மார்கழி உற்சவம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 28)

12th Jan 2021 04:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 28

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்

அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்

ADVERTISEMENT

குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு

உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச்

சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே

இறைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய்.

பாடியவர் - பவ்யா ஹரி

 

விளக்கம்:

முந்தைய பாசுரங்கள் இரண்டிலும் தங்களுக்கு என்னென்ன பரிசுகள் வேண்டும் என்று விண்ணப்பித்த பெண்கள், தங்களுக்கு அருளும்படியாகக் கண்ணனிடம் கோரிக்கை வைக்கிறார்கள். "மாடுகளுக்குப் பின்னாலே சென்று, மேய்ச்சல் காட்டை அடைந்தவுடனேயே கையில் கட்டியெடுத்துச் செல்லும் சோற்றை உண்பவர்கள் நாங்கள். எங்கள் குலத்தில் வந்து கண்ணா, நீ தோன்றியுள்ளாய். உன்னோடு உடன் உறவாடும் அளவுக்கு எங்களுக்கு அறிவோதிறனோ இல்லையென்றாலும், நீ பிறந்துள்ள குலத்தில் நாங்களும் பிறந்துள்ளோம் என்பதே புண்ணியம். எத்தனைக் காலமானாலும், உன்னுடனான எங்களுடைய உறவை ஒழிக்கவோ பிரிக்கவோ இயலாது. நாங்கள் படிப்பறிவில்லாத சிறு பெண்கள். உன்னைப் பலவிதமாகப் பெயர்கள் கூறி அழைத்துவிட்டோம். சினம் கொள்ளாமல் எங்களுக்கு அருளவேணும்' என்று பிரார்த்திக்கிறார்கள். 

பாசுரச் சிறப்பு:

ஆயர்பாடியில் கண்ணன் பிறந்ததால், எத்தனை எத்தனைக் காலமானாலும் அந்த உறவு இருக்கத்தான் செய்யும். பற்பல தலைமுறைகளுக்குப் பின்னரும், "கண்ணன் எங்கள் மூதாதை' என்று ஆயர்பாடியார் சொல்லிக்கொள்ள முடியும். அதுபோன்றே, எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும், இந்த உயிர் எம்பெருமானின் உடைமை என்று உறவு சொல்லிக்கொள்ள முடியும். ஜீவனுக்கும் பரமனுக்குமான உறவு, பிறவிகள் தோறும், மற்று, பிறவிகளுக்கு அப்பாற்பட்டும் தொடரும் என்பது உள்பொருள். "சிறுபேர்' என்பது ஒருமையில் பெயர் சொல்லி அழைத்தல் ஆகும். எம்பெருமான் என்று தெரிந்த பின்னர் இவ்வாறு அழைக்கலாமோ? ஆயின், இங்குச் "சிறுபேர்' என்பது பிறிதொன்று. எம்பெருமானாக இருப்பினும், சிறுவனாக வந்து, மாடும் கன்றும் மேய்த்து உடன் விளையாடுவதுதான் கண்ணனுக்கு மகிழ்ச்சி. தன்னை "நாராயணா' என்று உயர்நாமம் சொல்லி அழைத்ததற்காகச் சீறுகிறானாம். எனவே, ஆயர்பாடி அவதாரத்திற்கே உரித்தான கோவிந்த நாமம் சொல்லி அழைக்கிறார்கள். இந்தப் பாசுரத்திலும் (குறையொன்றுமில்லாத கோவிந்தா) இதன் முன் பாசுரத்திலும் (கூடாரைவெல்லும் கோவிந்தா) இன்னும் இதன் மேல்பாசுரத்திலும் (அன்று காண் கோவிந்தா), கோவிந்த நாமம் சாற்றப்படுகிறது. செயல் பெருமையோஅறிவுப் பெருமையோ இல்லாத ஜீவன்கள், இறைவனின் உயர்வையும் இறைவனோடான உறவின் அருமையையும் உணர்ந்து, பணிந்து போற்றி வணங்குவதைக் காட்டுகிற} உணர்த்துகிற பாசுரம். எந்த விரதத்திற்கும், பணிவும் தன் கட்டுப்பாடுமே முக்கியம் என்பதை வலியுறுத்துகிற பாசுரம் எனலாம். 

******

ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி - பாடல் 8

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்

மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்?

பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்

பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே!

செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்

திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி

அந்தணன் ஆவதுங் காட்டிவந் தாண்டாய்

ஆரமு தே!பள்ளி எழுந்தரு ளாயே. 


பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

 

 
பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

 

விளக்கம்:

அனுபவத்தின்பால்பட்டு இறைவனின் பெருமையை மாணிக்கவாசகர் மொழிவதாக இப்பாடல் அமைகிறது. உலகத் தோற்றத்திற்கு முதலாகவும், அனைத்து உயிர்களும் இணைகிற இறுதியாகவும், இவற்றுக்கு இடையில் வாழ்க்கையைக் காட்டுகிற நடுவாகவும் எம்பெருமானே இருக்கிறான். மும்மூர்த்திகளான பிரம்மனும்,திருமாலும், ருத்திரனும் உன்னை அறியார். அப்படியாயின் மற்றவர்களால் எவ்வாறு அறிய முடியும்? பந்தணை விரலியானபார்வதித் தாயை அழைத்துக் கொண்டு, அடியார்களின் பழங்குடில்களுக்குச் செல்லும் எம்பெருமானே, ஜோதிப் பிழம்பான வடிவம் காட்டினாய்,திருப்பெருந்துறையில் கோயில் காட்டினாய், பிற இடங்களில் அந்தண வடிவில் வந்து ஆண்டுகொண்டாய். இறைவா எழுந்திருக்கவேணும் என்றே விண்ணப்பிக்கிறார். 

பாடல் சிறப்பு:

சிவன் என்பது முழுமுதல் கடவுளைக் குறிக்கும் பெயர். படைத்தலுக்கு பிரம்மா, காத்தலுக்குத் திருமால், அழித்தலுக்கு ருத்திரன் என்னும் வரிசை, தனித்தனித் தொழில்களுக்கான அதிபதிகளைச் சுட்டுகிறது. இத்தகைய மும்மூர்த்திகள்கூட அறிய முடியாதவன், மானுடர்களுக்காக இறங்கி வருவதே இறைவனின் வான்கருணை. ஜோதி வடிவம் காட்டியது} அருவம் உருவமாக இறங்க முற்பட்ட நிலை; திருப்பெருந்துறையில் கோயில் - உருவத் திருமேனி கொள்ளும்போதுதான் கோயில்; அந்தணன் ஆனது - உயிருக்கு உதவுவதற்காக இறைவனே திருமேனி எடுத்து வந்த கருணை. திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலில், குருந்த மரத்தடியில் குரு வடிவில் மாணிக்கவாசகருக்குக் காட்சி கொடுத்த இறைவனார், அங்குக் கோயிலும் எழுப்பச் செய்தார். இவ்வரலாற்றை நினைவுகூரும் பாடல். பந்தணை விரலி - பெண்கள், பூப்பந்து வைத்து விளையாடும் வழக்கத்தைக் காட்டுகிறது. ஒரு கையில் பந்தைப் பிடித்துக் கொண்ட பார்வதி தேவி, மறு கையில் பரம சிவனாரைப் பிடித்திருக்கிறாள். அதாவது, உடைமையை (பந்து / ஜீவன்) ஒருகையிலும், உடையவனை (சிவன் / பரமன்) மறு கையிலும் பற்றி, இரண்டையும் இணைக்கிறாள்.  "பந்தார் விரலி' என்று ஆண்டாள் நாச்சியாரும் பாடியிருப்பதை (திருப். பா.18) ஒப்பிட்டு நோக்கலாம். அடியார் பழங்குடில்} ஒவ்வொரு ஜீவனும் இறைவன் வசிக்கும் தலமே ஆகும். இது தன்னுடைய பழைய இல்லம் என்பது தெரிந்த ஐயனும் அம்மையும்,  ஒவ்வொரு உள்ளத்திலும் வசிப்பதற்காக எழுந்தருள்கிறார்கள். இறைவனின் பரம கருணையைப் படம்பிடிக்கும் பாடல். 

 -டாக்டர் சுதா சேஷய்யன்

Tags : திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை மார்கழி வழிபாடு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT