தற்போதைய செய்திகள்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

10th Jun 2021 01:31 PM

ADVERTISEMENT


சென்னை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகநூல், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், சுட்டுரை போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐ  கொண்டு வந்தது. இதற்கு சுட்டுரை நிறுவனம் சில ஆட்சேபங்களை தெரிவித்துள்ளது.

இதற்கு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சட்டஒழுங்கு, தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பும் தங்களுக்கு இருப்பதாக தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த விதிகளை எதிர்த்து, பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம்.கிருஷ்ணா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் மனுவில், இந்த புதிய விதிகள் தனது உரிமைகளை பறிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய அரசு 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை  4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT