செய்திகள்

காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமா? சில யோசனைகள் இதோ!

7th Jan 2021 04:53 PM

ADVERTISEMENT

மின்னணு சாதனங்கள் மனித வாழ்வை ஆக்கிரமித்துள்ள இந்த நவீன காலத்தில் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கிறது. 

அன்றாடப் பணிகளை முடித்துவிட்டு இரவு படுக்கைக்குப் போகும்போது அதிகபட்சமாக மனதில் தோன்றுவது, நிம்மதியான தூக்கம் வேண்டும், காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்பதுதான். 

அதிலும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலை செய்வோர் எக்ஸ்பிரஸ் ரயில் போல தங்களது வாழ்க்கையையும் வேகமாக ஓட்ட வேண்டியுள்ளது. போக்குவரத்து நெரிசலில், மழையின் நடுவே, சிக்னலில் நிற்கும்போது இன்று காலை கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருக்கலாமோ என்பதுதான் நம் எண்ணங்களாக இருக்கும். எவ்வளவு முறை அலாரம் வைத்தாலும் அலாரத்தை ஆப் செய்துவிட்டு தூங்கும் பழக்கம்தான் அதிகமுள்ளது. இப்படியான சூழ்நிலையில் அதிகாலையில் எழுந்திருப்பது குறித்த சில யோசனைகள் இங்கே..

எண்ணங்களே வலிமை

ADVERTISEMENT

நம்முடைய செயல்பாட்டுக்கு எண்ணங்கள் மிகவும் முக்கியம். எனவே, அதிகாலையில் எழுந்திருக்க வேண்டுமெனில் உங்கள் மனதுடன் நீங்கள் ஒரு திடமான தீர்மானத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க உங்கள் மூளைக்கு நீங்கள் கட்டளையிட்டுவிட்டு படுக்கச் செல்லுங்கள். அலாரத்தை விட பல மடங்கு மிஞ்சியது உங்கள் மூளை. இவ்வாறு ஒரு சில நாள்கள் செய்யும்பட்சத்தில் மூளையில் சுரக்கும் மெலடோனின் ஹார்மோன் உங்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடும். 

சூரிய ஒளி

அடுத்ததாக உங்கள் படுக்கை அறையில் காலை சூரிய வெளிச்சம் படும்படி வைத்துக்கொள்ளுங்கள். அப்படியென்றால் காலையில் 6 மணிக்கு சூரிய வெளிச்சம் பட்டு நீங்கள் எழுந்திருக்க வாய்ப்பாக அமையும். வெளிச்சம் உடலில் அல்லது முகத்தில் பட்டவுடன் தூக்கம் கலைய உடல் வழிவகுக்கும். 

அலாரம் ஒலி

நல்ல தூக்கத்திலிருந்து விழித்தெழ ஒரு சத்தம் அவசியம். அதேநேரத்தில் எரிச்சலடைய வைக்கும் சத்தமாக அது இருக்கக்கூடாது. எனவே, மெல்லிய அலார ஒலியைப் பயன்படுத்துங்கள். உங்கள் தூக்கம் உடனடியாக கலையக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக கலைய வேண்டும். எனவே, மெல்லிய ஒலியை உபயோகியுங்கள். 

நீங்கள் ரிங்க்டோனை மாற்றினாலும் அலாரம் ஒலியை மாற்ற வேண்டாம். ஏனென்றால் உங்கள் மூளையை ஒரே ஒலிக்கு பழக்கப்படுத்துவது நல்லது. 

எழும் நேரம்

தினமும் ஒரே நேரத்தில் எழுந்திருப்பதை வழக்கமாகிக் கொள்ளுங்கள். ஓரிரு வாரங்கள் இதனை சரியாக பின்பற்றினால் உங்களுக்கு அதன்பின்னர் அலாரம் ஒலியே தேவைப்படாது. அதிலும் 5 அல்லது 6 மணி நேரம் என்றால் இதனை எளிதாக நீங்கள் பின்பற்றிவிடலாம். 

தூங்கும் நேரம்

காலையில் சீக்கிரம் எழுவதற்கு இரவில் சீக்கிரம் தூங்க வேண்டும். மனித உடலுக்கு குறைந்தது 6 மணி நேரம் தூக்கம் அவசியம். காலையில் 6 மணிக்கு எழ வேண்டுமெனில் இரவு 10-11 மணிக்குள் தூங்கிவிட வேண்டும். 

இரவில் ஆழ்ந்த தூக்கம் இருந்தால் மட்டுமே காலையில் சீக்கிரம் எழ முடியும். எனவே, தூக்கத்தை தொந்தரவு செய்யும் காரணிகளை விட்டுவிடுங்கள். உதாரணமாக சிலருக்கு பசியுடன் படுத்தால், சிலருக்கு மின்விசிறி இல்லையென்றால், சிலருக்கு அறை வெளிச்சமாக இருந்தால் தூக்கம் வராது. எனவே, உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டு படுக்கச் செல்லுங்கள். 

தூங்கும் சூழல்

அறை வெப்பநிலையை உறுதி செய்துகொள்ளுங்கள். இரவில் தூங்கும்போது உங்கள் உடல் தாங்குமளவுக்கு வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

இரவு உணவு

காலை, மதிய உணவில் நீங்கள் என்ன சாப்பிட்டிருந்தாலும் இரவு உணவு எளிதில் செரிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். பகலில் உடல் அசைவு அதிகமாக இருப்பதால் உணவு எளிதில் செரித்துவிடும். ஆனால் இரவில் உடல் படுக்கை நிலையில் இருப்பதால் எளிதான செரிமானம் கொண்ட உணவுகளை சாப்பிட்டு தூங்கச் செல்வது நல்லது. 

அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் மேற்குறிப்பிட்ட இந்த யோசனைகளை முயற்சித்துப் பார்க்கலாமே..

Tags : lifestyle
ADVERTISEMENT
ADVERTISEMENT