தற்போதைய செய்திகள்

ஏரி முழுவதும் தூர்வாரக் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே குடிமராமத்து பணி மூலம் ஏரியின் உள்பகுதியில் நீர் தேங்கும் வகையில் தூர்வார வேண்டும் எனக் கோரி பொதுப்பணித் துறை அதிகாரிகளைப் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2017 முதல் கடந்தாண்டு வரையில் 124 ஏரிகளில் ரூ. 2912.40 கோடியில் குடிமராமத்து பணிகள் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நிகழாண்டில் 16 ஆயிரம் ஹெக்டேர் பாசன வசதி பெறும் வகையில் ரூ. 3259.34 கோடியில் விவசாய சங்கங்கள் மூலம் 80 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் திருவள்ளூர் அருகே சேலை கிராமத்தில் பொதுப்பணித்துறை ஏரியில் ரூ. 68 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகளுக்கான பூமிபூஜை ஊராட்சித் தலைவர் கோவர்த்தனம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பொதுப்பணித்துறை கண்காணிப்பாளர் பொறியாளர் முத்தையா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கொற்றலையாறு) திலகம், உதவி செயற்பொறியாளர் ரமேஷ், விவசாய சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்று பொக்லைன் வாகனம் மூலம் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து ஏகாட்டூர் ஏரியில் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைக்கச் சென்றனர். அப்போது, கிராம பொதுமக்களிடமும், விவசாய சங்கங்களிடமும் குடிமராமத்து பணிகள் மூலம் கரை பலப்படுத்துதல், கழுங்கு சீரமைத்தல் ஆகிய பணிகள் மட்டும் ரூ. 58.25 லட்சத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
அப்போது, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்தான் கரை பலப்படுத்தப்பட்டது. அதேபோல் மீண்டும் அதே பணிகள் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அப்போது, பொதுப்பணித்துறையால் ஏலம் விடப்பட்டுதான் சவுடு மண் அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்டது. அப்போது, ஏலம் எடுத்தோர் விதிமுறை கடைப்பிடிக்காமல் 20 அடிக்கும் மேலாக மண் எடுத்தனர். இதனால் வரத்துக் கால்வாய்களும் அனைத்தும் மேடாகி காணப்படுகிறது. அதேபோல், ஏரி உள்பகுதியில் பெரும் பள்ளங்களாகவும், சீமைக்கருவேல மரங்களாகவும் உள்ளது. அதனால், ஏரிக்கான வரத்துக் கால்வாய், உள்பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி முழுமையான அளவு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
   அப்போது, அதிகாரிகள் முதல்கட்டமாக ஏரியில் கரை பலப்படுத்துவதற்கும், கழுங்குகளை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற பணிகள் மேற்கொள்வதற்கு கிராமத்தில் விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகளை ஏரியில் இருந்து பொதுமக்கள் செல்ல அனுமதித்தனர். குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்த அதிகாரிகளை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT