பரிகாரத் தலங்கள்

தோல் நோய்களைத் தீர்க்கும் திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்

கு. வைத்திலிங்கம்

குழந்தைப் பேறு,  தோல் நோய்களைத் தீர்க்கும் வல்லமை, இழந்த செல்வத்தை மீண்டும் பெறும் வாய்ப்பு போன்றவற்றுக்கு பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், திருச்செந்துறையில் அமைந்துள்ள அருள்மிகு மானேந்தியவல்லி அம்மன் உடனுறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்.

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில். காவிரியாற்றின் தென்கரையில் அமைந்த, பாடல் பெற்ற தேவார வைப்புத் திருக்கோயில்களில் ஒன்றாகவும் திருச்செந்துறை திகழ்கிறது.

 ராஜகோபுரம்

பெருமான் செந்நிறத்துடன் ஆற்றுப்படுகையில் தோன்றியதால், இந்த ஊருக்குத் திருச்செந்துறை எனப் பெயர் வந்தது. கோயிலின் வரலாற்றையும், பழமையையும் எடுத்துரைக்கும் வகையில், இருபுறக் கருங்கல் நிலைகளிலும் கல்வெட்டுகள் அமையப் பெற்றுள்ளன. 

கோயில் வரலாற்றுச் சிறப்பு

தஞ்சாவூர் பெரியகோயிலைக் கட்டிய ராஜராஜசோழனின் பாட்டனார் முதலாம் பராந்தகச்சோழன், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திருச்சி உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். அப்போது காவிரியாற்றின் இருகரைகளும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. பௌர்ணமி அந்திப் பொழுதில் அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் புடைசூழக் காடுகளில் திருடர்களைப் பிடிக்க மன்னர் செல்வது வழக்கம். அவ்வாறு மன்னர் தனது படைகளுடன் சென்ற அந்த இடம் முழுவதும் பலாமரக் காடாக இருந்தது. 

ராஜகோபுர உள்பகுதி

மன்னர் தனது படைகளுடன் வந்தபோது அங்கு திருடர்கள் யாரும் இல்லை. அதற்கு மாறாக மான்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதையடுத்து மன்னனுக்கு மான்களை வேட்டையாடும் எண்ணம் தோன்றியது. அப்படி வேட்டையாடும்போது ஒரு மாய மான் அங்கிருந்து பெரிய மரப்பொந்தில் ஒளிந்து கொண்டது. மன்னன் எய்த அம்பு, குறி தவறி பலாமரப் பொந்தில் பட்டு, அம்புபட்ட அந்த இடத்தில் பலா மரப் பாலுக்குப் பதிலாக ரத்தம் பீரிட்டது.

துவார பாலகர்கள்

அந்த நேரத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. சிவபெருமான் சுயம்பு ரூபமாக அந்த மரத்தின் அடியில் உள்ளதாகவும், அங்கு ஒரு சிவாலயம் அமைக்குமாறும் முதலாம் பராந்தகச் சோழனுக்கு கட்டளையிட்டு, மான் மாயமானது. வில் அம்பை மன்னர் கீழே போட்டுவிட்டு, சிவபெருமான் இருக்குமிடத்தில் உயிர்வதைச் செய்து வந்துவிட்டோமோ என்று நினைத்து வருந்தினார்.  இந்த வரலாறு தஞ்சாவூர் சரசுவதி மகாலில் மன்னரால் செப்புத் தகட்டில் பதிவு செய்து, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கோயில் அமைத்தல் 

மன்னர் எவ்வளவோ முயற்சி செய்தும் சிவனை கண்ணால் பார்க்கும் பாக்கியமோ, சிவாலயம் அமைக்கும் பாக்கியமோ கிடைக்கவில்லை.  அவர் ஆண்ட பகுதியில் கோயில் கட்ட மலைகள் இல்லாத காரணத்தால் நிறைவேற்ற முடியவில்லை. அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பூதி ஆதிச்சம்பிடாரி என்ற பெரிய குந்தவை நாச்சியார், இறைவனுக்குத் திருக்கோயில் கட்டும் பணியை மேற்கொண்டார்.

கோயிலின் உள்மண்டபப் பகுதி

தன்னுடைய எல்லைக்கு வெளியே அமைச்சர்களை அனுப்பி, மேற்குத் திசையில் முசிறி, தொட்டியம், நாமக்கல் பகுதிகளிலுள்ள மலைகளிலிருந்து கல்லெடுப்பதற்கு அந்தப் பகுதி சாளுக்கிய மன்னரிடம் அனுமதி பெற்றார். பின்னர் அங்குள்ள சிறைக் கைதிகளையும், சோழ மண்டலத்திலுள்ள சிறைக் கைதிகளையும் வைத்து, கருங்கல் பாறைகளைப் பெயர்த்து  யானைகள் மூலமாக திருச்செந்துறைக்கு கொண்டு வந்தார். இதையடுத்து சிவபெருமானுக்கும், சக்திக்கும் திருக்கோயில் அமைத்து, குடமுழுக்கு நடத்தினார்.

இறைவன் சந்திரசேகர சுவாமி

அழகிய லிங்க வடிவத்தில் நாகர் குடைபிடித்தவாறு கோலம் கொண்டும், சந்திரனைத் தன் தலையில் சூடிய கோலத்திலும் காட்சியளிக்கிறார் இத்திருக்கோயில் இறைவன் சந்திரசேகர சுவாமி. இவ்வாறு அமைந்திருக்கும் உருவத்திருமேனிக்கு போகவடிவம் என்று பெயர். பௌர்ணமி தினத்தில் பராந்தகச்சோழனுக்கு அசரீரி ஒலித்ததாலும், பௌர்ணமி தினத்தில் தோன்றியதாலும், சந்திரனைக் காத்ததாலும்  இறைவன் சந்திரசேகரர் என்று அழைக்கப்படுகிறார். சேகரன் என்றால் சூடியவன், காப்பவன் என்று பொருளாகும்.

சந்திரசேகர சுவாமி திருக்கோயில் கருவறை விமானம்

இத்திருக்கோயில் சிவபெருமானின் உருவம் வேர் முடிச்சுகளாகவும், பலாப்பழத்தின் மேல் முள் போன்றும் காணப்படுகின்றன. இதுபோன்ற வடிவத்தில் இறைவன் காட்சியளிப்பது அபூர்வமானதாகும். முகத்தின் ஈசானத்திக்கிலும், தென் கிழக்குத் திக்கிலும் ருத்ரத்தை தணிக்கும் வண்ணம், இரு திரிசூலங்களை இயற்கையாகத் தாங்கி சிவபெருமான் சாந்தமாகக் காட்சி தருகிறார்.

இறைவி மானேந்தியவல்லி

இத்திருக்கோயில் இறைவி மானேந்தியவல்லி அம்மன் என்றழைக்கப்படுகிறார். மானுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாலும், மானிலிருந்து தோன்றியதாலும் அம்மனுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர். கோயிலின் இரண்டாம் கோபுரம் வழியாக முன் மண்டபத்தைக் கடந்து சென்றால், தூண்கள் நிறைந்த மண்டபப் பகுதியின் வலதுபுறத்தில் தெற்கு நோக்கியவாறு உள்மண்டபமாய் அமைந்துள்ள கருவறையில் காட்சி தருகிறார் மானேந்தியவல்லி அம்மன்.

மானேந்தியவல்லி அம்மன் சன்னதி விமானம்

நான்கு திருக்கரங்களுடன் அருளாட்சிப் புரியும் மானேந்தியவல்லி அம்மனின் ஒருகரம் காக்கும் குறிப்பைக் காட்ட, மறுகரம் அருள் வழங்கும் குறிப்பைக் காட்டுகிறது. பின் கரங்களில் மானையும், அங்குசத்தையும் ஏந்தியுள்ளார் இறைவி. இந்த அங்குசத்துக்கு மரு என்றும் பெயர் உண்டு. இறைவி அர்த்தநாரியாகக் காட்சியளிப்பதால் நினைத்த காரியம், திருமணம், தொழில் வெற்றி, புத்திர பாக்கியம், தொலைந்த செல்வங்கள் மீளும், பாக்கியம் கிடைக்கும் என்று ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன. தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் அழகிய ரூபியாகக் காட்சியளிக்கிறார் மானேந்தியவல்லி அம்மன்.

 நந்தியெம்பெருமான் சன்னதி, பலிபீடம்

பரிகாரத் தலம் 

சிவனின் உருவம் கரடுமுரடாகக் காட்சியளிப்பதால், சந்திரசேகரனுக்கு உகந்த தினமான திங்கள்கிழமையன்று தொடர்ந்து 8 வாரங்கள் நெய் தீபமேற்றி, சிவபெருமானின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியை உடலில் பூசிக் கொண்டால், உடலில் உள்ள அனைத்துவிதமான மேகநீர் தோல் நோய்கள்நீங்கும் என்றும், அம்மன் அர்த்தநாரியாக இருப்பதால் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்றும்  நாடி ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறந்த பரிகாரத் தலமாக இத்திருக்கோயில் திகழ்கிறது.

வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணியர்

சிறப்பு வாய்ந்த விமானம் 

சிவபெருமானின் கருவறை விமானமானது பாதியளவு கருங்கல்லாலும், மீதமுள்ளது சுதை வடிவிலும் சித்திரங்கள் உள்ளன. ராஜகோபுரத்தில் பஞ்சபூதங்களை அடக்கியது என்பதை உணர்த்தும் விதமாக, அவை ஐந்து நிலைகளாக அமைக்கப்பட்டுள்ளன. கோபுரத்தில் மிகச் சிறப்பாக சதுஷ்காதேவி ஐந்து முகங்களையும், பத்துக் கரங்களையும் கொண்டு அமைந்துள்ளது. மேலும் சரபேசுவரர் உருவமும், நரசிம்மர், ஹயக்கிரீசுவரர் உருவங்களும் சிறப்பாகவுள்ளன.

சிறப்பு வாய்ந்த பிள்ளையார்

இக்கோயிலில் உள்ள விநாயகர் சன்னதி சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விநாயகர் உச்சிஸ்ட கணபதி என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள விநாயகர் தன் மடியில் அம்பாளை அமர்த்தியபடி உள்ளார். இந்த சிறப்பு வேறு எங்கும் அமைந்திருக்கவில்லை. இதுதான் இக்கோயிலின் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது. இதற்கும் காரணம் உள்ளது. ஒரு காலத்தில் வல்லவாம்பாள் என்ற அரக்கர்களுக்கும், தேவர்களுக்கும் யுத்தம் நடைபெற்றபோது, தேவர்களைக் காப்பாற்ற சிவபெருமானின் உத்தரவின்படி மதயானைக் கொண்டு காட்டில் போர் நடைபெற்றது.

உச்சிஷ்ட கணபதி

அப்போது அரக்கர்கள் ஒருவரைக் கொன்றதால் நூறு பேர் அரக்கர்களாக உருவெடுத்து, போருக்கு வந்தனர். இதைக் கவனித்த விநாயகர், வல்லவாம்பாள் என்ற அரக்கியின் மூலம் அரக்கர்கள் உருவாகுவதைக் கண்டு, தன் துதிக்கையால் அந்த அரக்கியின் கர்ப்பப்பையைத் தூக்கியெறிந்தார். அதனால் போரில் அரக்கர்கள் உருவாகி வருவதைத் தடுத்து நிறுத்தினார்.

 நிருருதி விநாயகர் 

கோயில் உள்ளே செல்லும் போது உள்ள துவாரபாலகர்கள் மிகவும் பொற்கால சின்னமாகக் கருதப்பட்டு வருகின்றன. அந்த துவாரபாலகர்கள் சோழர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்டவர்கள். இதன் மூலம் சோழர்கள் காலத்தின் சிற்பக் கலையை உணரலாம்.

விஷ்ணு துர்க்கையம்மன்

சிவன், அம்பிகையை சந்திக்கும் இடத்தில் பஞ்சபூத சக்திகளை ஒரு தூணில் அமைத்துள்ளது சிறப்புக்குரியதாகும். அந்த இடத்தில் கை வைத்து வேண்டியதை நினைத்தால் நினைத்த காரியம் நிறைவேறும் எனக் கூறுவர். பஞ்சபூத தூணில் வலது கை விரல்களை வைத்து சுவாமி, அம்மனை வணங்கினால், நினைத்த காரியம் 48 நாள்களில் நிகழ்ந்து, எல்லா வளமும் பெருகும் என்று வைத்தீசுவரன் கோவிலில் உள்ள அகத்தியர், வசிஷ்டர் ஜோதிட ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

காலபைரவர், சூரியன்

பைரவர்-சூரியன்

கோயிலின் முன்மண்டப கிழக்குச் சுவரையொட்டி பைரவரும், சூரியனும் எழுந்தருளியுள்ளனர். இந்த சன்னதிக்கு அருகிலேயே நவக்கிரக நாயகர்களின் சன்னதியும் அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் வாயிலின் வலதுபுறத்தில் உச்சிஷ்ட கணபதியும், இடதுபுறத்தில் பழனியாண்டவரும் எழுந்தருளிக் காட்சியளிக்கின்றனர். இதன் இடதுபுறத்தில் ஆடல்வல்லான் உமையாளுடன் தனிமேடையில் எழுந்தருளியுள்ளார். மகாமண்டபத்துக்கும், உள் மண்டபத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நந்தியெம்பெருமான் சன்னதியும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளன.

பழனியாண்டவர் சன்னதி

விசுவநாதர்-விசாலாட்சி சன்னதி

அருள்மிகு விசாலாட்சி அம்மனுடன் விசுவநாதர் சன்னதி கொண்டுள்ளார். சிறிய வடிவிலான லிங்கத்துக்கு அருகிலேயே அம்மன் காட்சியளிப்பது சிறப்புக்குரியது. இந்த சன்னதிக்கு அருகில் மதில் சுவரையொட்டிய பகுதியில் நிருருதி விநாயகர் சன்னதியும் அமைந்துள்ளது.

விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாதர் சன்னதி

இந்த விநாயகரும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர். இதைத் தொடர்ந்து வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ளது. மேலும் இருபுறமும் யானைகள் திகழ கஜலட்சுமியும், நான்குக் கரங்களுடன் சங்கு, சக்கரங்களைக் கொண்டு விஷ்ணு துர்க்கையாக துர்க்கையம்மனும் எழுந்தருளியுள்ளனர். 

தட்சிணாமூர்த்தி

இறைவன் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி பெருமான் அழகிய சிற்பத்துடன் ஞானக்குருவாகவும், சன்னதி கோஷ்டத்தில் அர்த்தநாரீசுவரரும் எழுந்தருளியுள்ளனர். தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு பின்புறத்தில் பசுபதீசுவரர் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். 

 அர்த்தநாரீசுவரர்

சந்திரனுக்கு அபயமளித்த இறைவன்

சந்திரன், தட்சனின் 27 பெண்களையும் மணந்தார். ஆனாலும், ரோகிணி மீது தனி அன்பு செலுத்தினார் சந்திரன். இதனால் மற்ற பெண்கள் எல்லாம் வருத்தமடைய, சந்திரனை சபித்தார் தட்சன். அதனால் சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்ந்து வந்தது. இதனால் அஞ்சிய சந்திரன், சிவபெருமானிடம் தஞ்சமடைந்தார்.  இதனால் சந்திரனுக்கு  இறைவன் அபயமளித்தார். அதைத் தொடர்ந்து சந்திரனின் தேய்ந்த கலைகள் மீண்டும் வளர்ந்தன. இதைத் தொடர்ந்து சந்திரனை அவனிருக்கும் மூன்றாம் கலை நிலையில் சிவபெருமான் தனது சிரசில் சூடிக்கொண்டார். இதுவே சந்திரசேகர மூர்த்தத்தின் நிலை என்பர்.

 பசுபதீசுவரர்

பொதுவாகவே சந்திரனும், பாம்பும் பகைமை நிலையைக் கொண்டவர்கள். ஆனால், இங்குப் பாம்பையும், சந்திரனையும் ஒன்று சேர்த்து வைத்தவர் சிவபெருமான். எனவே பகைமை நிலையில் இருப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம்.

சண்டிகேசுவரர்

அன்னப்பிரசன்னம்

குழந்தைகளுக்கு அன்னப்பிரசன்னம் செய்ய சிறந்த கோயிலாகத் திருச்செந்துறை திகழ்கிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தங்களின் குழந்தைகளுக்கு அன்னப்பிரசன்னம் செய்து செல்கின்றனர். 

தல விருட்சம்

திருச்செந்துறை திருக்கோயிலின் தல விருட்சமாக பலாமரம் அமைந்துள்ளது. பலா மரங்கள் நிறைந்த பகுதியாக இவை இருந்ததால், இத்திருக்கோயிலின் தல விருட்சமாக பலாமரம் அமைந்துள்ளது தனிச் சிறப்புக்குரியது. கோயிலுக்கு வருபவர்கள் தவறாது வழிபட வேண்டியதாக தல விருட்சம் உள்ளது.

கோயிலின் தல விருட்சமான பலாமரம்

சிறப்பு வாய்ந்த மகாசிவராத்திரி

இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரிப் பெருவிழா வெகு விமரிசையாக 4 காலபூஜைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டிலும் மகா சிவராத்திரிப் பெருவிழா சிறப்பாக நடத்தப்பட்டிருக்கிறது.

நவக்கிரக நாயகர்கள்

எப்படிச் செல்வது?

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்து, கரூர் மார்க்கத்தில் கரூர், கோவை, ஈரோடு, திருப்பூர் வழியாகச் செல்லும் புறநகர்ப் பேருந்துகளிலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து முக்கொம்பு, பேட்டைவாய்த்தலை, குளித்தலை போன்ற பகுதிகளுக்குச் செல்லும் நகரப் பேருந்துகளிலும் இக்கோயிலை வந்தடையலாம்.

சென்னை போன்ற வடமாவட்டங்கள், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சத்திரம் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து நகரப் பேருந்துகளில் திருச்செந்துறை கோயிலை வந்தடையலாம். 

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்  குளித்தலை, பேட்டைவாய்த்தலை, முக்கொம்பு வழியாக திருச்செந்துறை வந்தடையலாம். குளித்தலையிலிருந்து நகரப் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்துக்கு இயக்கப்படுவதால், அதிலும் பயணித்து வரலாம். ஜீயபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து மிக அருகாமையில் கோயில் அமைந்துள்ளதால், நடந்தே வரலாம். மேலும் சத்திரம், மத்திய பேருந்து நிலையங்களிலிருந்தும், விமான நிலையத்திலிருந்தும் கார், ஆட்டோ, வேன் போன்ற வாகனங்கள் மூலம் கோயிலுக்கு வரலாம்.

தொடர்புக்கு

இக்கோயிலுக்கு வருபவர்கள்  எம்.எஸ். சுந்தரம் குருக்களை 9940872022 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி

அருள்மிகு மானேந்தியவல்லி அம்மன் உடனுறை சந்திரசேகரசுவாமி திருக்கோயில்,
திருச்செந்துறை,
ஸ்ரீரங்கம் வட்டம்,
திருச்சி மாவட்டம்.

படங்கள்: எஸ். அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT