செய்திகள்

அதென்ன 'டோபமைன் விரதம்'? மகிழ்ச்சிக்கான ஒரே வழி இதுதான்!

21st Jul 2022 01:57 PM | எம். முத்துமாரி

ADVERTISEMENT

சிலர் எப்போதும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். எப்படி இப்படி இருக்கிறார்கள், இருக்க முடியும் என பிறர் ஆச்சரியப்படுவதுண்டு. இதற்கு காரணம் என்ன தெரியுமா? அவர்களது மூளையில் சுரக்கும் டோபமைன்(Dopamine) எனும் ஹார்மோன்தான். 

இந்த டோபமைன் ஹார்மோன் சரியான, நிலையான அளவில் சுரக்கும்போது உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. மாறாக, இது குறைந்தால் மனக்கவலை, சோர்வு, நம்பிக்கையின்மை ஏற்படும். அதிகரிக்கும்பட்சத்தில், கோபம், போட்டி, பொறாமை உண்டாகும். 

டோபமைன் என்ற மூளையில் சுரக்கும் ஹார்மோன் ஒரு வகை நரம்பியக் கடத்தி. மகிழ்ச்சியுடன் நேரடி தொடர்புடையது. அதாவது இந்த ஹார்மோனைப் பொருத்துதான் ஒருவரது மகிழ்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், உடல் இயக்கம், நினைவாற்றல், உந்துதல் ஆகிய முக்கிய செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது. 

ஒருவர் தங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்யும்போது இந்த டோபமைன் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. அதனால்தான் பிடித்த விஷயங்களை செய்யும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

ADVERTISEMENT

ஆனால், அதேநேரத்தில் அதிக அல்லது குறைந்த அளவு டோபமைன் சுரப்பு மனநலக் கோளாறுகள் மற்றும் நரம்பியல் நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. உதாரணமாக நினைத்த விஷயங்கள் நடக்கவில்லை எனில் சிலர் ஆக்ரோஷமாக நடந்துகொள்வார்கள் இல்லையா? அப்போது டோபமைன் சுரப்பு அதிகரித்திருக்கும். 

நீங்கள் செய்யும் செயல்கள் உங்கள் உடல் இயக்கத்தைப் பாதிக்காதவாறு இருக்க வேண்டும். 

அதனால் சிறந்த வாழ்க்கைமுறைக்கு 'டோபமைன் விரதம்' கடைப்பிடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் உடல்நல நிபுணர்கள். 

இதையும் படிக்க | நிரந்தர மேக்-அப் என்பது என்ன? பாதுகாப்பானதா? சந்தேகங்களும் பதில்களும்! 

 

அதென்ன 'டோபமைன் விரதம்'? 

உங்களின் சிறந்த உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு வாழ்க்கைமுறையை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். 

மூளையில் டோபமைன் ஹார்மோன் சுரப்பை சரியான அளவில் வைப்பதற்கு போதுமான தூக்கம், உடற்பயிற்சி, யோகா, சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுதல் உள்ளிட்ட வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். 

உதாரணமாக, இரவில் அதிக நேரம் நீங்கள் மொபைல்போனை பார்த்தால் உடல் இயக்கங்களில் மாறுபாடு ஏற்படும், தூக்கம் தடைபடும், இது டோபமைன் சுரப்பை பாதிக்கிறது. இதனால் உடல் சோர்வு, அமைதியின்மை ஏற்படலாம். 

அதேபோன்று சாலையில் செல்லும்போது உங்களுக்குப் பிடித்த உணவை நுகரும்போது அதைச் சாப்பிடத் தோன்றும். அப்போது டோபமைன் சுரப்பு அதிகரிக்கும். இந்த நேரத்தில் மனத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள பழக வேண்டும். 

இதையும் படிக்க | நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் கோபம், எரிச்சல் வருமா?

என்ன செய்ய வேண்டும்? 

♦ உடற்பயிற்சி செய்ய வேண்டும், அமைதியான சூழ்நிலையில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்யலாம். 

♦ உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் விஷயங்களை கட்டுப்படுத்த வேண்டும். 

♦ சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பாஸ்ட் புட், ஜங்க் புட் உணவுகளை தவிர்க்கவும். 

♦ மனதை அமைதிப்படுத்தும் யோகா மேற்கொள்ள வேண்டும். 

♦ புத்தகங்கள் படிக்கலாம். 

♦ குறிப்பாக மொபைல் போனை அளவோடு பயன்படுத்த வேண்டும். சமூக ஊடங்கங்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். 

♦ சிக்கனமாக செலவு செய்யுங்கள். 

♦ புதியவற்றை கற்றுக்கொள்ளுங்கள். 

♦ நீங்கள் எதற்கெல்லாம் அடிமையாகிறீர்களோ அதில் இருந்து விடுபட வேண்டும். ஏனெனில், ஒரு விஷயத்திற்கு நீங்கள் அடிமையாகும்பட்சத்தில் அதிகமாக அதை நீங்கள் நுகர்வீர்கள். இதனால் டோபமைன் சுரப்பு அதிகமாகி உடலியக்கத்தில் மாற்றம் உருவாகும். 

என்ன மாற்றங்கள் ஏற்படும்? 

♦  தனிப்பட்ட முறையில் திருப்தி கிடைக்கும். முழுமையாக உணர்வீர்கள். 

♦  உங்களின் தவறான நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள இது உதவும். 

♦  கோபப்படுவது குறையும்

♦  எதற்கு, எந்த வேலைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், எதைச் செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். 

♦ உணர்ச்சியான சூழ்நிலைகளில் உங்களை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். 

♦ தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

♦ இலக்குகளை நோக்கி உங்கள் பயணம் இருக்கும். 

ஒட்டுமொத்தமாக சரியான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கும்போது உடலும் மனமும் சமநிலையில் இருந்தால் நோய் நொடியின்றி, மனச்சோர்வின்றி உற்சாகமாக, மகிழ்ச்சியாக வாழலாம். 

அந்தவகையில், நீங்கள் தினமும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க முடியவில்லை எனினும், வாரத்திற்கு இரு நாள்கள் உங்கள் மொபைல் போனைத் தவிர்த்து, அமைதியான சூழ்நிலையில் வாழ்ந்து சத்தான உணவுகளைச் சாப்பிட்டு நன்றாகத் தூங்கிப் பாருங்கள், மாற்றத்தை உணர முடியும்! 

இதையும் படிக்க | முகப்பருவினால் நடத்தையில் மாற்றம் ஏற்படுமா? காரணங்களும் சிகிச்சைகளும்!

ADVERTISEMENT
ADVERTISEMENT