தற்போதைய செய்திகள்

கேலி, கிண்டல்களை கடந்து போலீஸ் அதிகாரியான திருவண்ணாமலையைச் சேர்ந்த திருநங்கை சிவன்யா!

30th Jul 2021 12:54 PM

ADVERTISEMENT


திருவண்ணாமலை:  கேலி, கிண்டல்களை புறக்கணித்து திருவண்ணாமலையைச் சேர்ந்த திருநங்கை சிவன்யா,  சட்டம் ஒழுங்கு பிரிவில் காவல் துணை ஆய்வாளராக (எஸ்ஐ) நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை நிறைவேற்றியுள்ளார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 27 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 968 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதில், திருவண்ணாமலை மாவட்டம் பாவுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை எஸ்.சிவன்யா(30), தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு பின்னர் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவல் துணை ஆய்வாளராக (எஸ்ஐ) நியமிக்கப்பட்டார். இதற்கான பணி நியமன உத்தரவை கடந்த 27 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க..ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து சிவன்யா கூறியாதாவது: காவல் துணை ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் எனது சந்தோஷத்திற்கு எல்லை இல்லை, இதன் மூலம் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. அதுவும் முதல்வரின் கையால் பணி நியமன ஆணையை பெற்றது கூடுதல் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது.

ADVERTISEMENT

மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்துத் தேர்வுக்காக என் மீது வீசப்பட்ட கேலி, கிண்டல்களை எல்லாம் பொருட்படுத்தாமல், போட்டித் தேர்வுக்கான தயாரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தியதால், இறுதியில் நான் கண்ட கனவை நிறைவேற்ற முடிந்தது. 

கரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கத்தால் "உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு காலதாமதம் ஏற்பட்டது வேதனையான இருந்தாலும்,  நான் அமைதியை இழக்கவில்லை."

மேலும் எனது காவல்துறை அதிகாரி கனவு நிறைவேற்றப்பட்டிருந்தாலும் தற்போதைய காவல் துணை ஆய்வாளர் பணியைவிட காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று கூறும் சிவன்யா, அதற்காக தொடர்ந்து குரூப்-1 தேர்வுக்கு தயாராகி வருகிறேன். நிச்சயம் பெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

மேலும் எனது வெற்றிக்கு குடும்பத்தினர் அனைவரின் ஆதரவே காரணம். என் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் என்னை தொடர்ந்து  ஊக்கப்படுத்தி ஆதரித்ததன் மூலம் இந்த வெற்றியை என்னால் பெற முடிந்தது.

அரசு வேலைக்குச் செல்ல விரும்பும் திருநங்கைகளுக்கு ஒரு முன்மாதிரியாக, தமிழ்நாட்டின் முதல் திருநங்கை காவல் துணை ஆய்வாளர் பிரித்திகா யாஷினி முன்மாதிரியாக இருந்து வருகிறார். 

"காவல்துறை பணியில் அவர் பெற்ற வெற்றி, லட்சியத்தை அடைவதில் எங்களுக்கு இருந்த அனைத்து முரண்பாடுகளையும், எதிர்த்துப் போராடுவதற்கான தைரியத்தை அளித்ததாக " சிவன்யா கூறினார்.

பெண்கள் கல்வியறிவு பெற்றுவிட்டால் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் மதிக்கத்தக்கவர்களாகவும், ஒரு கெளரவமான வேலைக்குச் சென்றுவிட்டால் குடும்பம் மற்றும் சமூகத்தை சிறப்பாக வழிநடத்த முடியும் என்றார். 

சிவன்யா திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் தன்னார்வலராக பணியாற்றி வந்தவர், காவலர் தேர்வுக்காக அந்த பணியை விட்டுவிட்டு, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து விடாமுயற்சியுடன் தேர்வுக்குத் தயாராகி வெற்றி பெற்றவர். 

அவரது மூத்த சகோதரர் ஸ்டாலின் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறார், இளைய சகோதரர் தமிழ்நிதி காவலராக பணியாற்றி வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 வயதான திருநங்கை  சிவன்யா, தான் எதிர்கொண்ட பிரச்னைகள், கேலி, கிண்டல்களை புறக்கணித்து காவல்துறையில் காவல் துணை ஆய்வாளராக பணியில் சேர்ந்து திருநங்கைகளுக்கு முன்மாதிரியாக உள்ளார். 
 

Tags : tiruvannamalai transwoman fulfils long-cherished dream police SI
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT