செய்திகள்

நிரந்தர மேக்-அப் என்பது என்ன? பாதுகாப்பானதா? சந்தேகங்களும் பதில்களும்!

19th Jul 2022 02:55 PM

ADVERTISEMENT

அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இன்று அதிகரித்துவிட்டது. குறிப்பாக பெண்கள் தங்களை அழகாகக் காட்டிக்கொள்ள பெரிதும் மெனக்கெடுகிறார்கள். அழகு நிலையங்கள் மட்டுமின்றி இப்போது அழகுக்காக அறுவை சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. 

இதன் ஒருபகுதியாக நிரந்தர மேக்அப்' என்பது இப்போது பிரபலமான ஒன்றாக உள்ளது. இதன் மூலமாக, அன்றாடம் நீங்கள் உங்களை அழகுபடுத்திக்கொள்ள தேவையில்லை.

புருவங்களை நேர்த்திசெய்துகொள்வது, உதடுகளை தங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி கலரிங் மற்றும் வடிவமைத்துக்கொள்வது, பெர்மனண்ட் பேஷியல், நிரந்தர ஐ-லைனர் என பல சிகிச்சை முறைகள் உள்ளன. 

இதில் குறிப்பாக மைக்ரோபிளேடிங் மற்றும் லிப் டாட்டூயிங் என்பது பிரபலமாக உள்ளது. 

ADVERTISEMENT

மைக்ரோபிளேடிங் 

பெரும்பாலானோர் இன்று சாதாரணமாக ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைப்படும்போது 'த்ரெட்டிங்' என்ற முறையில் புருவங்களை திருத்திக்கொள்கிறார்கள். இதுவே உங்களுக்கு சில வருடங்களுக்கு நிரந்தரமாக வேண்டும் என்றால் 'மைக்ரோபிளேடிங்' முறைக்குச் செல்லலாம்.  

இதையும் படிக்க | நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் கோபம், எரிச்சல் வருமா?

இதன்படி உங்கள் புருவத்தை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல நீங்கள் மாற்றிக்கொள்ளலாம், உங்களுக்கு பிடித்த வண்ணத்தில் நிறமி சேர்த்து வண்ணத்தைக்கூட மாற்றலாம். புருவத்தில் இடைவெளி ஏதேனும் இருந்தால் சரிசெய்துகொள்ளலாம். புருவம் அடர்த்தியாகத் தெரிய ஒரு மையை நிரப்புகிறார்கள். இந்த புருவ சிகிச்சை, சில ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும். இதனால் மாதந்தோறும் 'த்ரெட்டிங்' செய்யத் தேவையில்லை. 

சில ஆண்டுகளுக்குப் பிறகு புருவம் மாறும்போது(மற்ற பகுதிகளில் முடி வளரும்போது) வேண்டுமெனில் இதே சிகிச்சையை மீண்டும் செய்யலாம் அல்லது சாதாரண த்ரெட்டிங் முறையைக் கடைபிடிக்கலாம். 

சிகிச்சைக்கு நிபுணர்களிடம் மட்டும் செல்வது விளைவுகளை ஏற்படுத்தாது. 

லிப் டாட்டூயிங் 

உதடுகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வடிமைத்துக்கொள்வது, நிறத்தை மாற்றிக்கொள்வதே 'லிப் டாட்டூயிங்'. இதில், உதடுகளின் அளவைக்கூட மாற்றியமைக்கலாம். இந்த சிகிச்சைக்கு உதடுகளில், ஊசி மூலமாக ஒரு மருந்து செலுத்தப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு சில வாரங்கள் ஆகலாம். அந்த நாள்களில் திரவ உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும், உதடுகளில் வேறு திரவங்கள் படக்கூடாது எனக் கட்டுப்பாடுகள் உள்ளன. 

லிப் டாட்டூ மற்றும் பிக்மென்ட்டேஷன் செய்யும்பட்சத்தில் சில ஆண்டுகளுக்கு நீங்கள் உங்கள் உதடுகளை நீங்கள் அழகுபடுத்த தேவையில்லை. 

இதற்கும் சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றே அவர்களின் மூலமாகவே செய்ய வேண்டும். 

இப்போது நிரந்தர மேக்அப்பில் இருக்கும் சந்தேகங்களைப் பார்க்கலாம். 

இதையும் படிக்க | உணவில் உப்பு அதிகம் சேர்த்தால் என்னவாகும்? - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

நிரந்தர மேக்அப்

உங்களுக்கு என்ன தேவை என்பதை முதலிலேயே முடிவு செய்துகொண்டு பின்னர் செயல்படுத்துவது நல்லது. ஏனெனில், சில வருடங்களுக்காவது இதனை மாற்ற முடியாது. சிகிச்சை செய்துகொண்டு சருமம், உதடுகள் மாறிப்போகும் விளைவுகள் எல்லாம் இந்த நிரந்தர சிகிச்சை முறையில்தான் ஏற்படுகிறது. 

பாதுகாப்பானதா? 

சிறந்த நிபுணர்களைக் கொண்டு செய்யும்பட்சத்தில் நிரந்தர அழகு சிகிச்சை பாதுகாப்பானதே. குறிப்பாக உதடு மாற்ற சிகிச்சை என்றால் அதில் நிபுணத்துவம் பெற்றவரிடம் ஆலோசனை பெற்று மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், இதனால் விளைவுகள் ஏற்பட்டாலும் அதனை உங்களால் சரிசெய்துகொள்ள முடியும். 

டாட்டூயிங் நிரந்தரமானதா?

'காஸ்மெட்டிக் டாட்டூ' மற்றும் 'ஸ்டாண்டர்டு டாட்டூ' என இரண்டு வகைகளில், காஸ்மெட்டிக் டாட்டூ என்பது கூடுதலாக நிறமியைச் சேர்ப்பதாகும். மேலும், இந்த டாட்டூ 3 முதல் 5 வருடங்கள் இருக்கும். அதில் உள்ள நிறமி 1- 2 வருடங்கள் இருக்கும். 

ஸ்டாண்டர்டு டாட்டூ என்பது காஸ்மெட்டிக் டாட்டூவைவிட மேலும் சில வருடங்கள் இருக்கும். எனினும், இரண்டுமே நிரந்தரம் அல்ல. உதடு மற்றும் புருவ மாற்ற சிகிச்சையே டாட்டூயிங் என்பது. 

கர்ப்பிணிகள் செய்யலாமா? 

கர்ப்பிணிகள் அல்லது குழந்தை பெற்று சிகிச்சை எடுத்து வரும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும். 

வலி இருக்குமா?

உதடு மற்றும் புருவ மாற்றத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சையில் வலி  என்பது ஒவ்வொருவரையும் பொருத்து மாறுபடும். நிபுணர்களைக் கொண்டு செய்யும்போது அதற்கேற்ப மயக்க மருந்து கொடுத்து வலி தெரியாமல் மேற்கொள்வார்கள். 

எத்தனை முறை செல்ல வேண்டும்? 

இதுவும் ஒவ்வொருவரின் தேவையைப் பொருத்தது. உதாரணமாக உதட்டில் டாட்டூ மற்றும் டார்க் பிக்மென்ட்டேஷன் செய்ய வேண்டும் எனில் 3 முதல் 4 முறை செல்ல வேண்டியிருக்கும். லேசான பிக்மென்ட்டேஷன் என்றால் சிகிச்சை நாள்கள் குறையலாம். 

எவ்வளவு செலவாகும்? 

மாதம் ஒருமுறை புருவத்தைத் திருத்திக்கொள்வது, தினமும் உதட்டுச் சாயம் பூசிக்கொள்வது என்பது சாதாரணமானது. ஆனால், புருவம் மற்றும் உதடு மாற்ற சிகிச்சைக்கு (இரண்டு நாள் சிகிச்சைக்கு) 25,000 முதல் 30,000 வரை செலவாகும். இடங்களைப் பொருத்து செலவும் மாறுபடும். 

நிரந்தர அழகு சிகிச்சை முறையை இப்போது நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பயன்படுத்துகிறார்கள். உணர்ச்சியுள்ள பகுதிகள் மற்றும் நிரந்தர சிகிச்சை முறை என்பதால் கவனமாக நிபுணர்களைக் கொண்டு மேற்கொள்வதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 

இதையும் படிக்க | ஐஷேடோவை எப்படிப் போட வேண்டும் தெரியுமா? இதோ 6 எளிய வழிகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT