செய்திகள்

கரோனாவுக்கு மத்தியில் புத்தாண்டை கொண்டாடுவதற்கு சில யோசனைகள்!

DIN

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளைக் காட்டிலும் நாடு முழுவதுமுள்ள முக்கிய நகரங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுவது புத்தாண்டு. தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் குறிப்பாக டிசம்பர் 31 இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை கொண்டாட்டத்திற்கு அளவேயிருக்காது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடி புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வர். 

ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு ஆர்ப்பாட்டம், ஆடம்பரமில்லாமல் மிகவும் அமைதியான முறையில் இந்த புத்தாண்டு கொண்டாடப்பட இருக்கிறது. ஆம், உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல மாநில அரசுகள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. 

தமிழகம், கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பண்டிகைகள் பெரும்பாலாக குடும்பத்தினருடன் கொண்டாடப்படும் சூழ்நிலையில் புத்தாண்டு என்றாலே நண்பர்கள்தான். 

ஆடல், பாடல், விளையாட்டு, போட்டிகள், கேக், இனிப்பு வகைகள் என கொண்டாட்டம் பலவகை. எவ்வாறாயினும், தொற்றுநோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள இந்த ஆண்டு பாதுகாப்பான கொண்டாட்டமாக இருக்க வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதே நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழியாகும். 

இம்மாதிரியான சூழ்நிலையில் புத்தாண்டை எப்படி கொண்டாடுவது என்பது குறித்த சில யோசனைகள் இங்கே...

அண்டை வீட்டாருடன்

தனியார் விடுதிகள், கடற்கரைகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் வீட்டிலேயே தங்கள் குடும்பத்தினருடன், அண்டை வீட்டாருடன் புத்தாண்டை கொண்டாடுங்கள். தங்கள் குடியிருப்பிலோ அல்லது தெருவிலோ உள்ள குடும்பங்கள் சேர்ந்து இனிப்புகளுடன் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ளலாம். கடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து உரையாடலாம். இது அண்டை வீட்டாருடன் உங்களுக்கு ஒரு நல்ல நட்புறவை ஏற்படுத்தும். 

நண்பர்களுடன் 

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நண்பர்களும் இடம்பெற வேண்டுமென்றால், உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் நண்பர் வீட்டிலோ அனைவரும் சேர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடலாம். வீட்டின் பால்கனியில் ஒரு தற்காலிக செட் போன்று அமைத்து அலங்கரித்து அவ்விடத்தில் கேக் வெட்டி, இனிப்புகள் பரிமாறி புத்தாண்டை வரவேற்கலாம். மேலும், ஆடல், பாடல், சிறிய இசை நிகழ்ச்சிக்கும் கூட ஏற்பாடு செய்யலாம். 

விடியோ அழைப்பு

கரோனா பொதுமுடக்க காலத்தில் தங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுடன் தொடர்புகொள்ள தொழில்நுட்ப கருவிகளே உதவின. அந்தவகையில் குடும்பத்தினர், நண்பர்களை விட்டு வெளியூரில், வெளிநாட்டில் தனியாக இருப்பவர்கள் இரவு 12 மணிக்கு தங்களுக்கு வேண்டியவர்களை குரூப் விடியோ காலில் அழைத்து தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வது உணர்வுபூர்வமாக இருக்கும். 

திரைப்படங்கள், விளையாட்டு

புத்தாண்டு தினத்தன்று வெளியில் எங்கும் செல்ல முடியாத சூழ்நிலையில் தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் வீட்டிலேயே திரைப்படங்களை கண்டுகளிக்கலாம். பிடித்த விளையாட்டுகளை விளையாடலாம், அனைவரும் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். நண்பர்கள் குடும்பத்தினரையும் வீட்டிற்கு அழைத்து அனைவரும் சேர்ந்து மறக்கமுடியாத தருணத்தை ஏற்படுத்தலாம். 

பரிசுகள்

எந்த ஒரு சிறப்பு நிகழ்வாக இருந்தாலும் மனதுக்கு பிடித்த பரிசுகள் நெகிழ்வை ஏற்படுத்தும், உணர்ச்சிகரமானதாக இருக்கும். அந்தவகையில் சந்திக்க முடியாத உங்களுடைய அன்பானவர்களுக்கு அவர்களுக்கு பிடித்த பரிசுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து 'சர்ப்ரைஸ்' கொடுங்கள். 

பாதிக்கப்பட்டோருக்கு உதவுங்கள்

2020 அனைத்துவிதங்களிலும் ஒரு சவாலான ஆண்டாக இருந்து வருகிறது. தொற்றுநோய்க்குப் பின்னர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த பலர் உள்ளனர், அதேபோன்று வாழ்வாதாரத்தை இழந்த பலர் உள்ளனர். 

'ஏழையின் சிரிப்பில்' இறைவனைக் காணுங்கள் என்று கூறுவார்கள். கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை, வேலையை இழந்தோருக்கு பொருளுதவி, பணஉதவி செய்யுங்கள். நல்ல உணவு கூட கிடைக்காதோருக்கு ஒரு வேளை உணவளியுங்கள். அவரகளது நன்றி உங்கள் வாழ்வின் இறுதி வரை பயணிக்கும். 

புத்தாண்டு கொண்டாட்டம் எங்கிருந்தாலும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாடுங்கள். கொண்டாட்டத்தைவிட பாதுகாப்பு மிகவும் அவசியம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT