செய்திகள்

விடியோ பார்ப்பது, தட்டச்சு செய்வதைவிட 'எழுதுதல்' கற்றலை மேம்படுத்தும்!

12th Jul 2021 04:54 PM

ADVERTISEMENT

விடியோக்களைப் பார்ப்பது, தட்டச்சு செய்வதைவிட கையால் எழுதுவது கற்றல் திறன்களை மேம்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

குழந்தைகளை முதன்முதலில் கற்றலில் ஈடுபடுத்தும்போது கைகளால் எழுதும் பழக்கத்தை ஆசிரியர்கள் அதிகம் ஏற்படுத்துவர். படித்ததை ஒருமுறை எழுதிப்பார்க்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறுவதும் உண்டு. ஒருமுறைக்கு பலமுறை படித்ததை நினைவுபடுத்திஎழுதிப்பார்ப்பது மனதில் ஆழப் பதியும் என்றும் சொல்ல கேட்டிருப்போம். 

ஆசிரியர்கள் கூறும் இந்த கருத்துகள் இப்போது ஒரு ஆய்வின் மூலமாக உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விடியோக்களைப் பார்ப்பது, தட்டச்சு செய்வதைவிட கையால் எழுதுவது கற்றல் திறன்களை மேம்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

விடியோக்களைப் பார்ப்பது அல்லது தட்டச்சு செய்வதன் மூலம் ஒரு புதிய விஷ்யத்தைக் கற்றுக்கொள்வதை விட, கைகளால் எழுதுவது வியக்கத்தக்க அளவுக்கு வேகமாகவும், சிறப்பாகவும் கற்றுக்கொள்ள உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது. 

ADVERTISEMENT

'உளவியல் அறிவியல்' (Psychological Science) என்ற இதழில் ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

ஒரு திறனை கற்றுக்கொள்ளும்போது எழுதுதலில் நேரம் அதிகம் செலவானாலும் அதிலுள்ள நன்மைகள் அதிகம் இருப்பதால் அதற்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவிடலாம் என்று  ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அறிவாற்றல் அறிவியல் பேராசிரியர், மூத்த எழுத்தாளர் பிரெண்டா ராப் கூறினார்.

நீங்கள் எழுத்துப் பயிற்சி செய்தால் உங்களுடைய கையெழுத்து மேம்படும். எழுத்துப்பிழை சரியாகும். புரிதல் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். 

பிரெண்டா ராப் மற்றும் ராபர்ட் விலே இணைந்து மேற்கொண்ட ஆய்வில் 42 பேருக்கு அரபு எழுத்துக்கள் கற்பிக்கப்பட்டன. அவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டன: கைகளால் எழுதுபவர்கள், தட்டச்சு செய்பவர்கள் மற்றும் விடியோ பார்ப்பவர்கள். 

இதில் முதல் குழுவினர் கைகளால் எழுதி கற்றனர், இரண்டாம் குழுவினர் கணினியில் தட்டச்சு செய்தும் மூன்றாம் குழுவினர் விடியோகளைப் பார்த்தும் கற்றனர். 

முடிவில் கைகளால் எழுதி கற்றவர்களே மிகச்சிறப்பாக  துல்லியமாக அரபு எழுத்துகளை கற்றிருந்தனர். மேலும், அவர்கள் மற்ற இரு குழுவினரைவிட வேகமாகவும் கற்றுக்கொண்டது தெரிய வந்தது. 

எனவே, எந்தவொரு புதிய கற்றலின்போதும் குறிப்பாக குழந்தைகளுக்கு எழுதுவதில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். கற்றலில் எழுதுவதை அதிகம் புகுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். 

Tags : Children handwriting
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT