செய்திகள்

குளிர்காலத்தில் சருமத்தைப் பாதுகாக்கும் 5 எளிய வழிகள்!

7th Dec 2020 11:19 AM

ADVERTISEMENT

குளிர்காலத்தில் பெண்கள் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்னை சருமம் வறண்டு போதல். வழக்கமாக குளிர்காலத்தில் உள்ள அதிக பனியாலும்,  தண்ணீர் குடிப்பது குறைவதாலும் சருமம் வறண்டு போகிறது. 

சருமத்தைப் பராமரிக்க வீட்டில் உள்ள பொருள்களை கொண்டு பேக் போட்டு கொள்ளலாம். ஆனால், எந்த சருமத்துக்கென மெனக்கெடாமல் நீங்கள் அன்றாடம் செய்யும் சில செயல்களை சற்று கூடுதல் கவனத்துடன் செய்தாலே போதுமானது. 

► அந்த வகையில் முதலாவது தண்ணீர் குடிப்பது. தினமும் நாம் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறோம். குளிர்காலத்தில் தாகம் எடுக்காததால் நாம் குறைவான அளவே தண்ணீர் அருந்துகிறோம். எனவே மொபைல் போனில் கூட ரீமைண்டர் வைத்துக்கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யுங்கள். 

► அதன்பின் திரவ வடிவில் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்களை அப்படியே சாப்பிடாமல் அதனை பழச்சாறாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் உடல் நீரேற்றம் பெறும். இது சருமத்தை வறண்டு போகாமல் பாதுகாக்கும். 

ADVERTISEMENT

► நொறுக்குத் தீனிகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகளை முடிந்தவரை தவிர்த்திடுங்கள். 

► முடிந்தால் காலையில் வீட்டில் இருந்தோ அல்லது வெளியிலோ லேசான உடற்பயிற்சிகளை செய்யுங்கள் அல்லது நேரம் கிடைக்கும்போது அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் சருமத்திற்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை பெற உதவுகிறது. 

► சர்க்கரை அதிகமுள்ள பொருள்களை எடுத்துக்கொள்வதை தவிருங்கள். டீ, காபி குடிப்பதை குறைத்துக்கொண்டு, பிளாக் டீ, க்ரீன் டீ அல்லது இஞ்சி, ஏலக்காய் சேர்த்த டீயை குடிக்கலாம். சர்க்கரையை அளவாக எடுத்துக்கொள்ளும்போது உடல் எடை குறைந்து முகம் பொலிவு பெறும். சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை, வெல்லம் பயன்படுத்துவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

► சருமத்தை பராமரிக்கக் கூடிய ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை, அன்னாசி, காலிப்ளவர், ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட வைட்டமின் சி உணவு வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். 

Tags : skin care
ADVERTISEMENT
ADVERTISEMENT