செய்திகள்

ஃபிரிட்ஜில் இந்த பொருளையெல்லாம் வைக்காதீங்க!

16th Aug 2022 01:28 PM

ADVERTISEMENT

 

இன்றைய சூழ்நிலையில் வீட்டு உபயோக சாதனங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு உதவும் வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்சி என பொருள்கள் இன்று அடிப்படையாக, அவசியம் ஒரு வீட்டில் இருக்க வேண்டிய பொருள்களாக வரையறுக்கப்பட்டுவிட்டன. 

இதில் குளிர்சாதனப் பெட்டி(ஃபிரிட்ஜ்) என்பது உணவுப் பொருள்களை பதப்படுத்தி வைக்க பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. உணவுப் பொருள்களை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா என ஒருபுறம் கேள்வி எழும்பினாலும் இன்றைய சூழ்நிலையில் ஃபிரிட்ஜ் தேவையாகிவிட்டது. ஆனால், முடிந்தவரை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றே கூறுகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

எனினும், இன்று காய்கறி, பழங்கள், இட்லி - தோசை மாவு உள்ளிட்ட பொருள்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஃபிரிட்ஜின் தேவையும் பயன்பாடும் அதிகரித்து விட்டது. 

ADVERTISEMENT

சிலர் ஃபிரிட்ஜ் இருக்கிறது என்று கிடைத்த பொருள்களை எல்லாம் முழுவதும் நிரப்பி வைப்பார்கள், அது முற்றிலும் தவறான விஷயம். தேவையான அவசியம் வைக்க வேண்டிய பொருள்களை மட்டும் ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள். 

இதையும் படிக்க | ஒரு லிப்ஸ்டிக்...5 வழிகளில் பயன்படுத்தலாம்! எப்படி?

ஃபிரிட்ஜில் எந்த பொருள்களை எங்கெங்கு வைக்க வேண்டும்? எந்த பொருள்களை எல்லாம் வைக்கக்கூடாது என்று பார்க்கலாம். 

♦ காய்கறிகளை கழுவாமல் ஃபிரிட்ஜில்  வைக்கக் கூடாது. நன்றாக கழுவிவிட்டு வைக்க வேண்டும் அல்லது காய்கறிகளை வெட்டினால் ஒரு டப்பாவில் அடைத்து ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் மட்டுமே அதில் உள்ள சத்துகள் வீணாகாது. 

♦ அதுபோல, வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு இவற்றை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. இவற்றின் வாசனை மற்ற பொருள்களின் மீது பரவும். 

♦ தேன், காபிக்கொட்டை, தேங்காய் எண்ணெய் ஆகிய பொருள்களையும் வைக்கக்கூடாது. 

♦ சூடான பொருள்களை அப்படியே ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. 

♦ சமைக்காத இறைச்சிகளை முடிந்தவரை ஃபிரிட்ஜில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நுண்ணுயிரிகளின் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. கடையில் வாங்கி உடனே சமைப்பது நல்லது. 

♦ ஒருவேளை வைக்க நேர்ந்தால் காய்கறிகளின் அருகில் வைக்க வேண்டாம். பாலிதீன் கவரில் போட்டு ப்ரீசரில் வைக்க வேண்டும்.  பால், வெண்ணெய் ஆகிய பால் பொருள்களையும் ப்ரீசரில் வைக்க வேண்டும். அதேநேரம், தயிரை அதிக நேரம் வைக்கக் கூடாது. 

இதையும் படிக்க | சைவ உணவு சாப்பிடும் பெண்களுக்கு இப்படி ஒரு பிரச்னை வருமா?

♦ ஒட்டுமொத்தமாக சமைத்த பொருள்களை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள். சிலர் பிரிட்ஜில் வைத்து எடுத்து பிறகு சூடு செய்து சாப்பிடுவார்கள். அது உடல்நலத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். 

♦ வாழைப் பழங்களை ஃபிரிட்ஜில் வைத்தால் கறுத்துவிடும். காம்புடன் இருந்தால் வைக்கலாம். அதுபோல, ஊறுகாய்களையும் அதில் வைக்க வேண்டாம். 

♦ மாவுகளையும் வைக்கும்போது மூடியுள்ள பாத்திரத்தில் வைத்து பயன்படுத்துங்கள். 

♦ ஃபிரிட்ஜில் வைக்கும் பொருள்களை ஒரு சில நாள்களில் அல்லது பழங்கள் என்றால் அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். சிலர் பொருள்களை வாங்கி ஃபிரிட்ஜில் தேக்கிவைப்பார்கள். அது தவறு. 

♦ பழங்களை ஒருபோதும் வெட்டி வைக்கக்கூடாது. கழுவி விட்டு அப்படியே வைப்பது சரியானது. ஸ்ட்ராபெர்ரி, முழு தர்பூசணி, கீரை, ஆப்பிள் ஆகியவற்றை பிரிட்ஜில் வைக்க வேண்டாம். 

♦ சிலர் ரொட்டியை(பிரெட்) அப்படியே ஃபிரிட்ஜில் வைக்கிறார்கள். அது தவறு. ரொட்டியை ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது. வைக்க நேர்ந்தால், வெளிச்சம், காற்று போகாத அளவுக்கு பாலிதீன் கவரில் போட்டு வைக்கலாம். 

அவசியம் கருதி தேவையான பொருள்களை மட்டும் அவ்வப்போது வைத்து பயன்படுத்துவது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தாது. 

இதையும் படிக்க | தலைமுடி வறட்சியா? முடி கொட்டுகிறதா? சரிசெய்ய எளிய வழிகள்!

 

ADVERTISEMENT
ADVERTISEMENT