். கடன் தொல்லை போக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

அசுரக் கணங்கள் பூலோகத்துக்கும், தேவலோகத்துக்கும் தொல்லைகள் தந்த போதெல்லாம் சிவபெருமான் தனது அம்சமாக பைரவரைத் தோற்றுவித்து, அசுரர்களை அழித்து மக்களை மகிழச் செய்தார் எனச் சொல்வதுண்டு. அந்த வகையில் பைரவர் வழிபாடு என்பது சிவன் கோயில்களின் ஒரு சிறப்பு அம்சமாகும். 

கோயில் கோபுரம்

சிவன் கோயில்களில் நடராஜர், பிரதோஷ மூர்த்தி, தட்சிணாமூர்த்தி என சிவபெருமானின் மூர்த்தி பிம்பங்கள் அமைந்திருப்பது இயல்பு. இருப்பினும் பைரவருக்கு அனைத்து சிவன் கோயில்களிலும் தனிச் சிறப்பு உண்டு. பைரவரில் பல வடிவங்கள் இருந்தாலும், பிரதானமாகக் கூறப்படுவது 64 பைரவர்கள் தான். ஒரு பைரவரிடமிருந்து எட்டு பைரவர்கள் தோன்றுவார்கள். எட்டு பைரவர்கள் 64 பைரவர்களாக அதாவது அஷ்டாஷ்ட பைரவர்களாக மாறுகின்றனர்.

ADVERTISEMENT

சொர்ண பைரவநாதசுவாமி

சனி பகவானின் குருநாதர் பைரவர். சாயாதேவிக்கும், சூரியனுக்கும் பிறந்தவர் சனி பகவான். பிறவியிலேயே முடமான சனிபகவானை, அவரது அண்ணன் எமதர்மராஜன் பலமுறை கிண்டல் செய்தார். இதனால் மனம் நொந்து  வேதனையுற்ற சனி பகவான், தனது வேதனையை  அம்மா சாயாதேவியிடம் தெரிவித்தார்.

சொர்ண பைரவநாதசுவாமி சன்னதி

உடனே அவர், மகனே சஞ்சலப்படாதே, காலபைரவரை நோக்கித் தவமிரு, அவரது அருளால் உனக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றார். தனது அம்மா கூறியவாறே சனி பகவான், காலபைரவரை நோக்கி தவமிருக்கத் தொடங்கினார். அவர் முன் தோன்றிய பைரவர், சனிபகவானுக்கு அருளாசி வழங்கினார். அவரது அருளால் சனிபகவான் நவக்கிரகங்களில் ஒருவராக ஆனார். சனி பகவான் ஈஸ்வர பட்டம் பெற்றதும் பைரவரால்தான்.

சந்தனக்காப்பு அலங்காரத்தில் சொர்ண பைரவநாதசுவாமி

சிறப்பு வாய்ந்த தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பௌர்ணமியை அடுத்து வரும் தேய்பிறைகளில் அமையும் அஷ்டமியன்று சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த நாளாகும்.  ஒவ்வொரு மாதத்திலும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு ஒவ்வொரு பெயர் உண்டு. சித்திரையில் ஸ்நாதனாஷ்டமி, வைகாசியில் சதாசிவாஷ்டமி, ஆனியில் பசுபதாஷ்டமி, ஆடியில் நீலகண்டாஷ்டமி, ஆவணியில் ஸ்தானுவாஷ்டமி,  புரட்டாசியில் சம்புகாஷ்டமி, ஐப்பசியில் ஈஸ்வராஷ்டமி, கார்த்திகையில் ருத்ராஷ்டமி, மார்கழியில் சங்கராஷ்டமி, தையில் தேவதேவாஷ்டமி, மாசியில் மகேச்வராஷ்டமி, பங்குனியில் திரியம்பகாஷ்டமி என்ற பெயர்களில் தேய்பிறை அஷ்டமி அழைக்கப்படுகிறது.

 

 தங்கக் கவசத்தில் - சொர்ண பைரவநாதசுவாமி

சிவபெருமானுடைய குமாரர்களாக ஐந்துபேரைக் கூறுவதுண்டு. அவர்கள் பஞ்ச குமாரர்கள் என அழைக்கப்படுகின்றனர். விநாயகர், முருகன், சாஸ்தா, வீரபத்திரர், பைரவர் என்பவர்களே அந்த ஐந்து குமாரர்கள். அதில், பைரவரை வழிபடத் தேய்பிறை அஷ்டமியே சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவருக்கு தமிழகத்தில் கோயில்கள் அமைந்திருப்பது அபூர்வம்தான். அப்படி அபூர்வமாக அமைந்த பைரவர் கோயில்களில் ஒன்று திருச்சியில் உள்ளது. திருச்சி பெரியக்கடைவீதியில் சொர்ண பைரவநாதசுவாமி  திருக்கோயில் என்ற பெயரை இக்கோயில் கொண்டுள்ளது.

சிறப்பு அலங்காரத்தில் சொர்ண பைரவநாதசுவாமி

அர்த்த மண்டப நுழைவுவாயிலின் இருபுறத்திலும் துவார பாலகர்கள் எழுந்தருளியுள்ளனர். கோயிலின் வடதிசையில் விசுவநாதர் - விசாலாட்சி அம்மன் எழுந்தருளியுள்ளனர். கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம்  ஆகிய அனைத்தும் கருங்கற்களால் அமையப்பட்டுள்ளது.
நின்ற கோலத்தில் சொர்ண பைரவர்

கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ள சன்னதியில், வேறு எங்கும் காணாத அமைப்பாக சிரித்த முகத்துடன் நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்மிகு சொர்ண பைரவநாதசுவாமி காட்சியளிக்கிறார். இந்த பைரவர் மலைக்கோட்டையின் காவல் தெய்வமாகவும் விளங்குகிறார்.

 

சம்புகேசுவரர் சன்னதி

இறைவனின் தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், துர்க்கை அம்மனும் எழுந்தருளியிருக்கின்றனர். கோயிலின் திருச்சுற்றில் அன்பு கணபதி, வள்ளி - தெய்வசேனா சமேத சண்முகர், சம்புகேசுவரர், அகிலாண்டேசுவரி, நந்திகேசுவரர் ஆகியோர் எழுந்தருளியிருக்கின்றனர். இதைத் தவிர வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தத்தம் தேவியருடன் வட்டவடிவிலான அமைப்பில் எழுந்தருளியுள்ளனர்.

அஷ்ட பைரவரின் சுதைச் சிற்பங்கள் 

இக்கோயிலின் உள்பிரகார சுவர் பகுதியில் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்டபைரவர், க்ரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர், சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்களும் சுதை சிற்பங்களாக எழுந்தருளப்பட்டிருக்கின்றனர். இது மற்ற பைரவர் கோயில்களில் இல்லாத தனிச் சிறப்பாக விளங்குகிறது.

வளர்பிறை அஷ்டமி - மலர்களால் சிறப்பு பூஜை

பரிகார அதிபதி 

இக்கோயில் கருவறையில் எழுந்தருளியுள்ள சொர்ண  பைரவரை வழிபடுவதாலும், ஹோமத்தில் கலந்துகொள்வதாலும் பக்தர்கள் இழந்த பதவி, பொருள், தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றை மீண்டும் பெறுவதுடன், கடன் தொல்லை, பில்லி, சூனியம், பகைகளிலிருந்து மீண்டு வரவும் இயலும் என்கின்றனர் பக்தர்கள்.

கருவறை சன்னதி முன் அமைந்துள்ள நாய் வாகனம்

தங்கள் பிரார்த்தனை பலிக்க பைரவருக்கு வடைமாலை, எலுமிச்சை பழ மாலை சாத்தி, மிளகு, பூசனிக்காய் தீபமேற்றி வழிபடுகின்றனர். மிளகு தீபம் ஏற்றி வழிபடுவதால் மன மகிழ்ச்சி, பய நிவர்த்தி, காரிய வெற்றி, பணி இடையூறு நிவர்த்தி, கலை அபிவிருத்தி, கடன் தொல்லை நிவர்த்தி போன்ற பலன்களைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பைரவரின் வாகனம் நாய் (சுவானம்) ஆகும். இக்கோயிலில் கருவறை முன்பு இந்த வாகனம் உள்ளது. நாய்க்கு துன்பம் விளைவித்தவர்கள் அதனால் தோஷம் ஏற்படாமலிருக்க, இங்குள்ள சுவானத்துக்கு பால் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கி அகவாழ்வு பெறலாம். 

தட்சிணாமூர்த்தி

தேய்பிறை அஷ்டமி வழிபாடு 

சொர்ண பைரவநாதசுவாமி  திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாள்களில் பைரவருக்கு ராசி மற்றும் நட்சத்திர பரிகார ஹோமமும், அபிஷேகமும், தங்கக்கவச அலங்காரமும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெறும். அப்போது நடைபெறும் ஹோமத்தில் தேன், உப்பு போடாமல் செய்த உளுத்தம் வடை, பழங்கள், நெய், அன்னங்கள், கொப்பரைத் தேங்காய், நவதானியம், அஷ்ட திரவியம் போன்றவை ஹோமத்தில் இடப்படும். இந்த ஹோமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சொர்ண பைரவரநாத சுவாமியை வழிபடுவர்.

மேலும் தேய்பிறை அஷ்டமியன்று ருத்ரநாம அர்ச்சனை, வேதபாராயணம், மூலமந்திர ஜபம் போன்ற வழிபாடுகளும், பைரவர் வீதியுலா வருதலும் நடைபெறும். மாதந்தோறும் வளர்பிறை அஷ்டமியில் பைரவருக்கு  சிறப்புப் பூஜை நடைபெறும். அன்று பூக்களால் பைரவருக்கு அலங்காரம் செய்யப்படும்.

தேய்பிறை அஷ்டமி தின அபிஷேகப் பொருள்கள்

கார்த்திகை மாத ஜென்மாஷ்டமி 

கார்த்திகை மாதத்தில் வரும் ஜென்மாஷ்டமி பைரவர் அவதாரம் எடுத்த நாள். அந்த நாளில் திருக்கோயில் சுவாமிக்கு 10 ஆயிரம் வடையால் ஆராதனையும், வீதியுலா வருதலும் நடைபெறும். மேலும் பங்குனி உத்திர நாள் திருக்கோயிலின் குடமுழுக்கு நாள் என்பதால், அன்றைய நாளில் பைரவருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், தங்கக்கவச அலங்காரம், தீபாராதனை போன்ற வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பிரதோஷ நாள்களில் சம்புகேசுவரர், அகிலாண்டேசுவரி அம்மன், நந்திகேசுவரர் முதலான தெய்வங்களுக்கு பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நடைதிறப்பு நேரம் 

இக்கோயில் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், தேய்பிறை அஷ்டமி தினத்தன்று காலை 7மணி முதல் மாலை 4 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

விசுவநாதர் - விசாலாட்சி சன்னதி

எப்படிச் செல்வது? 

இக்கோயில் போக்குவரத்து மிகுந்த திருச்சி பெரியக்கடைவீதியில் அமைந்துள்ளது.  டெல்டா மாவட்டங்கள்,  மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள்,  கரூர், ஈரோடு, கோவை போன்ற மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சென்னை, விழுப்புரம் போன்ற வடமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சேலம், தருமபுரி, நாமக்கல் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து நகரப் பேருந்து மூலமாக காந்தி மார்க்கெட் பகுதிக்கு வந்து, அங்கிருந்து கோயிலுக்கு நடந்து வரலாம்.  மேலும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வர வாய்ப்புள்ளவர்கள் அங்கு வந்து, அங்கிருந்து பாலக்கரை வழியாக மத்திய பேருந்து நிலையம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் நகரப் பேருந்துகளில் ஏறி, காந்தி மார்க்கெட் நிறுத்தத்தில் இறங்கி கோயிலுக்கு நடந்து  செல்லலாம்.

இதைத் தவிர திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற இடங்களில் கார், ஆட்டோ போன்ற வசதிகள் உள்ளன.

தொடர்புக்கு: கோயிலுக்கு வருபவர்கள் டி.கணேஷ் மஹாதேவ் குருக்களை 8526179839 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி

அருள்மிகு சொர்ண பைரவநாத சுவாமி திருக்கோயில்,
பெரியக்கடைவீதி,
திருச்சி - 8
 

ADVERTISEMENT
ADVERTISEMENT