செய்திகள்

'முந்தைய காதல்' பற்றி உங்கள் வாழ்க்கைத் துணையிடம் பேசியுள்ளீர்களா?

DIN

இந்த உலகில் ஒவ்வொரு உறவும் தனித்துவமானவை. சந்தோசம் மட்டுமின்றி துக்கம், தோல்வி என அனைத்துமே கலந்ததுதான் ஒவ்வொரு உறவும். ஒரு உறவைவிட்டு மற்றொரு உறவுடன் இணக்கமாவது மனித இயல்புதான். அதற்காக பழைய உறவு முற்றிலும் மனதில் இருந்து அழிந்துவிடுமா என்றால் இல்லை. எல்லோருக்கும் எதோ ஒரு சூழ்நிலையில் பழைய உறவுகள் நினைவில் வரத்தான் செய்யும். 

இந்த இடத்தில் பழைய உறவுகள் என்று கூறுவது முந்தைய காதல்கள். 

இன்றைய மாறிவரும் சூழ்நிலையில், காதல்களும் காதல் முறிவுகளும் சாதாரணம்தான். ஆனால், அவ்வாறு காதல் அனுபவப்பட்டவர்கள், தங்களது வாழ்க்கைத் துணையிடம் 'முதல் காதல்' அல்லது 'முந்தைய காதலைப்' பற்றி துணிந்து பேசுகிறார்களா? 

'குவாக்குவாக்' (QuackQuack) என்ற டேட்டிங் செயலி சமீபத்தில் நடத்திய ஒரு கணக்கெடுப்பில் 61 சதவீதம் பேர் தங்கள் முந்தைய காதலைப் பற்றி வாழ்க்கைத் துணையுடன் பேசியிருப்பதாகவும் விவாதித்திருப்பதாகவும் கூறியுள்ளனர். இருப்பினும், 39 சதவீதம் பேர் இது தங்கள் உறவைப் பாதிக்கலாம் என்று கவலைப்படுவதாகக் கூறினர்.

21 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளன. 

ஆனால் இந்நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரவி மிட்டல், 'உங்கள் கடந்த காலத்தைப் பற்றி உங்கள் துணையுடன் திறந்த மனதுடன் உரையாடுவது ஆரோக்கியமான உறவையும்  அவர்மீதான உங்களது நம்பிக்கையையும் அதிகரிக்கும், உங்களை மேலும் நெருக்கப்படுத்தும்' என்கிறார். 

'அவ்வாறு தைரியமாக உங்கள் முந்தைய காதல் வாழ்க்கையைப் பற்றி உங்களின் தற்போதைய வாழ்க்கைத் துணையுடன் பேசினால், உங்களின் தற்போதைய உறவு நிலையானதாகவும் உறுதியானதாகவும் நன்றாக புரிந்துகொள்ளக்கூடிய துணையைப் பெற்றுள்ளதாகவும் அர்த்தம்,' என்கிறது இந்த ஆய்வு. 

அதுமட்டுமின்றி துணையுடன் கடந்த கால வாழ்க்கையின் வலிகளைப் பகிர்ந்துகொண்ட பிறகு மனம் மிகவும் இலகுவாக, மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்வதாகத் தெரிவிக்கின்றனர் பெண்கள். 

அதேநேரம் 18 முதல் 25 வயதிற்குள்ளான 38 சதவீதம் பேர் தங்கள் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி துணையுடன் விவாதிக்க விரும்பவில்லை என்றும் அவ்வாறு கூறினால் முன்னாள் காதலனுடன் தொடர்பு இருப்பதாக ஒரு சந்தேகம் ஏற்படக் கூடும் என்றும் பின்னாளில் இது பிரச்னை ஆகலாம் என்றும் அச்சப்படுகின்றனர். 

ஆய்வு முடிவுகள் இப்படி இருந்தாலும், முன்னாள் காதல்/ காதலரைப் பற்றி பேசுவதற்கு முன்னாள் யோசித்து  முடிவெடுப்பது நல்லது. ஏனெனில், உங்கள் முந்தைய காதலை தற்போதைய வாழ்க்கைத் துணை எப்படி எடுத்துக்கொள்வார் என்று முன்னரே அறிந்துவைத்திருக்க வேண்டும். இதுகுறித்த பொதுவான விஷயங்களை அவரிடம் முன்னரே பேசி தெரிந்துகொள்ளலாம். 

காதல், பிரேக்-அப் எல்லாம் இயல்பானதுதான் என்ற மனநிலையில் அவர் இருந்தால் உங்கள் முன்னாள் காதலைப் பற்றிச் சொல்லலாம். உங்களின் தற்போதைய உறவில் விரிசல் ஏற்படக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். 

உங்களை தீவிரமாக காதலிப்பவர், உங்களை நன்றாக புரிந்துகொள்ளக் கூடியவர் என்றால் மட்டும் 'முன்னாள் காதலை' உங்கள் வாழ்க்கைத் துணையிடம் சொல்லுங்கள்.

இந்த இடத்தில் 'காதலினால் ஏற்பட்ட வலி'யை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும் ஒருவர் மீதான மற்றொருவரின் எதிர்பார்ப்பை புரிந்துகொள்ளவும் உதவும். எனினும், இது அவரவரின் சூழ்நிலையைப் பொருத்தது மட்டுமே. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT